ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2021

மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகைமை எப்படி வருகிறது...?

வாழ்க்கையில் குடும்பம் என்ற நிலையில் எவ்வளவோ அன்புடன் பண்புடன் வளர்ந்தாலும் சந்தர்ப்பத்த பேதத்தால் ஒருவர் ஒரு தவறைச் செய்து விடுகின்றார். உடனே சுர்.. என்று கோபம் வருகிறது.
1.ஒரு தடவை இப்படிக் கோபம் என்று நமக்குள் பதிவாக்கி விட்டால்
2.அடுத்த தரமும் அதே தவறைச் செய்தால் கோபம் எல்லை கடந்து விடுகிறது.
 
வேதனைப்படும் நிலைகள் ஆகி... நாசமாகப் போகிறவனே... ஏண்டா இந்த மாதிரிச் செய்கிறாய்...? என்று நம்மை அறியாமலே சாபமிடும் நிலை வந்துவிடுகின்றது. அவனைக் கெடுக்கும் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.
 
இதைப் போன்று நம்மை அறியாது நம் குடும்பத்தில் வளர்ந்து விடுகிறது. இதிலிருந்து நாம் மீள்வது எப்படி...?
 
அதே போல்... தொழிலின் நிமித்தம் நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். கடனாகக் கேட்கிறார் என்று பணத்தைக் கொடுத்து உதவி செய்கிறோம்.
 
இத்தனை நாள்களுக்குள் திரும்பக் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். ஆனால் மாதக் கணக்காகி விடுகின்றது. அப்பொழுது நம் மனதில் பணத்தைக் கொடுப்பானா... கொடுக்க மாட்டானா...? என்று எண்ணத் தொடங்குகிறோம்.
 
நம்முடைய இந்தச் சந்தேக உணர்வு அங்கே அவனுக்குள் இயக்கப்பட்டு நண்பரின் தொழில் வளர்ச்சியையும் தடைப்படுத்தும்.  
1.அவனுடைய சந்தர்ப்பம் வருவாய் வருவதைத் தடுக்கும்.
2.பணத்தைக் கொடுக்க வேண்டுமே என்ற வேதனையும் வரும்.
 
கொடுக்க முடியவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்கிறோம்.
 
இத்தனை நாளைக்குள் தருகிறேன் என்று பணத்தை வாங்கிச் சென்றாயே...! ஏம்ப்பா...! இன்னும் பணத்தைக் கொடுக்கவில்லை..? என்று வேகத்துடன் கேட்போம்.
 
சொல்லி வாங்கிச் சென்றாயே...! ஏன் இன்னும் உன்னால் கொடுக்க முடியவில்லை...? என்ற எண்ணத்துடன் கேட்போம். இந்த வெறுப்பின் தன்மை அடையப்படும் பொழுது பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் வேதனையை வளர்த்துக் கொள்கிறான்.
 
அதை நுகரப்படும் பொழுது நமக்குள்ளும் வேதனை உணர்வே வளர்ந்துவிடுகிறது. அப்போது நண்பனக இருந்தாலும் பகைமையாகி விடுகின்றது. 
 
பகைமை உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. இதைத் தான் இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து இத்தகைய நிலைகளைச் செயலாக்குகின்றான் என்று காவியத்தில் காட்டுகின்றார்கள்.
 
அதை மாற்ற அதோ வருகிறான் நாரதன்...! என்று கண்ணன் (கண்கள்) காட்டிய வழிப்படி “ஈஸ்வரா...” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.
 
பின் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவரை எண்ணி...
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.அவருடைய தொழில்கள் வளம் பெறவேண்டும்
3.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்   
4.பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எளிதான நிலைகள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
 
இப்படி எண்ணினால் நம் எண்ணம் அவனைக் காக்கின்றது. அதே சமயத்தில் அவனின் உணர்வும் வலுவாகின்றது. பணத்தைத் திரும்பச் செலுத்தும் நிலை வருகின்றது.
 
இது போன்ற நிலைகளைக் கூட்டுத் தியானத்தில் கூட்டமைப்பாக நாம் எண்ணித் தியானித்து வலு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பின் அதிகாலை துருவ தியானத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து நம் வாழ்க்கையில் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் வைரத்தைப் போல் அவர்கள் குடும்பம் ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று அவர்களை நாம் எண்ணுதல் வேண்டும்.
 
ஏனென்றால் அவர்கள் உணர்வெல்லாம் நம் உடலில் இருக்கின்றது. நமக்குள் அந்த உனர்வின் தன்மை விளையப்படும் போது அவர் பணம் திரும்பக் கொடுக்கவில்லை என்ற நிலையில் நம் உடலில் உருவான வேதனை அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.
 
இதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றோம்.
 
ஒவ்வொரு நாளும் நாம் வெண்மையான (தூய்மையான) உடையைத் தான் உடுத்துகின்றோம். ஆனால் காற்றிலிருக்கும் தூசி அதிலே பட்டபின் அதை இருளடையச் செய்துவிடுகின்றது.
 
இதைப் போன்று தான்...
1.நாம் நல்ல எண்ணம் கொண்டு வந்தாலும் பிறருடைய தீமையின் உணர்வை அறியத் தான் செய்கின்றோம்.
2.அந்தத் தீமையின் உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் தீமை செய்யும் அணுக்களாக விளைகின்றது.
3.இது இயற்கையின் நியதிகள்...!
 
ஆனால் மனிதனானவன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்ற நிலையில் இது போன்ற தீமைகளை அகற்றிவிட்டு தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை நமக்குள் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
 
இதனைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்தனர்... அங்குசபாசவா...! கார்த்திகேயா மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு இதை அடக்க முடியும். இதன்படி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

ஆகவே எல்லோருடைய நிலைகளையும் மகரிஷிகளின் ஒளி கொண்டு நமக்குள் சமப்படுத்தும் போது நம் எண்ணங்கள் ஒன்றாகின்றது. தீமைகளை நீக்கிவிடுகின்றது...!