ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 23, 2022

ஊழ் வினை என்ற மூல வித்தை மாற்ற வேண்டியதன் அவசியம்

சந்தர்ப்பத்தால் எந்தத் தீய உணர்வுகள் நம் உடலில் உள்ள எலும்புகளில் வித்தாகப் பதிவானதோ
1.அந்த வித்தைச் சுற்றிலும்
2.அடுத்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யப்படும் போது
3.அதைச் சுற்றி செல்கள் உருவாகும்.

இதனுடைய வலிமை அதிகமானால் அந்த வேதனை என்ற நிலைகள் தணிந்துவிடும். நாம் எப்படி ஆத்ம சுத்தி செய்து மற்ற உணர்வுகளை மாற்றுகின்றோமோ அதைப் போன்று தான்
1.உங்கள் உடலுக்குள் எலும்பில் உள்ள ஊனுக்குள் விளைந்த தீமையான உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
2.ஞானிகள் கண்ட உண்மைகள் இது...!

அவர்கள் காட்டிய வழியில் நாம் ஊனுக்குள் மாற்றி அமைத்தால் அந்தத் தீமையை நுகரும் உணர்வுகள் அழிக்கப்படுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர தீமையை நீக்கும் அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி... ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது நல்ல அணுக்களாக மாறி... நமக்குள் சிந்திக்கும் ஆற்றலும்... உடலுக்குள் இருக்கும் உறுப்புகளைத் தெளிவாக்கும் நிலையும் ஏற்படுகின்றது.

நம் வாழ்நாளில் இதற்கு முன்னாடி நாம் அறியாது சேர்த்த நோய்களை மருந்துகளைக் கொடுத்து நீக்கினாலும் மீண்டும் ஊனுக்குள் பதிவான வித்து (முந்தைய பதிவுகள்) முளைத்துக் கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் கடுமையான நோய்கள் வந்திருந்தால் அதைக் கட்டுப்படுத்த அதற்கு வேண்டிய பத்தியங்களையும் டாக்டர்கள் (கட்டுப்பாடுகள்) சொல்வார்கள்.

இந்த பத்தியங்களை நாம் கடைப்பிடிக்க முற்படும் போது என்ன நடக்கிறது...?

உதாரணமாக... சர்க்கரைச் சத்து வந்து விட்டால் அது (இனிப்பு) இல்லாதபடி உணவையோ மற்றவைகளையோ உட்கொள்ளும் பொழுது அந்தக் கசப்பு வருகிறது... அதனால் வேதனை வருகிறது.
அடிக்கடி வேதனைகளைச் சேர்க்கப்படும் பொழுது
1.கட்டுப்பாடாக இருந்து சர்க்கரைச் சத்தை மறைத்து விடலாம்
2.ஆனால் இரத்தத்தில் கசப்பின் உணர்வு புது விதமாக மாறும்.

இருந்தாலும் ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று ஆசைகள் தூண்டும். ஒரு ஜிலேபியைப் பார்த்தால் “என்னால் சாப்பிட முடியவில்லையே...!” என்று வேதனை வருகின்றது. மற்றொருவர் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்த்தால் நம்மால் சாப்பிட முடியவில்லையே என்ற வேதனை வருகிறது.

உடலில் உள்ள சர்க்கரைச் சத்தை நீக்கிவிடலாம். ஆனால் “ருசியாகச் சாப்பிட முடியவில்லையே..” என்ற வேதனையான உணர்வின் தன்மை உமிழ் நீராக மாறி விஷத்தின் தன்மையாக நம் உடலுக்குள் கலக்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் நம்முடைய வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய செயல் நாளைய சரீரம்...!

ஆக... பகைமை கொண்ட உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ சந்திக்க நேரும் பொழுது நாம் அவைகளை மாற்றத் தவறினால்
1.எத்தனையோ சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக வந்திருந்தாலும்
2.நான் நுகர்ந்த தீமைகள் இரத்தத்தில் இந்திரலோகமாகி
3.அணுவின் தன்மையாக பிரம்மலோகமாக மாறும் பொழுது
4.நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தின்று விடுகின்றது
5.நல்ல அணுக்களுக்குச் செல்லும் ஆகாரத்தைத் தடைப்படுத்தி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய இரத்தத்தில் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

விஞ்ஞான முறைப்படி இரத்தத்தைப் பரிசீலித்துப் பார்த்தால் சோகையாக இருக்கின்றது (ஹீமோகுளோபின் குறைவு)... சர்க்கரை சத்து இருக்கின்றது... உப்புச் சத்து இருக்கின்றது என்றெல்லாம் கண்டறிந்து சொல்வார்கள்.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்த்த்தில் கலந்த பின் அந்தக் கலவையில் இப்படிப் பிரித்துவிடுகின்றது.

உதாரணமாக... உப்புச்சத்து அதிகமாகி அந்த இரத்தம் நுரையீரலுக்குள் சென்றால்
1.வேர்வையாகி... உப்பு கசிவது போன்று போகும் பக்கமெல்லாம் கசிவாகிறது
2அதனால் உடலில் நீர் அதிகமாகி உடலெல்லாம் “உப்ப ஆரம்பிக்கின்றது...”
3.நல்ல அணுக்களும் உப்புச் சத்தினால் கெட்டுப் போகின்றது
4.கிட்னியும் பலவீனம் அடைந்து விடுகின்றது.

இது எல்லாம் யார் தவறு செய்தது...?

சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்தத்தில் கலந்த பின் நல்ல அணுக்கள் இவ்வாறு மடியத் தொடங்கி விடுகின்றது. இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதற்குத் தக்க டாக்டர்கள் மருந்துகளைக் கொடுத்தாலும் ஊனுக்குள் இருக்கும் மூல வித்தை அவர்களால் மாற்ற முடிவதில்லை.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் ஊனுக்குள் பாய்ச்சி ஒளியான வித்துகளாக மாற்றுவோம்.

எனக்கு (ஞானகுரு) எப்படி அந்த அருளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினாரோ... அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தாரோ... அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்.

உயர்ந்த சக்திகளைப் பெற உங்களுக்கு “அந்த நினைவு தான் வேண்டும்...”

தீமை என்று தெரிந்து கொண்டாலே...
1.அடுத்த கணம் ஈஸ்வரா...! என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிரிலே வலுவாக்கினால்
4.எத்தகைய வேதனையும் உள் புகாது தடுத்து விடுகின்றது.