ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2021

இரத்தத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பற்றிய விளக்கம்

ஒவ்வொரு நாளும் நமக்குள் எத்தனையோ உணர்வுகளைக் கவர்ந்திருந்தாலும் தினமும் அதிகாலை துருவ தியான நேரத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா... என்று இரத்ததில் அந்த அரும் பெரும் சக்திகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.
 
ஜீவ அணு:
ஜீவ அணு என்றால் உதாரணமாக ஒரு பாம்பை நாம் அடிக்கின்றோம் என்றால் அந்த அணுக்கள் (பாம்பு வேதனைப்பட்ட) நம் உடலில் ஜீவ அணுக்களாக இரத்தத்திலே வளரும். உடலில் உள்ள உறுப்புகளில் போய் இணையும்.
 
அதற்குச் சாப்பாடு தேவை. வேதனைப்பட்ட அலைகளை எடுத்துத் தான் அது சாப்பிடும். நமக்கு வேதனையைக் கொடுக்கும்.
 
ஜீவ ஆன்மா
அந்தப் பாம்போ (பாம்பின் உயிராத்மா) மனிதனை உருவாக்கிய இந்திரீகத்தில் அது கருவாகப் போய்ச் சேர்ந்து விடும் அடுத்த உருவைப் பெறுவதற்கு...!
 
அந்த உருவைச் சேர்த்த பின் அந்தப் பாம்பின் தன்மை கொண்டு அந்த அணுவாக நமக்குள் உருவாகும். அதற்கு மாற்றத் தெரியாது. அதே உணர்ச்சிகளைத் தான் தூண்டிக் கொண்டிருக்கும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
2.அதற்குள்ளும் சேர்கின்றது (பாம்பின் ஆன்மா ஜீவான்மாவாக உள்ளதுக்கு).
3.மனிதனாகும் அந்த உணர்வுகள் கருக்களிலும் இந்த உணர்வை மாற்றும் வல்லமை பெறுகின்றது.
4.அந்த அணுக்கள் இந்தச் சக்தியைப் பெறும் போது இதுவும் நமக்குள் ஒத்தாசையாக வருகின்றது.
 
ஏனென்றால் நமக்குள் வந்து மனிதனாக உருப்பெறும் உணர்வை அங்கே வளர்த்திருக்கின்றது. ஆனால் அருள் ஒளியின் தன்மையை நாம் கூட்டும் போது இதுவும் அந்த ஒளியின் சுடராக மாறுகின்றது.
 
இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும் அது வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
 
அதற்குத்தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் நாம் பார்த்தவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்வது..!
 
வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் செயல் எல்லாம் ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்த்தோர் குடும்பமெல்லாம் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
1.என்று எத்தனை தடவை சொல்கிறீர்களோ
2.அது வரை உங்களுக்கு நன்மை தரும்.
 
இராமாயணத்தில் காட்டுகின்றனர்... ஜனகச் சக்கரவர்த்தி தன் வளர்ப்பு மகளான சீதாவைத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அங்கே வருவோர் அவரவர்கள் திறமைகளைக் காட்டும்படி சொல்கின்றனர்.
 
வந்தவர்கள் அனைவரும் அங்கிருக்கும் வில்லை எடுத்து அதில் அம்பை ஏற்றிக் குறி வைத்துத் தாக்குகின்றனர்... அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி..!
 
ஆனால் இராமன் வந்தவுடன்...  அவன் உணர்வுப்படி தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான். ஏனென்றால்...
1.தீமை செய்யும் எண்ணத்தை நீக்கிய பின்
2.சீதா அந்த மகிழ்ச்சி பெறும் குணத்தைத் தன் உடலுடன் அரவணைத்துக் கொண்டான்.
3.அதைத்தான் கல்யாணராமா என்பது...!
 
ஒவ்வொரு நாளும் தீமை செய்யும் உணர்வுகளை நீக்கிக் கொண்டே வந்தால் தான் நமக்குள் மகிழ்ச்சி என்ற நிலையை உருவாக்க முடியும். எதிரி என்றும் எதிர்ப்பு என்றும் இல்லாதபடி ஏகாந்தமாக வாழ முடியும்.

இந்த உடலுக்குப் பின் யார் ஈர்ப்பிலும் சிக்காது நம் உயிரான்மா அழியா ஒளிச் சரீரம் பெறும். இதைத்தான் இராமாயணம் தெளிவாக்குகின்றது.