ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2022

நாம் எதனால் இயங்குகின்றோம்… இயக்கப்படுகின்றோம்…? என்பதை அறிய வேண்டியது மிக மிக அவசியம்

வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். இருந்தாலும் பிறர் தவறு செய்வதையும் பார்த்து தவறு என்று உணர்கின்றோம்.
1.அதற்குத் தக்க விலகிச் செல்கின்றோம் அல்லது
2.அந்த உணர்வுக்கொப்ப நாமும் போருக்குச் (எதிர்நிலையாகி) செல்கின்றோம்.

போர்முறையாகிறது (வெளியில்) என்று வைத்தாலும் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் நம் உயிரிலே பட்டுத் தான் இயக்கமாகிறது. உயிர் தான் உடலுக்குள் குருவாக இருக்கிறது.

அப்போது நாம் நுகர்ந்த உணர்வுகள் (தவறு என்று நுகர்ந்தது) உயிரிலே படும் பொழுது “குருக்ஷேத்திரப் போராகிறது…”
1.என்னை இப்படிப் பேசி விட்டான் என்றோ அல்லது
2.எனக்கு இப்படி இடைஞ்சல் செய்துவிட்டான் என்றோ நாம் எண்ணும்போது
3.அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகள் உடலுக்குள் பரவிய உடனே
4.இந்த உடலைக் காக்க உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் போர்முறைக்கு (அதிகமாக) வருகின்றது – “மகாபாரதப்போர்…”
5.அவனை உதைக்க வேண்டும் என்ற நிலையில் அவன் உணர்வுகள் அவனைத் தாக்கும் நிலைக்கு அழைத்துச் செல்கின்றது
6.அதே சமயத்தில் அவன் நம்மைத் தாக்கி விடுவான் வலுவானவன் என்று சொன்னால் நம்மை விலகிச் செல்லும்படி செய்கின்றது.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். ஒருவன் போக்கிரி என்று தெரிகின்றது வருபவரை எல்லாம் அவன் மிரட்டுகின்றான். நாம் பார்க்கின்றோம்.

உதாரணமாக… வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு குறை (எதிர்நிலை) வந்தால் போதும்…! கணவர் என்னை இப்படிப் பேசி விட்டாரே என்று மனைவி சொல்லும்.

ஆனால் ரோட்டிலே செல்லும் பொழுது போக்கிரி நம்மைக் கண்டபடி பேசுகின்றான்… அடிக்க வருகின்றான்.

ஐய்யய்யோ… என்று சொல்லித்தானே ஓடுகின்றோம் அவனைத் திருப்பி அடிக்கும் நிலையோ அல்லது அசிங்கமாகப் பேசுகின்றான் என்று சொல்ல முடிகின்றதா…?

இல்லை.

அடுத்தாற்போல் மற்றவர்கள் விசாரிக்கின்றார்கள். அவன் உன்னை என்ன செய்தான்…? என்று…!

போக்கிரி என்னை அடித்தான்… திட்டினான்… என்று அங்கே அவனுக்கு முன்னாடி சாட்சி சொல்ல முடிகிறதா…! அடித்தாரா…? என்று கேட்டால் நாம் “இல்லை…” என்று தான் சொல்வோம்.

காரணம்… “அடித்தான்” என்று சொன்னால் நம்மை மீண்டும் உதைப்பான். இது தான் நடக்கின்றது.

ஆனால்
1.வீட்டில் “ஏன் இப்படிச் செய்தாய்…?” என்று கணவன் மனைவியிடம் கேட்டால் கணவன் மீது மனைவிக்குக் கோபம் வருகிறது சண்டை வருகிறது அல்லது
2.மனைவி கணவனைக் குறையாகச் சொன்னால் கணவனுக்குக் கோபம் வருகிறது.

ரோட்டிலே நாம் வேடிக்கையாகத் தான் பார்த்தோம். அந்தப் போக்கிரி என்னடா வேடிக்கை பார்க்கின்றாய்…? என்று நம்மை அதட்டிக் கேட்கின்றான். அவன் தவறு செய்தே பழக்கப்பட்டவன்.

வேடிக்கை பார்ப்பதற்கு “என்னடா…” என்று கேட்கின்றான். சும்மா…! என்று சொன்னால் “என்னடா சும்மா…?” என்று அடிக்க வருகின்றார். அடித்தவுடன் என்ன செய்கின்றோம்…? நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை… பேசாமல் இருக்கின்றோம்.

இது போன்றுதான்…
1.நமக்குள் எத்தனையோ நல்ல குணங்கள் இருப்பினும்
2.நாம் பார்த்து நுகர்ந்த தீய உணர்வுகள்… எந்த நல்ல குணத்தோடு நாம் பார்த்தோமோ
3.அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்தை (போக்கிரியைப் போன்று) அடக்கி விடுகின்றது

அதாவது தீமை செய்யும் உணர்வுகளை நாம் சுவாசித்தால்… சுவாசித்த உணர்வுகள் நம் நல்ல குணங்களை அடக்கி விடுகின்றது. கணங்களுக்கு அதிபதி கணபதி என்று அது அதிபதியாக இருந்து நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

போக்கிரியின் உணர்வுகள் நமக்குள் கூடி… பயம் அதிகரித்து விட்டால் வீட்டில் நமக்கு அமைதியே இருக்காது. சிந்தனை இழந்து… சிந்தனையற்றவர்களாகி விடுகின்றோம்.
1.அடுத்து யார் எதைச் சொன்னாலும் நம்முடைய சொல்லும் கடுமையாகி விடுகின்றது
2.குடும்பத்திற்குள் ஒற்றுமை இழக்கப்படுகின்றது… குடும்பத்திற்குள் மட்டுமல்ல.
3.உயிரிலே குருக்ஷேத்திரப் போராக நடக்கப்பட்டு உடலுக்குள் பார்த்தால் மகாபாரதப் போரே நடக்கின்றது.

நாம் எத்தனையோ நல்லதை எடுத்திருக்கின்றோம். நமக்குள் நல்ல அணுக்கள் உண்டு.. பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய உணர்வுகள் நமக்குள் இருப்பினும்… இத்தகைய தீமையின் உணர்வு நமக்குள் சென்றால் குருக்ஷேத்திரப்போர் இங்கே போகாது தடுக்கின்றது… உடலை இயக்குகிறது

இருந்தாலும் இந்த உணர்வுகள் உடலுக்குள் போய்விட்டால் அந்த உணர்வுகள் உமிழ்நீருடன் சேர்த்து நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறுகின்றது. இரத்தமாக மாறிவிட்டால் பயமான எண்ணங்களே வருகின்றது.

இப்படி…
1.நமது வாழ்க்கையில் நல்லது என்று நினைத்து வந்தாலும் நல்லது செய்ய முற்பட்டாலும்
2.கேட்ட உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமல் ஆட்டிப் படைக்கின்றது.

இதைத் தான் சீதாவை இராவணன் சிறை பிடித்தான் என்று நம் காவியங்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. நாம் உணர்ந்தோமா…?