ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2022

கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் உலக மாற்றங்கள்...

உதாரணமாக 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய உணர்வலைகள் சூரியனுக்குச் செல்லும் பாதையில் துருவத்தின் வழி நம் பூமிக்குள் கவரப்பட்டால் நம் பூமியின் காற்றழுத்த மண்டலத்தில் மோதிய பின் அந்த உணர்வுகள் எரிக்கப்பட்டு அது பரவப்பட்டு மின்னலாக மாறுகிறது.

1.கடலிலே பட்டால் மணலாக மாறுகின்றது...
2.மரத்தில் பட்டால் மரம் கருகி விடுகின்றது.
3.அந்த மின்கதிர்களின் உணர்வுகள் பூமிக்கு அடியிலே சென்றால் நடு மையத்தில் கொதிகலனாக மாறுகின்றது.
4.இதிலே வந்த துகள்கள் அனைத்தும் பூமியிலே படர்ந்து விடுகின்றது.

ஆனால் இதற்கு எதிர்நிலையான நட்சத்திரங்களின் துகள்கள் நம் பூமியின் ஈர்ப்பிற்குள் வந்தால் அதனுடைய அழுத்தம் அதிகமானால் இந்த உணர்வலைகள் படர்ந்து இருக்கும் பொழுது இது இரண்டும் ஒன்றுக்கொன்று மோதும் போது சூறாவளியும் சுழிக்காற்றுகளும் உருவாகின்றது. இது இயற்கை...!

ஆனால் மின்னல்கள் கடலில் பட்டு மணலாக மாறியதை விஞ்ஞான அறிவு கொண்டு பிரித்து எடுத்து அதை யுரேனியமாக உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை வைத்து அணு உலைகளையும் விஷமான ஆயுதங்களையும் செய்து வைத்துள்ளார்கள்.
1.அதிலிருந்து வெளிப்பட்ட கசிவுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.
2.எங்கெங்கு இது அதிகமாகச் செயல்படுத்தினார்களோ அந்த நாட்டில் உள்ள காற்று மண்டலத்தில் இது அதிகமாகப் படர்ந்து கிடக்கின்றது.

ஆனால் இயற்கையாக நட்சத்திரங்களுடைய உணர்வலைகள் அழுத்தங்கள் வரும் சமயம்... அதனுடன் மனிதன் செயற்கையாக உருவாக்கி வெளிப்படுத்திய அணுக்கதிரியக்கங்கள் மோதும் பொழுது
1.மிக மிகக் கடுமையான சூறாவளியாக
2.எல்லாவற்றையும் துரித கதியில் அழிக்கும் நிலையாக வந்து விடுகிறது
3.(வெயிலோ மழையோ காற்றோ பனியோ எதுவாக இருந்தாலும் அது வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டே போகும்)
4.விஞ்ஞான அறிவால் செயல்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் இத்தகைய தீமைகள் படர்ந்து கொண்டே உள்ளது (TORNADO, CLOUDBURST, BOMB CYCLONE...)

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கே தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன்... அவன் உடலில் விளைந்த உணர்வுகள் பூமியிலே படர்ந்து கொண்டு தான் உள்ளது.

1.தென்னாட்டின் எல்லையில் அவனுடைய உணர்வுகள் அதிகமாக இருப்பதால்
2.அதை நாம் எளிதில் பெற்று அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானிகளாக உருவாகி
3.விஷத்தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகை
4.அந்த விஷத்தை நீக்கிடும் ஆற்றலை நாம் பெற வேண்டும்.

எத்தகைய விஷத்தையும் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் செலுத்தி அதை வலுவாக்கி அதன் உணர்வைப் பூமியில் பரப்ப வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை அடர்த்தியாக பூமியில் நாம் படரச் செய்யும் போது விஞ்ஞான அறிவால் உருவான விஷத்தன்மைகளை அகற்றி... இங்கே வாழும் மக்களை நாம் தெளிவாக்க முடியும்.

இதைப் படிப்போர் “அந்தத் தன்னம்பிக்கையுடன் செயல்படுத்துங்கள்...” அதே சமயத்தில் “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்... உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்...!”