ஆண்டவன் என்பவன் கருணைஸ்வரூபன் மட்டும் தானா…? ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்...? என்றெல்லாம் சொல்லியுள்ளேன். ஆண்டவனின் நிலை என்ன…?
ஆண்டவனையே இயற்கையில் கலந்துள்ள ஒளி… காற்று… தண்ணீர்… இந்நிலையில் கலந்துள்ளவன்தான் ஆண்டவன்… என்று நான் செப்பியுள்ளேன்.
அப்படி இருக்கும் பொழுது ஆண்டவனால் ஏனப்பா “ஒரே நிலையில்” ஒளி பாய்ச்சவும்… மழை பெய்யவும்… காற்று அடிக்கவும் முடியவில்லை…?
1.இடி இடித்து மழை பெய்கிறது… அதி மழை பெய்கிறது
2.பெரும் காற்றும் சூறாவளிக் காற்றும் வீசுகிறது
3.குளிர்ந்த ஒளியும் கடும் வெப்பமும் வருகிறது.
ஆண்டவனின் நிலையில் ஏனப்பா இவ்வளவு மாற்றங்கள்…?
கருணைஸ்வரூபா…! என்று ஆண்டவனை என் சிஷ்யன் (ஞானகுரு) பாடுகின்றான். “கருணைஸ்வரூபா…!” என்று பாடும் பொழுது அவன் மனமும் கருணையுடன் சுற்றுகின்றது.
1.கருணையுடன் வேண்டும் பொழுது
2.அந்தக் கருணை நிலை... வேண்டுபவர்களின் மனதிலேயே வருகிறது.
3.எண்ணத்திலும் அந்நிலையே அப்பொழுது சுற்றுகிறது.
அந்நிலையில் இயற்கைத் தன்மையில் கலந்துள்ள ஆண்டவனும் அந்நிலை வேண்டுபவர்களுக்கு அந்நிலையில் ஒளி பாய்ச்சி அருள் புரிகின்றான்.
1.அவன் நிலையிலேயே “கருணை நிலை வேண்டினால் தான்…” அந்நிலையே வருகிறது.
2.அந்நிலை இவன் நிலைக்குப் பெற முடிகிறது.
அந்நிலையில் பூஜை செய்வது தான் நீ வணங்கும் முருகனின் மூலமாக அருள் கொடுக்கும் போகரின் நிலை எல்லாம். பழனி ஸ்தலத்தின் நிலையும் அதுவே தான்…!
சில நிலையில் பூகம்பம் வந்து அடங்காத காற்றும் அடங்காத மழையும் அதி உஷ்ணமும் வரும் பொழுது கருணைஸ்வரூபமான ஆண்டவன் ஏனப்பா அந்நிலையை அளிக்கின்றான்…?
பழனி ஸ்தலத்தின் வழியைச் சொல்கிறேன். ஆனால் கல்கத்தா காளியின் நிலை என்ன..?
1.தென்றல் காற்றப்பா போகர் பெற்ற நிலை
2.பெரும் சுழல் காற்றப்பா கல்கத்தா காளியின் நிலை.
3.போகரும் அந்த ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் முருகனாக அருள் புரிகின்றார்.
4.கல்கத்தா காளியும் ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் பெரும் ஆவேச நிலையில் அருள் புரிகின்றாள்.
கல்கத்தா காளியின் நிலை என்னப்பா…? காளி என்பவள் யாரப்பா…?
இடி மின்னலையும் பூகம்பத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு பெரும் ஆவேசத்துடன் அடங்காத நிலையில் அமர்ந்துள்ளவள் தான் கல்கத்தா காளியாக அமர்ந்துள்ள கடும் தவம் புரிந்த பெண் ஒருத்தியப்பா அவள்.
அக்காளியின் நிலை ஆவேச நிலையப்பா. அடங்காத ஆவேசமான நிலையப்பா…! ஆணவத்தையும் ஏமாற்றுத் தன்மையையும் எரிக்கும் குணம் உடையவள்.
நல்லோர்க்குக் கருணை புரிவதில் பெரும் நாட்டம் கொண்டவள். தவறும் நிலையைக் கண்டு விட்டால் எரிமலையும் பூகம்பமும் தானப்பா அவள்…!
அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியமாகுவது தான் மெய் ஒளி பெறும் ஆண்டவனின் சக்தி…!