ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2023

சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்…!

நாம் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம்…! எத்தனையோ வேதனைகள்; எத்தனையோ வெறுப்புகள்; எத்தனையோ சங்கடங்கள்; இதைப் போன்ற உணர்வுகளை அறியாமலே நமக்குள் நாம் பதியச் செய்து விடுகின்றோம்.

இது இரத்தத்தில் கலந்து அணுக்களாக விளைகிறது. விளைந்த அணுக்கள் அதனதன் உணர்வுகளைக் காற்றிலிருந்து பிரித்து உணவாக எடுத்து உடலிலே வளரத் தொடங்குகின்றது.

சூரியன் கவர்ந்து வைத்திருக்கக்கூடிய செடி கொடிகளின் சத்துக்கள் பூமியின் காற்று மண்டலத்தில் படரப்படும் போது அதே இனமான அந்த உணர்வைக் கவரக்கூடிய செடி கொடிகளின் வித்துகள் அதனதன் சத்தைக் கவர்ந்து கொள்வது போன்று
1.எந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுத்து வினையாக (அணுக்களாக) உருவானதோ
2.அதனதன் உணர்வை எடுத்து நம்மை அதன் வழிக்கு இயக்கி விடுகின்றது.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்பாகும் உணர்வலைகளை நாம் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதே அலைவரிசையில் டிவியை இயக்கினால் அதைக் கவர்ந்து காட்சியாகவும் இசையாகவும் காட்டுகின்றது.

அதைப் போன்று தான்
1.திட்டியவனை எண்ணிய உடனே நமக்குள் அந்த வேகமும் துடிப்பும் கொண்டு கோபம் வருகின்றது
2.வீட்டிலே குழந்தைகளாக இருந்தாலும் கோபமாகப் பேசி விடுகின்றோம்.
3.அந்தக் கோபத்தினால் நம் வியாபாரத்தையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.

ஆக… பதிவான உணர்வுகள் நம்மை மீண்டும் இவ்வாறு இயக்குகின்றது… நம்மை அறியாமலே பல தீங்குகளைச் செய்யச் செய்கின்றது.

“சந்தர்ப்பம் தான் இது எல்லாம்…!”

எதன் வலு அதிகமாகின்றதோ நாம் சோர்வடையப்படும் பொழுது நம் சிந்தனைகள் மாறுகின்றது. விஷம் என்ற நிலை வரும் போது நல்லதுக்காக ஏங்கும் பொழுது நமக்கு இன்னும் கோபம் வருகிறது.

அந்தக் கோபத்தால் சிந்தனை இழந்து… தன்னையோ அல்லது மற்றதையோ அழித்திடும் உணர்வே வருகின்றது. ஏனென்றால் அதிக வேதனையாகும் பொழுது முழுமையாக நினைவிழந்து விடுகின்றோம்

நாம் தவறு செய்தோமா…? எல்லாமே சந்தர்ப்பம் தான்… சந்தர்ப்பத்தால் தான் இன்று இயக்கப்பட்டு வருகின்றோம்…!.

ஆனால் நல்ல சந்தர்ப்பத்தை மனிதனால் (நம்மால்) ஏற்படுத்த முடியும் எப்படி…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக இருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நமக்குள் நாம் உருவாக்க முடியும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க முடியும்

சூரியனின் இயக்கங்கள் அது எதை எதைக் கவர்கின்றதோ சந்தர்ப்பத்தால் மோதும் பொழுது மரம் செடி கொடிகள் (இனங்கள்) மாறுகின்றது.

காட்டிலே ஒரு முயல் நரியைச் சந்திக்க நேர்ந்தால் அதனின் சந்தர்ப்பம் அது அதற்கு இரையாகிறது. ஆனாலும் முயல் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நரியின் வலுவான உணர்வை எடுக்கின்றது.

இருந்தாலும் நரி முயலை அடித்துக் கொல்கிறது உடலை விட்டுப் பிரிந்த பின் முயலின் ஆன்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியின் உருவமாக மாறுகின்றது.

முயலாக இருப்பது அடுத்து நரியாக மாறுவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…!”

இன்று நாம் ஒரு தீமையைச் சந்திக்க நேரும்போது அதை நுகர்ந்துவிடுகிறோம். நமக்குள் தீய வினையாக அது உருவாகிவிடுகின்றது… ஆக தீய வினைகளாக உருவாவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…”

சந்தர்ப்பத்தால் நாம் பல நல்லதுகளைச் செய்தாலும் தீமையின் வலுவைச் சுவாசிக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்லவைகள் மறைகின்றது… உடலில் நோய்கள் வருகின்றது.
1.இப்படி மாறக்கூடிய “இந்தச் சந்தர்ப்பத்தை” நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…?
2.நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

காலையில் நம் உடல் அழுக்கைப் போக்கித் துணியில் உள்ள அழுக்கைப் போக்கினாலும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வுகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி… நம் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க வேண்டும்..

பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து மனிதனாக உருவாக்கியது ஆதிமூலம் என்ற நம் உயிர்தான்…! இந்தப் பிள்ளை யார் நீ சிந்தித்துப் பார் என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்வதற்குத் தான் ஆற்றங்கரையோரம் எல்லாம் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

காரணம்… இயற்கையின் பேருண்மைகளை அறிந்தவன் அன்றைய அகஸ்தியன். அகண்ட அண்டத்தையும் அவன் அறிந்தான்… நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்.. நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டான்…
1.தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுத்தான்.
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தான்
3.இரு உயிரும் ஒன்றாக ஆனது… இரு உணர்வும் ஒன்றாக ஆனது
4.துருவத்தை எல்லையாக வைத்து அதில் வரக்கூடிய நஞ்சினைக் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

இப்படி ஆதியிலே தோன்றிய (நம்மைப் போன்ற மனிதனான) அந்த அகஸ்தியன் விண் சென்றபின் அதே (தன்) மனித இனத்திற்கு அவன் பெற்ற வழியைப் பெறுவதற்காக… விநாயகர் தத்துவம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டி
1.இந்த வாழ்க்கையில் நாம் எதைப் பெற வேண்டும்… எந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்…? என்று
2.விநாயகரைப் பார்க்கும் போதெல்லாம் அதை எண்ணி எடுக்கும்படி செய்தான்.

சந்தர்ப்பத்தால் தான் அகஸ்தியன் உயர்ந்த சக்திகளை எடுத்தான்.. ஒளி உடலைப் பெற்றான். அதைப் போன்று தான்
1.இப்பொழுது உங்களுடைய சந்தர்ப்பம் உயர்ந்த கருத்துக்களைக் கேட்கின்றீர்கள்.
2.இந்த உபதேசத்தைப் படிப்பது “இதுவும் சந்தர்ப்பம்தான்…!”

இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திப்பது… குடும்பமாக இருந்தாலும் சரி வியாபாரமாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி மத இனங்களாக இருந்தாலும் சரி அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் சரி… அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நம்மை அறியாமலே எத்தனையோ வழிகளில் பகைமை வந்து சேர்கின்றது.

ஆனால் நம்முடைய இந்தச் சந்தர்ப்பம்…
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை நுகர்ந்து நம்மை அறியாமல் இயக்கக்கூடிய இருளை அகற்றுவது தான்
2.இது சிறுகச் சிறுக நமக்குள் முழுமையாகப்படும் பொழுது மகரிஷிகள் உணர்வினை நமக்குள் உருவாக்கும் சந்தர்ப்பமாக மாறுகிறது.
3.இப்படி உருவாக்கி விட்டால் தீமையை நீக்கும் சக்தியை நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் நாம் பெறப்படும் பொழுது… எந்த நேரத்தில் எத்தகைய தீமை வந்தாலும் வலிமை கொண்டு அதை மாற்றி பிறவி இல்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம்.

நாம் உருவாக்கும் நல்ல சந்தர்ப்பங்கள்… அகஸ்தியன் எங்கே சென்றானோ… நிச்சயம் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

ஆனால் எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லை கொடுத்தான்… அவன் உருப்படுவானா…! என்ற பகைமையான உணர்வை எடுத்தால் அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல வேண்டி வரும்.

எந்தப் பக்தியால் தெய்வத்தை வணங்கினோமோ உடலை விட்டுச் சென்ற பின் மந்திரங்களைச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு அடிமையாகி விடுகின்றோம்.

காலத்தால் ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இப்படித் தான் மாறிவிட்டது. ஆகையினால்
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வைப் பதிவாக்குவதும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிர் வழி சுவாசித்து… எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று… கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வந்து அதன் வழி ஈர்த்து உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதை கலக்கச் செய்யப்படும் பொழுது எல்லா அணுக்களிலும் இந்த வலுப்பெறுகின்றது.

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்த எத்தனையோ விதமான தீமையான உணர்வுகளை உடலுக்குள் விளையாதபடி தடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் நிலைநிறுத்தி
2.வரும் தீமைகளை அனாதையாக்க முடியும்.