ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2021

உண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…! - ஈஸ்வரபட்டர்

குரு என்பவர் “தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”
 
தன்னிடம் வரும் சீடர்களுக்குப் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை. “தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கு… மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.
 
அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்
 
காரணம்… உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!
 
குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம்…! நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே...!”
 
உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.
 
மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது...!” என்ற உலக ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.
 
மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழியில் சென்றுவிடுவர்.
 
இதில் எல்லாம் தெளிந்தவர்கள்…
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலக ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
 
அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள். அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது...!
 
தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.
 
1.தனக்குச் சக்தி வேண்டியே...! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.
 
அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.
 
சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது.
 
வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது...!”
 
உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல...!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது...? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்து…
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.
 
ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலக ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்…
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.