ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2022

ஆலயங்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யச் சொன்னதன் உள்கருத்து என்ன...?

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது வரக்கூடிய பகைமைகள் மகாபாரதப் போராக நம் உடலுக்குள் எத்தனையோ நடந்து கொண்டுள்ளது.

புறத்திலே நாம் பார்த்ததெல்லாம்... நம்மைச் சந்தோஷப்பட விடாதபடி மனக்கலக்கங்களும் வேதனைகளும் துயரங்களும் உடலுக்குள்ளேயே வருகின்றது

இடுப்பு வலிக்கின்றது தலை வலிக்கின்றது நெஞ்சு வலிக்கின்றது கண் வலிக்கின்றது கை வலிக்கின்றது மூட்டு வலிக்கின்றது என்று சொல்வது... இது எல்லாம் மகாபாரதப் போர் தான்.

ஒவ்வொருவருமே நாம் தெரிந்து கொள்ளலாம்...! வீட்டில் கஷ்டம்... கஷ்டம்... என்று சொல்லி வேதனைப்பட்டுப் பாருங்கள்
1.பையன் வெளியே சென்றால் கீழே விழுந்து விடுவான்
2.கணவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது... என்ன என்று தெரியாதபடி திடீரென்று வேலையிலிருந்து வெளியேற்றி விடுவார்கள்
3.பக்கத்து வீட்டுக்காரர்கள் இனம் புரியாதபடி சண்டையிடுவார்கள்
4.தொழில் செய்யும் இடத்தில் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது உடைந்து நொறுங்கி விட்டது என்று
5.இதை எல்லாம் சில குடும்பங்களில் பார்க்கலாம்.

நமது எண்ணமே... நமக்குள் மட்டுமல்ல நமது உணர்வுகள் நம்மிடம் வேலை செய்பவருக்குள்ளும் அவ்வாறு இயக்கச் செய்கிறது. நம்மைக் காட்டிலும் மேலதிகாரியாக இருந்தாலும் அவரை அறியாமலே மறைமுகமாக அவரையும் இயக்கி விடுகின்றது.

இதையெல்லாம் நமக்கு உணர்த்துவதற்கு ஞானிகள் என்ன செய்தார்கள்...?
1.நல்ல குணங்கள் நமக்குள் எப்படி இருக்கின்றது...?
2.அது எப்படி காக்கப்பட வேண்டும் என்பதற்காகச் சாதாரண ஒரு கல்லைச் சிலையாக வடிக்கின்றார்கள்
3.வீட்டு வாசல் படிக்கும் அந்தக் கல் தான்... அதே கல்லைத் தான் சிலையாகவும் வடிக்கின்றார்கள்
4.அதற்குக் காரணப்பெயர் வைத்து... “தெய்வம் நல்லதைக் காக்கும்...” என்று சொல்கின்றனர்.

கல் சிலைக்கு அபிஷேகம் செய்கின்றோம். ஏன் அபிஷேகம் செய்கிறோம்...? என்று நாம் புரிந்து கொள்வதில்லை.

நாம் தெய்வம் என்று மட்டும் தான் நினைக்கின்றோம் இந்த உருவத்திலே தெய்வம் இருந்தது என்றும் எண்ணுகின்றோம். ஆனால்...
1.நல்ல குணங்களைச் சித்தரித்துக் காட்டுவதற்குத் தான்
2.அது இன்னது செய்யும்..! என்று உருவத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

சிலையில் பாலை அபிஷேகம் செய்யும் பொழுது என்ன செய்ய வேண்டும்...?

இந்தப் பாலை போன்ற மனம் நான் பெற வேண்டும் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் இந்த ஆலயத்திற்கு வருவோர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சந்தனத்தை போன்ற நறுமணம் பெற வேண்டும் என்று இப்படி அந்த ஞானிகள் காட்டிய வழியில் எண்ண வேண்டும்.

அது உருவம் தான்... பொருள் தான். கண்களால் நாம் காண முடிகின்றது

சந்தனத்தைப் பார்த்தவுடனே அது நன்றாக மணக்கும் என்றும் தெரிகின்றோம்... உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாலைப் பார்த்த உடனே அதிலே சர்க்கரை போட்டுக் காபித் தூளைப் போட்டுச் சுவையாக்க் குடிக்கின்றோம். பால்கோவாவும் நாம் கிண்டிச் சாப்பிடுகின்றோம்.

நம்முடைய மனதை நல்லதாக்க ஆலயத்தில் அப்படிச் செயல்படுத்துகின்றார்கள்.

ஆனால் அந்தப் பாலிலே சிறிது விஷம் போட்டால் நாம் சாப்பிடுவோமா...!

ஏனென்றால்... நாம் பாலைப் போன்று நல்ல மனதாக இருக்கின்றோம் எதிர்பாராது சந்தர்ப்பவசத்தில் ஒரு தீமையைப் பார்க்க நேர்கின்றது. அல்லது நமக்கு நண்பனாக இருக்கின்றான்... அவன் எல்லோருக்கும் நல்ல உதவிகளைச் செய்கின்றான். இப்பொழுது அவன் வேதனைப்படுகின்றான். அதைப் பார்த்தவுடனே... வேதனை என்ற விஷத்தை நுகர்ந்த பின் நம் உயிரிலே அந்த வேதனை தான் அபிஷேகமாகிறது.

எதன் வழி அபிஷேகம் நடக்கிறது...?

1.நாம் மூக்கு வழி சுவாசித்தது... உயிர் வழி தான் அபிஷேகம் நடக்கிறது
2.உயிரிலே பட்டு அபிஷேகம் ஆகும் போது அந்த வேதனையால் உடலெல்லாம் பலவீனம் அடைகிறது.

ரொம்ப நெருங்கிய நண்பனாக இருந்தால் அவன் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வந்தால் நமக்கு அங்கேயே தலை சுற்றிவிடும். அடுத்து யாராவது ஏதாவது சொன்னால் நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியாது ஒரு பொருளை வைத்து விட்டு அங்கே இங்கே என்று தேட ஆரம்பிப்போம் குழந்தைகளோ மற்ற யாரோ ஏதாவது ஒரு பொருளைக் கீழே போட்டால் நமக்குக் கோபம் பயங்கரமாக வரும்... அடிக்கச் சொல்லும். சிந்தனையற்ற செயலைச் செய்யும்.

யார் அங்கே தவறு செய்தது...? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை இவ்வாறு தவறு செய்ய வைக்கின்றது... அல்லது மயங்க வைக்கிறது.

அதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் ஆலயங்களில் சிலைகளை உருவங்களாக வைத்துக் காட்டினார்கள்.

அந்தப் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும் என்று அப்பொழுது நாம் எண்ண வேண்டும். நாங்கள் பார்க்கும் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்... குடும்பத்தில் அனைவரும் அதைப் பெற வேண்டும்... என்று எண்ணினால் அதே உணர்ச்சிகள் உயிரிலே படுகின்றது.

இப்படி...
1.நாம் எதை நுகர வேண்டும்...? என்று
2.அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்யும் போது நாம் நம் உயிர் வழி உயர்ந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்படி
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ளும்படி செய்து
4.அதை வைத்து நமக்குள் வரக்கூடிய தீமைகளை நன்மை செய்யக்கூடிய சக்தியாக மாற்றும்படி செய்கின்றனர்.

எவ்வளவு அழகாக ஞானிகள் நமக்கு இதைக் கொடுத்திருக்கின்றார்கள்...!