ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2021

அகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த... இந்த மனித உடலில் விஷத்தை வென்றிடும் உணர்வின் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் சிறு குழந்தைப் பருவத்திலேயே வானுலகை உற்று நோக்கினான்.
 
1.இந்தப் பிரபஞ்சம் எப்படி இயக்குகின்றது...? என்றும்
2.பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு பல சக்திகள் வருகிறது...? என்றும்
3.அது பால்வெளி மண்டலங்களாக... தூசிகளாக எப்படி மாறுகிறது...? என்றும் கண்டுணர்ந்தான்
4.அவனால் அதை உணர முடிகின்றது... அவன் அறிவாக இயக்குகின்றது
5.அந்த வயதில் சொல்லாலோ செயலாலோ அவனால் வெளிப்படுத்த முடியவில்லை.
 
இருந்தாலும் அவன் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அவனுக்குள் விளைந்து அந்த மூச்சலைகள் வெளிப்படுகின்றது.
 
நம்முடைய கைக் குழந்தைக்கு அது பேசத் தெரியவில்லை என்றாலும் அது அழுகும் போது அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம்.
 
நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனுடைய முகங்கள் மாறுகின்றது. மகிழ்ச்சி என்ற உணர்வுகளை நுகரப்படும் போது அந்தக் குழந்தை சிரிப்பதையும் (வாய் அசைவுகளை) நாம் காண முடிகின்றது.
 
இதைப்போன்று தான் இந்த இயற்கையின் இயக்கங்களை உணர்ந்த அகஸ்தியன்
1.வானுலக உணர்வின் ஆற்றலை எல்லாம் உணர்ந்தான்
2.அவனுக்குள் அது விளைந்தது... அந்த உணர்வுகள் மூச்சலைகளாக வெளிப்படுத்தப்பட்டது.
 
அவன் உடலில் விளைந்த அந்த உணர்வு கொண்டு மற்ற தாவர இனங்களை இவன் கண்ணுற்றுப் பார்த்தால் அதனுடைய மணத்தை நுகர்ந்து அது எவ்வாறு விளைந்தது... என்றும் எதனெதன் இயக்கத்தில் இது கலந்து வளர்ந்தது...? என்றும் அவனால் முழுமையாக உணர முடிகின்றது.
 
தன் இளம் வயதில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது வானை உற்றுப் பார்த்து 27 நட்சத்திரங்கள் உமிழ்த்தும் எதிர்ப் பொறிகள் (கதிரியக்கங்கள்) மின்னலாக மாறி அது எவை எவை என்னென்ன செய்கிறது...? என்ற நிலையை உணர்ந்தவன் அகஸ்தியன்.
 
அது ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து அந்த அதிர்வுகளாக வெளி வருவதை கேது ராகு என்ற கோள்கள் அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விடுகின்றது.... “விஷத் தன்மை கொண்ட கோள்களாக” மாறுகின்றது.
 
நுகர்ந்ததை ஜீரணித்து தனக்குள் விஷப் பாறைகளாக மாற்றினாலும் அது வெளிப்படுத்தும் தூசி.. (அந்த மூச்சு) அது வெளி வரும்போது சூரியன் கவர்ந்து கொள்கின்றது.
 
சூரியன் தன் அருகிலே அதைக் கொண்டு வரும் பொழுது தனக்குள் விளைந்த பாதரசத்தால் அதைத் தாக்கிப் பிரித்து
1.ஒளிக் கதிர்களாக (ELECTRIC) நம் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்குகின்றது.
2.வெப்பம் காந்தம் விஷம் என்ற மூன்றும் (ELECTRON) கலந்த நிலையில் காந்தம் தனக்குள் மற்றொன்றைக் கவர்ந்திடும் சக்தியாக
3.எந்த ஆவியின் தன்மை (கோளின் சத்தோ நட்சத்திரத்தின் சத்தோ) இங்கே இருக்கின்றதோ அதைக் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொண்டால் அந்த உணவின் சத்தாக (NEUTRON) இயக்கும் அணுவாக மாறுகின்றது
4.முழுமை அடைந்தால் தன் இனமாக விளையத் தொடங்குகிறது (PROTON).
 
உதாரணமாக ஒரு விஷத்தின் தன்மை அது அடர்த்தியின் தன்மையாக வரும் பொழுது நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவி நாம் மயங்கி விடுகின்றோம்.
 
ஆகவே அதைப் போலத் தான் இந்த விஷத்தின் தன்மை (ELECTRON)  எதை எதை நுகர்கின்றதோ அதன் அணுக்கதிர்களாக மாறுகின்றது.  இப்படித்தான் நம் பிரபஞ்சம் இயக்குகிறது என்ற நிலையை முதன் முதலில் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
 
1.அவன் நுகர்ந்தறிந்த உணர்வுகளையும் அவனுக்குள் விளைந்த உணர்வுகளையும் நாம் நுகர்ந்தால்
2.அவனின் உணர்ச்சியின் இயக்கமாக நமக்குள் வருவதும்
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அகஸ்தியனைப் போன்றே எண்ணங்களாக வருவதும்
4.அந்த உணர்ச்சிக்கொப்பப இந்த உடலை இயக்கவும் நம்மைப் பாதுகாக்கும் தன்மையும் வருகின்றது.

அகஸ்தியன் கண்டுணர்ந்த பேரின்பத்தை... அவன் எவ்வாறு இந்த உலகில் அந்தப் பேரின்பத்தைப் பெற்றானோ அதைப் போல நாமும் பெற முடியும்.