ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2021

விரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…?

கஷ்டம்… துன்பம்… என்று எதுவுமே சொல்லாதீர்கள் என்று நான் (ஞானகுரு) அடிக்கடி சொன்னாலும் பெரும்பகுதியானோர் கேட்பதில்லை,
1.சீக்கிரம் நன்றாகிவிடும்…! என்று நல்ல வாக்கினை யாம் சொன்னால்
2.இரண்டாவது தரம்… குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கிறது என்றும்
3.குழந்தைக்கு இப்படி இருக்கிறது என்று திருப்பி இப்படிக் கேட்டு
4.யாம் சொன்னதைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.
 
வாக்கின் மூலமாகத் தான் ஞான வித்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். அதை வளர்த்துக் கொண்டால் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தை வளர்க்க முடியும்.
 
ஆனால் என்று தன்னம்பிக்கை இல்லாமல் தான் மீண்டும் மீண்டும் அப்படிக் கேட்கிறார்கள். ஏனென்றால்
1.உங்களுக்குள் ஏற்கனவே எது பதிவானதோ அந்த உணர்வுதான் அப்படி இயக்குகிறது
2.அதை மாற்றும் வல்லமை இல்லாது இருக்கின்றது.
3.அதன் உணர்வுக்கொப்ப அந்த அணுக்கள் தான் வளர்கிறது.
 
ஆக… அதை மாற்றும் வல்லமை உங்களுக்கு வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.
 
இங்கே உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு அந்த வலுவான நிலைகள் கொண்டு என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்…. எங்கள் தொழில் நன்றாக வளர வேண்டும்.. எங்கள் வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று அதற்குண்டான சக்தி வேண்டும் என்று கேட்டால் அந்தச் சக்தியைப் பெற்று நீங்கள் வளரலாம் அல்லவா…!
 
நீங்கள் இதைக் கேட்டு… அதன்படி நடக்கும்…! என்று நான் சொன்னால் அந்த அருள் சக்தியைப் பெற்று உங்களுக்குள் தீமை வளராது தடுக்க முடியும். உங்கள் சொல் செயல் மற்றவரையும் நல்லதாக்கும்…!
 
ஏனென்றால்… விரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்…!
 
நல்லதை விரும்பிக் கேட்காது… எனக்குக் கஷ்டமாக இருக்கிறது… தொல்லை என்னை விட்டே போக மாட்டேன் என்கிறது தொழிலே சரியாக நடக்கவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கின்றது என்று இதைத்தான் கேட்கிறார்கள்.
 
சாமியார் செய்வார்… சாமி செய்யும்… ஜோதிடம் செய்யும்…! என்று காசைக் கொடுத்துவிட்டு மோட்ச லோகத்திற்குப் போவதும் காசைக் கொடுத்து ஆண்டவனிடம் வரம் வாங்கும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.
 
ஆனால் நம்மை ஆள்பவன் உயிர் தான்…!
1.ஆண்டவனாக இருப்பதும் நாம் எண்ணியதை உருவாக்குவதும் நம்மை ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்.
2.அவனிடம் நீங்கள் வேண்டுங்கள்…
3.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலில் படர வேண்டும்
4.எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
5.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
6,எங்கள் பார்வை அனைவரையும் புனிதமாக்க வேண்டும்
7.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் நலம் பெறவேண்டும்
8.கனியைப் போன்ற இனிமையான நிலை எங்கள் வாழ்க்கையில் பெற வேண்டும்
9.எங்கள் சொல்லைக் கேட்போரும் அந்த நிலை பெற வேண்டும்
10.வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
11.நாங்கள் பார்ப்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும்
12.எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று உங்கள் உயிரிடம் கேட்டுப் பாருங்கள்.
 
கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் மேலே சொன்ன உணர்வுகளை அதிகமாகக் கூட்டிப் பழகுங்கள்.
 
மற்றவர்களுடைய துயரத்தையும் துன்பத்தையும் கேட்டறிந்தாலும் பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் வேதனையான உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தாலும் அடுத்த கணம் அந்த அருள் ஒளியை நீங்கள் எடுத்துப் பழகுங்கள்.
 
ஒளியான உணர்வுகள் வரும் போது தீமைகள் வராது தடுக்கும்.. பேரருள் உணர்வுகள் கூடும்… அதன் வழி நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழலாம். வாழ்க்கையில் வரும் துன்பத்தை அகற்றலாம்.
 
1.அருள் ஒளி பெறுங்கள்… அருள் ஞானம் பெறுங்கள்…! அருள் வழியில் பேரின்பம் பெறுங்கள்
2.பிறவி இல்லா நிலையை அடையும் பருவம் பெறுங்கள்.