ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2022

“நம் உயிர் ஒரு நெருப்பு...” என்பதை உணர்ந்திருக்கின்றோமா...?

ஒரு நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்... அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.
1.நாம் உடுத்திய உடையை அந்த நெருப்பிலே போட்டால்
2.“மனித உணர்வுடன் கலந்து...” இந்தக் கருகிய மணம் வரும்.

ஒரு மனிதன் சட்டையைப் போட்டிருக்கும் போது அவன் நல்ல மனிதனாக இருந்தால் அதைக் கழட்டி நெருப்பில் போட்டுப் பாருங்கள்.
1.கெட்ட நெடி... அந்தக் கருகிய வாசனை வராது
2.நல்ல வாசனைகள் தான் வரும்.

சந்தேகம் இருந்தால் ஒன்றை நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.

ஒரு மணி நேரம் நீங்கள் கோபமாக இருந்து பாருங்கள். அதற்குப் பின் நீங்கள் அணிந்திருக்கும் சட்டையை நீங்களே முகர்ந்து பாருங்கள் அதில் நெடி நிச்சயம் வரும்.
1.ஏனென்றால் நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதுவே உள் நின்று... அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

உதாரணமாக... மிளகாயை நெருப்பிலே போட்டால் என்ன செய்கின்றது...?

இத்தனை பேர் இங்கே கூடி இருக்கின்றோம் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்... அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம் அனைவரையுமே இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்...?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தை செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்... அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது...? நமது உயிர்...!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்...” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ...
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்... நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது...? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்... அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது... ஆண்டாள்...!

யார் ஆள்வது...? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.