ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2023

“நம்முடைய இச்சை” எதுவாக இருக்க வேண்டும்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்த அரும் பெரும் சக்தியை… என்னை எப்படி அதைப் பெறச் செய்தாரோ நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும். அவர் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்பதை நீங்கள் சிந்தனை செய்து அந்த தவறு செய்யும் உணர்ச்சிகளைத் தடுக்கப் பழக வேண்டும்.

அதற்கு வேண்டிய கடும் ஆயுதமாகத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆயுதமாகப் பயன்படுத்தும் போது… தவறென்ற உணர்வு உங்களுக்குள் வராதபடி… உங்கள் உடலுக்குள் தீமையை விடாதபடி தடுக்கும். அது தான் கார்த்திகேயா…!

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நம் ஆறாவது அறிவால் தான் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்து கொண்டாலும் அந்த வேதனை உடலுக்குள் புகாதபடி தடுக்கும் சக்தியாக… நம் ஆறாவது அறிவை சேனாதிபதியாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்படுதல் வேண்டும். அதை நுகர்ந்தால் நமக்குள் கிரியை ஆகின்றது. கிரியை ஆகும் போது “தீமையை நீக்கும் அந்த ஞான சக்தியாக” வருகின்றது.

முதலில் சொன்ன மாதிரி நண்பன் என்ற நிலையில் ஒருவர் மீது பாசமாக இருக்கின்றீர்கள். நோயுடன் வேதனைப்படுகின்றான் என்று உற்றுப் பார்க்கின்றீர்கள்.

அதை இச்சைப்பட்டுக் கேட்டறியப்படும் போது உங்களுக்குள் கிரியையானால் அந்த வேதனை உணர்வு தான் ஞானமாக உங்களை இயக்கும். அந்த நண்பருடன் சேர்ந்து நீங்களும் வேதனையில் தான் உழல முடியும்.

நோயால் வேதனைப்படுகின்றான் என்று தெரிந்து கொண்டாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று “அதை இச்சைப்பட வேண்டும்…” உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்..

அடுத்து அந்த நண்பன் உடலில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்படுங்கள்… அவன் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.

இப்படி இச்சைப்படும் போது அந்த அருள் சக்தி இங்கே கிரியை ஆகின்றது. தீமை நீக்கும் உணர்வு உங்களுக்குள் வலிமை ஆகின்றது.

அதற்குப் பின் அவன் செவிகளில் படும் படியாக… நீ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற இச்சைப்படு. அவ்வாறு நீ இச்சைப்பட்டால் அது உன் தீமைகளை நீக்கும்… நீ நன்மை பெறுவாய்…! என்று சொல்லிப் பழக வேண்டும்.

இது எல்லாமே நம் புராணங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

மனிதனாக ஆனபின் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட கார்த்திகேயா என்று நம் உணர்வுகளை ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வானால் உயிர் எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது… உணர்வுகள் ஒன்றாகின்றது தெளிவாகின்றது… பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது.

காரணம்… நாம் இந்த உடலில் “நீடித்த காலம் இருப்போம்…” என்று எண்ண வேண்டாம் முழுமையான நிலையில் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தாலும் உலகில் விஷத்தன்மை இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எடுத்து வலு சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கே உபதேசிக்கும் அருள் ஞானக் கருத்துக்களை திரும்பத் திரும்பப் படித்து உங்களுக்குள் பதிவாக்குங்கள்.

ஜாதகமோ ஜோதிடமோ வாஸ்து சாஸ்திரமோ மற்ற நியூமராலஜியோ “நமக்கு எல்லாம் செய்யும்” என்று அதை நம்பிக் கொண்டு… நேரத்தையும் காலத்தையும் வீணாக்காதபடி… காலத்தால் வரும் தீமைகளை அகற்றும் அருள் ஞான சக்தி நமக்கு உண்டு என்று “உங்களை நம்பிப் பழகுங்கள்…”

அத்தகைய அருள் சக்தி தான் இப்பொழுது உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது. அதைப் பெருக்கி வாழ்க்கையிலே பேரின்பம் பெறுங்கள்… ஏகாந்த நிலை என்ற பகைமயற்ற உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதை உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.