ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழி கூடி இழுக்க வேண்டும்

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம்... காய்கறிகளை எல்லாம் வேக வைக்கின்றோம் வேக வைத்துத் தான் உணவாக உட்கொள்கிறோம். வேக வைத்து விட்டால் அந்தக் காய்கள் மீண்டும் முளைப்பதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் தீமைகள் வந்தால்...
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடனடியாகச் சேர்த்து
2.அந்தத் தீமைகளைப் பலவீனப்படுத்திப் பழகுதல் வேண்டும்

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்...! என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்

எத்தனையோ கோபம் ஆத்திரம் குரோதம் வெறுப்பு பயம் வேதனை இவைகளெல்லாம் நாம் அன்றாடம் சந்திக்க நேர்கிறது. இதற்கு வாலி என்று பெயர்.

அத்தகைய குணங்கள் நமக்குள் வந்த பின் அதனுடைய வலிமையைக் காட்டிவிடும்... அப்போது நம் நல்ல குணங்கள் செயல் இழந்துவிடும்.

எப்படி...?

சந்தோஷமாகத் தான் நாம் இருப்போம்... ஆனால் வேதனைப்படும் செயல்களைப் பார்த்து விட்டால் அந்தச் சந்தோஷம் அங்கே இழக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு கோபப்படுவரைப் பார்த்தவுடன் அந்தச் சந்தோஷம் மாறி அது வாலியாகி அதனின் உணர்வாக நம்மை மாற்றிவிடுகிறது.

இராமன் குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் எய்து அந்த வாலி வெளியே வராதபடி அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான். அப்போது வாலியின் செயல்கள் தடுக்கப்படுகின்றது.

ஆகவே... நம் வாழ்க்கையில் தீமை வந்தால்
1.நமது எண்ணத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து தீமையான உணர்வை அடைத்துப் பழகுதல் வேண்டும்.

உயிரிலே பட்டால் தான் இயக்கும்.

உதாரணமாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்... காற்றடிகிறது. தவறிப்போய் அந்த நெருப்பிலே ஒரு மிளகாய் விழுந்தால் என்ன செய்யும்...?
1.நெருப்பிலே பட்டபின் நெடி வரத்தான் செய்யும்
2.நம்மை அறியாமலே தும்மலும் வரத்தான் செய்யும்.

அதைப் போன்றுதான்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டால் அது அதனின் உணர்ச்சிகளை ஊட்டியேவிடும்.
2.தீமையான உணர்வுகள் பட்டால் அதை உயிர் இயக்கிவிடும்...
3.தெரியாமல் பட்டாலும் அதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா...?

அதற்குத்தான் அவ்வப்பொழுது உங்களுக்குத் தியானப் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

தீமை என்று பார்த்தாலும் நாம் அதை நுகர்கின்றோம்... நுகர்ந்த பின் அதை அறியவும் முடிகின்றது. அறிந்தாலும் உயிரிலே பட்டு உடலுக்குள் சென்றால் கடுமையாகும்.

குழம்பிலே அளவுடன் மிளகாயைப் போட்டால் ருசியாக இருக்கின்றது காரம் அதிகமாகி விட்டால் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகிறது... எரிச்சலாகிறது.

இதைப் போன்று தான் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கோபமோ குரோதமோ வெறுப்போ பயமோ வேதனையோ உயிரிலே பட்ட பின் அறிந்து கொள்கின்றோம்.

அறிந்தாலும்...
1.உடனே அடுத்த கணம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இடைமறித்து அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
3.புருவ மத்தி வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுக்க வேண்டும்... உயிர் வழி...! (இது முக்கியமானது),

இவ்வாறு தீமைகளை அடைத்துப் பழகுதல் வேண்டும் ஏனென்றால் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் செல்லும்.

ஆனால் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து... உயிருடன் ஒன்றி...
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதன் வழி இழுத்தால்
2.அங்கே புருவ மத்தியில் வலு கூடுகின்றது
3.அடுத்து அதே நினைவினைக் கண்களை மூடி உடலுக்குள் செலுத்தினால் மிகவும் ஆற்றல்மிக்கதாக மாறுகிறது.

கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் நாம் செலுத்த வேண்டியது:-
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்... எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்
3.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
4.எங்கள் நரம்புகள் முழுவதிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள்ளும் ஊனை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும்ம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
6.”ஒரு நொடிக்குள்...” இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி விட்டால்
7.நாம் நுகர்ந்தறிந்த தீமை உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன் இது மாற்றிக் கொண்டு வருகிறது.

நண்பனாகப் பழகுகிறோம்...! இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பகைமையாகி விடுகிறது. திடீரென்று அந்த நண்பன் நினைவு வந்தது என்றால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் “துரோகம் செய்தான் பாவி... எங்கிருந்தாலும் உருப்பட மாட்டன்,,,!” என்று நம் கண்ணின் நினைவைப் பாய்ச்சினால் அது உடனடியாகப் போய் அவனைத் தாக்குகிறது.

அதே போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் அதைப் பாய்ச்சி விட்டால்
3.அதாவது தீமையை நுகர்ந்த அந்தச் சந்தர்ப்பத்திலேயே இதைப் பெருக்கி விட்டால்
4.விஷமான உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ வெளியிலிருந்து அது இழுக்கும் சக்தி குறையும்
5.உடலுக்குள் அத்தகைய அணுக்கள் இருந்தாலும் அதற்குண்டான ஆகாரம் கிடைக்காதபடி தடையாகும்
6.புறத்திலே குழம்பை நாம் சுவையாக்கிக் கொண்டு வந்தது போன்று சுவை மிக்க உணர்வாக நமக்குள் படைக்க முடியும்.

செய்து பாருங்கள்...!