ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2021

பிறப்பு... இறப்பு... மீண்டும் பிறப்பு...! என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் - ஈஸ்வரபட்டர்

இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம். விதி வந்து விட்டது... அதனால் மடிந்து விட்டான்...! என்கிறோம்.
1.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
2.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல...!
 
பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.
 
எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.
 
கலி முடிந்து கல்கி வருகிறது...! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.
 
உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை... மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.
 
மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக... பூச்சியாக... மீனாக... நண்டாக...!
 
ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.
 
மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து...
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான்.
3.மனிதனில் இருந்து மிருகமாகி... மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசியில் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.
 
இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள் என்று சொல்கிறேன்.
 
இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.
 
ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்... ஈசன் அருளைப் பெற்றிடலாம்...! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்...!” என்று பல முறை உணர்த்தினேன்.
 
இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்...” என்ற பொருளும் இதுவேதான்.
 
உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.
 
இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா... எண்ணத்தின் கற்றலிலே...! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே...

புரிந்ததா...?