ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2021

தன்னைத் தான் அறிந்த மெய் ஞானிகள் விண் சென்ற முறை

நிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.
 
அதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.
 
ஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது
1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று
2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.
 
ஏனென்றால் மூல சக்தியின் செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் மனிதர்கள் உணர்ந்து அறிதலே சிறப்பு. அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…!”
 
சொல் நாம சூட்சமத்தை விளக்கிடும் செயலில் செவிப்புலன் அறிவு என்பதில்
1.அகத்தின் பொருளைச் செவிமடுக்கும் தன்மை கொண்டு செயற்படுதல் உயர்ந்தது தான் என்றாலும்
2.சிந்தனை வசமாகத் தானே தன்னில் அறிந்து உணர்ந்து தெளிதலே அதி மேன்மையாகும்.
 
வாயு ஸ்தம்பம் என்றிட்ட ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.
 
பைராகிகளின் தொடர்பில் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை தாவரங்களின் ஈர்ப்பில் இயல் தன்மைகளைக் கொண்டு அறிந்தாலும் அதை அறிந்து  கொண்டபின் அனுபோக முறை (அனுபவத்தால்) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது “அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,..”
 
மூலிகையின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளில் பதப்படுத்தப்பட்டுப் பக்குவமாக விளக்கிற்குத் திரி என்ற அமைப்புச் செயலில் ஏற்றப்படும் ஒளி தீபமும் அதனுள் இருந்து வெளிப்படும் புகை காற்றின் அடர்வை மெலிதாக்கி மேல் நோக்கிக் கிளப்பும் சூட்சமம் உணர்ந்து உலோகக் கூண்டுகளில் அதை உள் நிரப்பி அக்கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்திட்ட செயலில் அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தனர் அன்றைய மெய் ஞானிகள்.
 
1.பூமித் தாய் சக்தியை இன்றைய விஞ்ஞானம் (அணுக்கதிரியக்கம்) கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்
2.அன்றைய மெய் ஞானிகள் இயற்கை முறையில் அதைச் செய்வித்தனர்.
 
இப்படிப்பட்ட அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல் வெளிப்படுத்திய சூட்சமங்களே இன்றைய விஞ்ஞானத்திற்கு மூலம்.
 
மெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைத்த... செயல் சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து... சிவஸ்வரூபத்தின் மூலத்தை அறிந்து... அதனுள் அதுவாக ஒன்றி தான் வேறல்ல ஈசன் வேறல்ல என்ற மனப்பக்குவம் மனத் தூய்மை கொண்டு... அகத்தின் பொருள் கண்டறிந்து பரம் பொருளை அறியும் மார்க்கம் தான் மெய் ஞானிகள் கண்டறிந்து உரைத்தது..!
 
இதை எல்லாம்...
1.சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது
2.அறிந்ததை உணர்ந்து கொண்டு தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் நிலையாக
3.பிரம்ம சாயுஜ்யம் (ஈசன் வேறல்ல நாம் வேறல்ல) பெறும் ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு வலுக் கூட்ட வேண்டும்.
 
மிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனுண்டு. ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதன் பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற திறன் உடையவன் ஆகின்றான்.
 
இயற்கை ஞானத்தை வளர் ஞானமாக்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை... மூலச் சக்தியை அறிந்து கொள்ள... மகரிஷிகளால் ஊட்டப்படும் பேரருள் பேரொளியைப் பெற்றிடும் பக்குவத்திற்கு வர வேண்டும்.
 
மனிதச் சரீரம் என்ற இந்தப் பிண்டத்தைக் கொண்டு
1.உலகோதய ஆசை என்ற மாய வலைக்குள் சிக்காவண்ணம்...
2.அகத்தின் எண்ணச் செயலில் தூய்மையும்...
3.வாக்கு வன்மையும் பெற்று... அன்பின் வழித் தொடரில் கனிவும்...
4.செயலில் பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியமும் பெற்றிடும் பாத்திரமாக
5.தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

மூவுலகை ஆட்டுவிக்கும் மூல சக்தியின் செயலை உணர வேண்டும் என்றால் தன்னைத்தான் உணரும் செயலில் தான் அதை அறிந்து கொள்ள முடியும்.