தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.
இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணி… வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.
பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும்…! என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?
உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.
இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.
அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.
ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.
நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடனும் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.
ஜெபம் பெறுங்கள்.. நல் உணர்வு பெறுங்கள்… என்றெல்லாம் வழிப்படுத்துகின்றோம். அந்த நிலையில் நம் எண்ணக் கலவை வழிப்படுத்திக் கொண்டு வரும் நிலையில்
1.நம்மை அறியாமல் பிறர் செய்யும்
2.அவர் எடுத்த அமில குணத்தை ஒத்த அலைகள் நம்மை மோதுண்ட நிலையில்
3.அதே சமயத்தில் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது
4.இவரின் நிலையான அமில மோதலின் நிலையால்
5.பல நாட்கள் நாம் நம்முடன் மோதுண்ட அலைகளை அடக்கிப் பழக்கப்பட்ட நிலையில்
6.மற்றோரின் சொல்லிலிருந்து வெளிப்படும் எந்தக் குண எதிர்நிலை மோதலும் நம்மைச் சாடி
7.”அதே உணர்வுடனே நம்மையும் பேசச் செய்யும்…!”
நாம் பெற்ற ஜெபத்தின் வலு என்ன ஆயிற்று…? எங்கே போனது…?
முதலில் நம் நிலையில் பிறரின் சொல் எண்ணத்தைக் கொண்ட அமிலத்திற்கு அடிபணியலாகாது. பல நாள் நமக்குகந்த குணமுடன் வாழ்ந்த நிலையில்
1.ஒருவர் வந்து மற்றொருவரின் மேல் சொல்லப்படும்
2.எந்நிலை கொண்ட சொல்லின் அமிலங்கள் நம்மிடம் சொல்லும் பொழுதும்
3.நாம் அவர் சொல்லும் நிலையை வைத்து… “நம் எண்ணத்தைச் சிதறவிடலாகாது…!” (இது முக்கியம்)
ஆத்ம ஞானம் பெறும் வழித் தொடரில் பல நிலைகள் உள்ளன.
ஒவ்வொரு தடவை நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலை கொண்டு “அதன் எண்ணத்தை ஒத்த அமிலத் தன்மை உராய்ந்து கொண்டே தான் உள்ளது…” என்பதனை உணர்ந்து நம் ஆத்ம ஞானம் இருந்திடல் வேண்டும்.
தன் ஆத்மாவுக்குகந்த உயர் ஞானத்தைப் பெற இன்றைய கலியில் உள்ள ஆத்மாக்களில் வழி பெறும் பக்குவம் இந்த நாகரீக உலகில் மிகவும் குறைந்து விட்டது. இன்று உணர்த்தப்படும் முறையும் ஏற்கப்படும் வடிவில் இல்லை.
1.தன் உண்மை நிலையை… தான் உணர்ந்தால்
2.தன் உயிராத்மாவின் நிலை உயரும்… ஒளிரும்…! என்ற வழித் தொடர் பெற்றே ஜெப நிலை கொண்டிடுங்கள்.