ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 30, 2022

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

மான் சாந்தமானது புலியோ கொடூரமானது. புலி மானைத் தாக்க விரும்புகின்றது தன் உணவுக்காக வேண்டி…!

மானைக் கொன்று புசிக்க வேண்டும் என்ற உணர்வுகள் புலியிடமிருந்து வெளிவரப்படும் பொழுது சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய “வெப்பகாந்தம்…” அதைக் கவர்ந்து கொள்கிறது.

புலியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின்
1.மான் புலியைப் பார்த்த பின்… வெப்பகாந்தம் கவர்ந்த உணர்வை மான் நுகர்ந்தபின் அதற்கு அந்த வலிமை வருகின்றது.
2.அது தான் கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருக்ஷேத்திரப் போர் என்று சொல்வது.
3.மான் புலியைப் பார்த்து அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது உயிரிலே மோதப்பட்டு
4.அபாயக் குரல்களை… இந்த உணர்ச்சிகளை எழுப்புகின்றது...
5.கண்ணன் சங்கநாதம் ஊதுகின்றான்... குருக்ஷேத்திரப் போர் அங்கே நடக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் புலியின் உணர்வுகளை அது எடுத்துக் கொண்டு வரும் பொழுது… “அர்ஜுனன் - வலிமைக்க சக்தி…!”

எதைக் கவர்ந்து கொண்டதோ அந்தச் சத்தை இதில் உள்ள விஷம் “அந்த உணர்ச்சியின் வேகத்தை ஊட்டும் – நகுலன்…!”

மான் நுகர்ந்து கொண்ட பின் உயிரிலே குருக்ஷேத்திரப் போராகிறது… ஆனால் அதே சமயத்தில்… எதையுமே குறிவைத்துத் தாக்கும் வல்லமை பெற்றவன் அர்ஜுனன் என்ற நிலையில் “புலியின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி… இரத்தத்தின் வழி சென்று அந்த வலிமையை உடல் முழுவதும் பரவச் செய்கின்றது – அர்ஜுனன்…”

இந்த உடலுக்குள் இந்த உணர்வின் தன்மை ஊடுருவி… குறி வைத்துத் தாக்கப்படும் போது… நகுலன்.
1.அதனுடைய இயக்க உணர்வின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.இந்த வலிமையை ஒன்று சேர்த்து விடுகின்றது… அதாவது அதற்குள் விரிவடையச் செய்கின்றது.

அதனுடன் சேர்த்துக் கொண்ட பின்… இரண்டறக் கலந்து விட்டால் (மானின் உணர்வும் புலியின் உணர்வும்) – “சகாதேவன்…” என்றும் அதனுடன் சேர்த்து வலிமையாகி விட்டால் – “பீமன்…” என்றும் காட்டப்படுகிறது.

மானின் உடலுக்குள் புலியின் உணர்வுகள் வலிமை பெற்றால் அப்போது பீமன் என்ற நிலை வருகிறது. பீமன் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கித் தனது நிலைக்கே அடிமையாக்கி விடுகின்றான் என்று காவியத் தொகுப்புகள் காட்டுகிறது.

புலி தன் பசிக்காக அந்த மானை அடித்து உட்கொண்ட பின் மானின் உயிரான்மா வெளி வருகிறது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்…!

எப்படி…?

கண்கள் தான் உற்று நோக்குகிறது…
1.புலியோ மானின் உடலை இரையாக்குகின்றது
2.புலி மானின் உடலை இரையாக்குவதற்கு முன் “புலியின் உணர்வின் உணர்ச்சிகளை…”
3.மானின் கண்கள் தனக்குள் புலியின் உணர்வுகளை இரையாக்கி விடுகின்றது.

இரையின் உணர்வு செயலாகும் போது… எதன் வலிமை பெற்றதோ அதன் நிலை கொண்டு உருவாகிடும் தன்மை பெறுகின்றது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாக செல்கின்றான்.

அந்த வலிமைக்குத்தக்க சாரதியாகச் சென்று எந்தப் புலியைக் கூர்மையாக உற்றுப் பார்த்ததோ அந்தக் கூர்மைக்குத்தக்க வலிமை கூடி
1.அங்கே இதிலே சேர்ந்த காந்தப்புலன் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்
2.செல்ஃபோன்களில் நாம் பதிவாக்கி விட்டால்… அதை இயக்கப்படும் பொழுது அது எப்படித் திரும்ப இயங்குகின்றதோ
3.ஒரு செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது எப்படி விளைகின்றதோ
4.அதைப் போன்று எந்தப் புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் சென்றதோ
5.மானின் உயிரான்மா வெளிவந்த பின் புலியின் ஈர்ப்புக்குள் சூட்சமமாக வந்து விடுகின்றது.

புலியோ உடலுடன் இருக்கின்றது… அதைக் (மானின் ஆன்மாவை) கவர்ந்து விடுகின்றது. அதனுடைய கண்கள் இந்த மானை எப்படிப் பார்த்ததோ அதன் உணர்வு கொண்டு அதைக் கவர்ந்து விடுகின்றது.

புலியின் ஈர்ப்புக்குள் சென்று… புலியின் வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் உபதேசிக்கின்றார்.

பரிணாம வளர்ச்சிக்குக் கண் தான் பெரும்பகுதி வழிகாட்டுகிறது. ஆகவே… நமது வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தில்
1.நாம் நுகரும் தன்னைக் காட்டிலும் வலிமையான உணர்வுகள்
2.நம்மை எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மாற்றியது என்று தான் தெளிவாகக் கூறப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

இப்படி மானின் ஆன்மா புலியின் உடலுக்குள் சென்ற பின் அதனுடைய குட்டியாக உருவாகிவிடுகிறது. “குட்டியாக ஈன்ற பின் – தர்மன்…!”

மானின் உடல் முதலில் புலிக்கு இரையாக்கப்பட்டது. இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் குட்டியான பின் தன் நிலை (புலி) ஆன பின் தர்மன்… “எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சமாதானப்படுத்துவான்…”

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில்
1.ஒவ்வொரு உணர்வுகளும் உணர்ச்சிகளும் எதன் எதன் வழியில்…
2.எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தான் சாஸ்திர விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.