ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2021

பெரும்பகுதியான தெய்வங்களின் காலடியிலே அசுரனைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன...?

ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை படரப்பட்டு நல்ல அணுக்களை வீழ்த்தி விடுகிறது.
 
இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?
 
“ஆதி மூலம் என்ற உயிர் தான்...” மிருக நிலையிலிருந்து தீமைகளை நீக்கிட வேண்டும் நீக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை வலு சேர்த்துச் சேர்த்து பரிணாம வளர்ச்சியாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது
 
நம் உயிரை ஈசனாகவும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக சிவமாகவும் இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட அந்த உணர்வு வினைக்கு நாயகனாகவும் இயங்குகிறது என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர் ஞானிகள்.
 
உடல் சிவம் என்றாலும் அதிலே நாம் சேர்த்துக் கொண்ட பல கோடி வினைகளுக்கொப்ப நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது...
1.இந்த கணங்களை எல்லாம் உருவாக்கியது உயிர் என்று அந்த உயிரை எண்ணி
2.இந்த கணங்களுக்கெல்லாம் ஈசா... “கணேசா...” என்று உயிரை வணங்கும்படி செய்கின்றனர்.
 
தீமைகளை நீக்கிக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி “கணபதி...”
 
1.நல்ல உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.அது தீமையை அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது என்ற நிலையை உணர்த்துவதற்காக
3.அங்குசபாசவா...! என்று விநாயகர் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது.
 
உடல் வலு பெற்றுப் பெற்றுத் தான் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தோம் என்று யானையின் சிரசை மனித உடலில் பொருத்திக் காட்டுகின்றனர். ஆனாலும் எண்ணத்தின் வலுக் கொண்டவன் தான் மனிதன்
 
பல கோடி உடல்களிலே புலிக்கும் வலு அதிகம்... மானுக்கும் வலு அதிகம்... புழுவிற்கும் வலு அதிகம்... ஒரு எறும்புக்கும் வலு அதிகம்...! ஏனென்றால் விஷத்தின் தன்மை அந்த உடலிலே அதிகமாக இருப்பதால் தான் தன் சக்திக்கு மீறிய எடை உள்ள பொருளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது ஒரு எறும்பு. ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை எதற்குள் அதிகம் இருக்கின்றதோ
2.அதிலே வலுவின் தன்மையும் அதிகம் இருக்கின்றது.
 
இப்படி உருவான இந்த நிலை தான் நாம் பல கோடிச் சரீரங்களில் நஞ்சை நீக்கி இந்த மனித உடல் பெற்ற நிலை. இருந்தாலும் மனிதனாக ஆன பின் நஞ்சை நீக்கும் அருள் சக்தி பெற்ற நாம்
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
 
துருவ நட்சத்திரம் மனிதாக இருந்து (அகஸ்தியன்) எப்படிப் பேரொளியாக மாறியதோ அந்த உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து அதனின் உணர்வை நம் உடலில் பெருக்கினால் அதன் உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பிறவி இல்லா நிலைகள் அடைவோம்.
 
இந்தப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத்தான் விநாயகரை வடமேற்காக வைத்து வடகிழக்காக நம்மை வணங்கும்படிச் செய்தார்கள். வடகிழக்காகத் தான் துருவ நட்சத்திரம் இருக்கின்றது. விநாயகருக்குப் பின்னாடி வேப்ப மரமும் அரச மரமும் வைத்தார்கள்.
 
மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கசந்த உணர்வைக் காட்ட வேப்ப மரத்தைக் காட்டினார்கள். அதே சமயத்தில்
1.இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையாக (துருவ நட்சத்திரம்)
2.இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றும் திறன் பெற்றதை அரசு என்றும்
3.அரச மரத்தை வைத்துக் காட்டினார்கள்.
 
பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உணர்வும் எதனின் நிலை கொண்டு செயல்படுகின்றதோ அதைத்தான் அங்கே வைத்துக் காட்டுகின்றார்கள்.
 
புராணத்தில் காட்டியபடி பார்த்தோம் என்றால் முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது என்று சொல்வார்கள். போர் நடக்கும் பொழுது கடைசியில் அசுரனை முருகன் கொல்கிறான்.
 
அந்தத் தருணத்தில் அசுரன் முருகனிடம் சொல்கிறான்...
1.நான் தோற்றுவிட்டேன்...
2.உன் காலடியிலே இருக்கின்றேன் என்று வரம் கேட்கிறான்.
 
ஆகையினால் அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்துத் தன் காலடியிலே முருகன் வைத்துக் கொண்டான் என்று இப்படிக் கதைகளைச் சொல்கிறார்கள்.
 
1.விஷம் என்ற நிலைகளை அடக்கும் சக்தி பெற்றதை உணர்த்தாதபடி
2.இப்படிப்பட்ட காரணங்களை இடையிலே இணைத்து விட்டார்கள்.
 
மயில் விஷத்தை உணவாக உட்கொண்டாலும் நஞ்சை அது அடக்கி ஆட்சி புரிகிறது என்று உணர்த்துவதற்காக மயிலின் காலடியில் விஷப் பாம்பைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.  
 
1.மனிதன் தன் ஆறாவது அறிவால் நஞ்சை அடக்கி
2.மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும் அருள் உணர்வை நாம் தெரிந்து உணர்ந்து
3.அதன் வழியின் நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதற்கு இவ்வாறு காட்டினார்கள்.