ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2021

கர்வத்தை அகற்றினால் தான் ஞானம் பிறக்கும் - ஈஸ்வரபட்டர்

கொங்கணர் தன் ஞான வளர்ச்சிக்கு வித்தாக அன்று தேர்ந்தெடுத்துப் பிட்சை கேட்ட இல்லம் “உலகுக்குப் போதனை தந்த வள்ளுவனார் வாசுகி வாழ்ந்து வந்த இல்லம் தான்…!”
 
பிச்சாந்தேஹி..! என்று பல முறை கேட்டும் (ஒரு முறை தான் கூப்பிட வேண்டும் என்பது நியதி) அன்னமிட வராத காரணமும் பசியின் ஆதிக்கம் அன்று அதிகரித்து விட்டது.
 
அதே சமயத்தில் எச்சமிட்ட கொக்கை எரித்த தன் வல்லமையை நினைத்துக் கர்வம் மீண்டும் தலைக்கேற அதன் வழி கோபத்தின் வசமாக ஆவேசத்துடன் படபடத்துப் போன அந்த மகான் விழி சிவந்து நாசி புகை கிளம்ப கோபக் கனலாகத் தகித்து நின்றார்.
 
தனக்கு அன்னமிட வராத காரணம் அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணம் கொண்டு விறைத்து நின்றார்.
 
வெளி வந்த வாசுகி அம்மையும் கோபக்கனலாக ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயலாக நிற்கும் முனிவரின் நிலை கண்டு “எதனால் இந்த நிலை வந்தது...?” என்று சிந்திக்கத் தலைப்பட்டார்.
 
1.பின் தன் அறிவின் ஞானத்தால் தெளிந்து
2.முனிவரின் கோபத்தின் மூல காரணத்தையும் அறிந்து...
3.அவரின் “நான்” என்ற நிலை கண்டு அமைதியாகச் சிரித்தார்.
 
வெகுண்டெழுந்த கோபத்தால் முனிவன் வாசுகி அம்மையிடம் “ஆஹா… ஓர் தபசியைக் காக்கச் செய்த பின்னும்.. பல முறை குரல் கொடுத்தும்.. வெறும் கையோடு வந்ததன் காரணம் என்ன..? மமதை கொண்டு தாமதமாக வந்ததன் காரணம் கூறு..! என்றார் கொங்கணர்.
 
வாசுகி அம்மையோ அந்த முனிவரின் கர்வத்தை அடக்கும் விதமாக… முனிவரின் கோபத்தின் மூல காரணத்தை நொடியில் கூறி அவர் தம் கர்வத்தை நீக்கினார்.
 
“என்னையும் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே…!” என்றார் வாசுகி.
 
அந்தச் சொல்ல்லால் திகைத்துப் போன கொங்கணரும் தன் கோப நிலையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் இருக்கும் இந்தப் பெண் பிள்ளை கூறியதைக் கேட்டு அமைதியாகச் சிந்தனையின் வசமானார்…!
 
ஆற்றோரம் அமைதி பெறவேண்டி எடுத்த தவம் முற்றுப் பெற்று சக்தியின் பரிபூரணத்துத்தை முழுமை பெற விடாமல் என் கோபமே எனக்குத் தடையாகிப் போனது என்று உணரத் தொடங்கினார்.
 
காரணம்… அன்று நான் அமர்ந்திருந்த மரக்கிளை மேல் அமர்ந்த கொக்கு தன் எச்சத்தை இட அது என் தலை மேல் விழுந்தது. பகுத்தறிவற்ற ஓர் பறவை அறியாமல் செய்துவிட்ட செயலை என்னால் பொறுக்க முடியவில்லை.
 
பொறுக்காமல் நான் பெற்ற சக்தியின் செயல் கொண்டு சுட்டெரித்து விட்டேன்.
1.எச்சமிட்ட அந்தக் கொக்கை நான் சுட்டெரித்தேன்.
2.இன்றோ இந்தப் பெண்மணி என் கோபக்கனலையே சுட்டெரித்து விட்டாள்.
3.எம் அகத்தினைக் குளிரச் செய்து எனது “நான்…” என்ற அகங்காரத்தைப் பொடிப் பொடியாக்கி விட்டாள்.
4.வீட்டினுள் இருந்து கொண்டு இல்லறப் பயன் ஒழுகும் இந்தப் பெண்மணி பெற்ற தவத்தின் பேறு தான் என்னே…?
5.நான் காட்டில் தவம் கிடந்து என்ன பயன்…? இவள் அறிவின் ஞானக் கண் திறந்தாள் என்றெல்லாம் சிந்தித்தார் கொங்கணர்.
 
வாசுகி அம்மையைக் கும்பிட்டு “அம்மா ஞானம்பிகே..!” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன்.... பதில் கூற வேண்டும்...! என்று பணிவோடு பகர்ந்து... அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும்...! என்று வேண்டினார்.
 
வாசுகி அம்மை கூறுகின்றார்கள்…!
 
1.மண் சட்டியில் உணவில்லை (காரணம் வறுமை)
2.ஆதலால் விண் சட்டியில் உணவு உட்கொண்டிருந்தோம்…! (விண்ணின் ஆற்றலை எடுத்துக் கொண்டிருந்தோம்)
3.உமது குரல் எட்டா நிலையான அந்தப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததாலேயே காலதாமதம் ஆனது...! என்று சொல்கிறார்.
 
அம்மா..! இவ்வளவு ஞானத்தையும் உமக்குப் போதித்த குரு யாரம்மா…? என்றார் கொங்கணர்.
 
அவன் ஒரு “கசாப்புக் கடைக்காரன்…!” என்றார் கொல்லாமை போற்றிய வாசுகி அம்மை.
 
என்ன…! கசாப்புக் கடைக்காரன் ஞானம் போதித்தானா..? என்று ஆச்சரிய மேலிட்டால் கொங்கணவர் திகைத்து விட்டார்.
 
ஆம் கொங்கணரே..! கசாப்புக் கடைக்காரன் தான் என் குரு…! உண்மையைக் கூறுவது என்றால் என் உயிர் தான் அந்தக் கசாப்புக் கடைக்காரன்.
 
பேரண்ட இரகசியம் தெரியுமா…? என்றார் வாசுகி.
 
ஓர் உயிர் சக்தி சரீர கதி வளர்ச்சிக்கு உயிரணுக்களை உண்டு... உண்டுதான் வளர்ச்சியின் வலுவாகின்றது. ஆனால் அதுவே உணர்வுகளின் அதி ஆவேச செயலுடைய சரீரம் தொட்டுச் செயல்படும் “அணு செல்களின் மாமிசம்… என எண்ண வேண்டாம்….!”
 
1.உயரிய உயிர் சக்திக்கு வலு ஊட்டும்
2.காற்றின் ஆகார அமில அணுக்களைக் கொன்று சமைத்து உண்ணும் கசாப்புக் கடைக்காரன்... “என் உயிர் சக்தி தான்...”
3.அதுவே என் குரு…! என்று கொங்கணருக்கு சூட்சமப் பொருள் விளங்கக் கூறுகின்றார் அந்த வாசுகி அம்மை. 

உட்கொள்ளத் திட ஆகாரம் இல்லை என்றால்… வல்லமை கொண்ட உயரிய சக்தி பெற்ற முனிபுங்கவன் காற்றில் ஆகாரம் உண்ணும் ஞானப்பால் உட்கொண்டே தன் வளர்ச்சிக்கு வித்தாக்க வேண்டும் என்ற இந்தச் சூட்சமத்தை வாசுகி கூறியருள “கொங்கணர் வைராக்கியம் பெற்றார்…! கோபத்தை அகற்றித் தன் ஞானக்கண் திறந்தார்…!”