ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 21, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஆசைப்பட்டு நுகர வேண்டும்

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவைப் “புருவ மத்தியில் வையுங்கள்...” துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று மெதுவாகக் கண்களை மூடுங்கள்.

1.உயிரான ஈசனிடம் வேண்டி உங்கள் நினைவனைத்தும் உயிருடன் இணைக்கப்படும் பொழுது
2.மூக்கின் வழி செல்லாதபடி புருவத்தின் வழி காந்தத்தால் ஈர்த்து உங்களுக்குள் அந்த உயிர் உணர்வின் ஒளி அலைகளாக மாற்றும்.
3.இப்பொழுது அந்த ஈர்க்கும் சக்தி புருவ மத்திக்கே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிரிலே வைத்து... உயிரான ஈசனிடம் வேண்டி...
1.துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் முழுமையான எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்... ஆசைப்பட்டு அதை நுகருங்கள்.

இவ்வாறு இச்சைப்பட்டு நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் பிரம்மம் ஆனால் பிரம்மகுரு வசிஷ்டரின் மனைவி அருந்ததி...! அந்தச் சக்தியாக நமக்குள் நல்லதை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வையுங்கள். உயிருடன் ஒன்றிய உணர்வை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்தநாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நுகர்ந்தது ஜீவ அணு... ஜீவான்மா...! “ஜீவான்மா...” என்பது இன்னொரு மனிதன் மேல் நாம் பிரியப்பட்டு இருந்தால் “இறந்த பின் அந்த ஆன்மா...” நம் உடலுக்குள் வந்தால் அது இரத்தத்தில் தான் இருக்கும்.

இரத்தத்தின் வழி உணர்வை எடுத்துத் தான் அந்த அணுக்களும் வளரும்.
1.உயிர் பாகம் செல்லும் பொழுது அதன் உணர்ச்சிகளை உந்தி அது உணவாக எடுத்துக் கொள்ளும்...
2.நமக்குத் தீங்கு விளைவிக்கும்.

ஆகையினால் நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் அந்த அருள் உணர்வுகள் பெற நாம் தியானிக்க வேண்டும்.

நண்பனை உற்றுப் பார்த்து அவரை நமக்குள் பதிவு செய்திருந்தால் இறக்கும் போது இறந்ததைப் பாசத்துடன் கண்களால் கவர்ந்திருந்தால் நம் இரத்தத்திற்குள் அது தேங்கி இருக்கும்.
ஆக... ஜீவான்மாக்கள் எதுவாக இருப்பினும் அந்த ஆன்மாக்களுக்கு மாற்றத் தெரியாது. அதனால் மாற்ற முடியாததை துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தத்தில் இருக்கும் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்த வேண்டும்.
1.இவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஜீவான்மாக்களும்
2.ஒளியின் உணர்வாக மாறும் தகுதி பெறுகின்றது.

இப்படித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துச் சேர்த்து ஒளியின் அறிவாக இயக்கும் அந்த உணர்வை நம் கண்களால் செலுத்தப்படும் பொழுது நல்ல கருக்களாக இரத்தத்தில் உருவாகும்.

இப்பொழுது...
1.உங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போன்று
2.இரத்த நாளங்களில் மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கலக்கும்
3.மகிழ்ச்சியூட்டும் உணர்வாக உங்களுக்குள் வளரும்.

ஆனால் ஒரு சிலருக்குத் தீமை என்ற உணர்வு உடலில் இருந்தால் அது அடங்கும் பொழுது அதனால் கொஞ்சம் சோர்வடையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் பித்த சுரப்பிகளில் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
1.“விஷத்தைத் தணித்திடும் அருள் சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்...”
2.நாகன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உணர்வை எடுத்து வளர்த்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ
3.அது போல் நம் உடலில் உள்ள அணுக்களை ஒளியாக மாற்ற முடியும்.

விஷம் இல்லையேல் ஜீரணம் இல்லை.... ஆனால் விஷம் அளவுக்கு அதிகமானால் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் நஞ்சாக மாறி விடுகின்றது.

ஆகவே விஷத்தை மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் பித்த சுரப்பிகளிலே செலுத்தப்படும் பொழுது அது சம அளவாகிச் சாந்தமான அணுக்களாக நல்ல ஜீரணமாக்கும் சக்தி பெறுகிறது.

இதே போல் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள்.

நோய்களை நீக்க விஞ்ஞானிகள் மருந்தைத் தயார் செய்து அதை இரத்தத்தில் தான் கலக்கச் செய்கின்றனர்
1.ஆனால் நோயின் வீரியம் அதிகமாகி விட்டால்
2.நரம்புகளிலே... அந்த வாயு மண்டலங்களிலே அதாவது உடலை இயக்கக்கூடிய நரம்புகளுக்குள்ளேயே மருந்தினைப் பாய்ச்சி விடுவார்கள்.

அதே போன்றுதான் உங்கள் உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் கண்ணின் நினைவினை உறுப்புகளுக்குள் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் ஒரு அற்புதமான உணர்ச்சிகள் வருவதை உணரலாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் உடலில் அற்புதங்களைச் செயல்படுத்தும்.
2.அந்த அற்புத உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் படர்ந்து
3.உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மை தணிந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வின் அணுக்கள் விளைய இது உதவும்.

இப்பொழுது உங்கள் உடலிலே புது விதமான உணர்ச்சிகள் பரவும். உடல்களிலே வலியோ... எலும்புகளில் வலியோ... மூட்டுகளில் வலியோ... சிரசில் வலியோ குறையத் தொடங்கும்... வேதனைகள் நீங்கும்.

உடலி இருக்கக்கூடிய நரம்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரும் பொழுது அதிலிருக்கக்கூடிய குறைபாடுகள் குறைந்து அருள் உணர்வுகள் பெருகும்.

1.அழுக்குகளை அகற்ற நந்நீரை விடுவது போன்று
2.கண்ணின் நினைவை எல்லா உறுப்புகளிலும் செலுத்தி
3.உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுக்கும் ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும்.