வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நமக்கு உடனடியாக மயக்கம் வருகின்றது. வேதனை என்றாலே அது விஷம் தான். ஏனென்றால் விஷம் உடனடியாக எதிலேயும் வேலை செய்யும்.
ஆனால் வேதனை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த மயக்கத்தை மாற்றிட முடியும்.
1.விஷத்தை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்க்கப்படும் பொழுது சிறிதளவு நம் மனதிற்குள் கொஞ்சம் மகிழ்ச்சியை ஊட்டும்.
“இந்த மகிழ்ச்சியைக் கூட்டிக் கொள்ள...” ஒவ்வொரு நொடியிலும் வரும் சங்கடங்களோ வேதனைகளோ வந்தால் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்யுங்கள். உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் அதைப் பாய்ச்சுங்கள்.
கண்ணால் பார்க்கப்படும் பொழுது வேதனைக்குண்டான உணர்வுகளைக் கவர்ந்து கண் காட்டினாலும்... “கண்ணுக்குள் இருக்கும் கருமணியில்”
1.விஷத்தன்மை படர்ந்து விட்டால் கண் பார்வை குறைவதும்
2.விஷத்தன்மை அதிகரித்தால் சிந்தனை குறைவதும்
3.விஷத்தன்மை அதிகரித்தால் நரம்பு மண்டலங்கள் பலவீனம் அடைவதும்
4.நல்லதை நம் கண்கள் ஈர்க்கும் நிலையும் குறைக்கப்படுகின்றது
ஆதே சமயத்தில் கண் பார்வை சரியாகத் தெரியவில்லை என்றால் கடும் வேதனை வருவதும் இதைப் போன்ற விஷத்தன்மைகளைத் தான் வளர்க்க முடிகிறது.
இருந்தாலும்... கண்களால் எப்படி உற்றுப் பார்த்து நமக்குள் அந்த வேதனை வந்ததோ அதே கண்ணின் நினைவு கொண்டு “நாம் உயர்ந்த சக்திகளைக் கவர முடியும்...”
ரேடியோ டிவிக்களில் ஆண்டென்னா என்ற சாதனத்தைப் பொருத்தி காற்றில் உள்ளதைக் கவர்வது போன்று..
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை யாம் உங்களுக்குள் பதிவாக்கியதன் துணை கொண்டு
2.இந்தக் காற்றுக்குள் மறைந்துள்ள அந்தச் சக்திகளைப் பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்
3.அதை உயிர் வழி கவருங்கள்... உங்கள் கண் வழி உடலுக்குள் செலுத்துங்கள்.
ஏனென்றால் அதே கண்ணால் பார்த்தது தான்... அதன் வழியிலேயே துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷத்தன்மைகளைக் குறைக்கும் தன்மை வருகின்றது.
ஏனென்றால் விஷத்தை முழுமையாக ஒரு நிலையில் நிறுத்த முடியாது.
ஆக உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தவே “இந்தத் தியானப் பயிற்சி கொடுக்கின்றோம்...”
யாரோ செய்வார்... என்பதற்குப் பதிலாக..
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் சேர்த்து
2.அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு அதனின் வலிமையை உங்களுக்குள் செலுத்தி
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை நல்ல அணுக்களாக நீங்களே மாற்றிவிடலாம்.
உடலில் நோய் வந்தால் அதை மாற்ற டாக்டரிடம் செல்கிறோம். மருந்தைக் கொடுத்து நோயைத் தான் அவர்களால் போக்க முடிகிறது. இருந்தாலும் நோய்க்குக் காரணமான “ஊழ்வினை என்ற வித்தை...” அவர்களால் மாற்ற முடியாது.
மருந்தினால் நோயைக் குறைத்த பின் மீண்டும் இதே உணர்வுகள் “சிறிது குறை...” என்று வேதனைப்பட்டால் அதை நுகர்ந்து இரத்தத்தில் கலந்து வேதனையான அணுக்களை நமக்குள் உருவாக்கத் தொடங்கிவிடும்.
1.மீண்டும் உடல் உறுப்புகள் பலவீனம் அடையத்தான் செய்யும்.
2.முழுமையாக அதிலே விடுதலை அடைய முடிவதில்லை.
ஆனால் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் எடுத்துக் கொண்டால் உயிர் என்றுமே நம்மை ஏகாந்த நிலை அடையச் செய்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.
சகஜ வாழ்க்கையில் இருப்பது போல் பண்பு பரிவு பாசம் கொண்டு பிறருடைய வேதனையான உணர்வினை நுகர்ந்தோம் என்றால் “இன்னொரு ஆன்மா நமக்குள் வந்து” வேதனையைக் கூட்டும். பின் இந்த உடலை வீழ்த்தும்.
இந்த உடலை விட்டு வெளியே செல்லும்போது நமது ஆன்மா உயிருடன் சேர்ந்து எத்தகைய வேதனையின் ஆன்மாவாக இருக்கின்றதோ அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்று “வேதனைப்படும் உடலாக நம் உயிர் உருவாக்கிவிடும்...” என்பதை நீங்கள் மறந்திடலாகாது.
1.ஆகவே உயிரான ஈசனை மதித்து வாழுங்கள்.
2.மனிதனான பின் தான் இதைத் தெரிந்து கொள்ள முடியும்...!
அருள் வாழ்க்கை வாழ்வோம் இருளைப் போக்குவோம் பேரருள் பேரொளியாக மாறுவோம். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம் மெய்வழி செல்வோம்... மெய்ப்பொருள் காணும் திறன் பெறுவோம்... மெய்ஞானம் பெறுவோம்.