ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 8, 2021

தன்னைத் தான் அறிந்திடும் நிலையை மக்களுக்கு ஞானிகள் ஊட்டிய வழி முறை

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.
 
இதை உணர்த்துவதற்காகதான் சிவ ரூபத்தைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
 
சிவனுக்குப் போட்டிருக்கும் ஆடைகளைப் பார்த்தால் யானைத் தொலி (தோல்) புலித் தொலி மான் தொலி என்று காட்டியிருப்பார்கள். நாம் அந்தந்தச் சரீரத்தை எல்லாம் பெற்றுத் தான் இந்த மனித உடலாக வந்தோம்.
 
சிவன் கையிலே திரிசுலம் இருக்கும்... அதிலே உடுக்கையும் இருக்கும்.
1.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற இதனின் இயக்கத்தில் தான்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் எது எது இணைகின்றதோ அது “ஒலியாகின்றது...” (திரிசூலத்தில் உடுக்கையை வைத்தது இதற்குத் தான்)
3.முதலில் மோதும் இசைகள் அதனுடன் ஒடுங்கி விடுகிறது
4.மீண்டும் மற்றொன்றின் ஒலிகள் இணைந்த பின் மறுபடியும் சுருதிகள் மாறுகின்றது.
5.சிவன் உலகை ஆட்டிப் படைக்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.
 
ஆக சிவ உருவத்தைக் கண்ணுற்றுப் பார்த்தாலே உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைக் காட்டுகின்றார்கள்.
 
சிரசில் பட்டைகள் மூன்று இருக்கும். விபூதியால் பூசப்பட்டிருப்பினும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும்
1.தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
2.அது தனக்குள் அங்கீகரித்துக் கொள்கிறது... தன் நிலையை மாற்றிக் கொள்கிறது என்ற நிலையை
3.நாம் அறிவதற்காக இவ்வாறு வைத்துள்ளார்கள்.
 
சிவனின் சிரசில் கங்கையும்... சிவன் பாதி சக்தி பாதி என்றும் காட்டுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் வெப்பம் கலந்தே இருக்கும். அந்த வெப்பத்தின் இயக்கத்தால் தான் அனைத்தும் இயங்குகிறது என்று பராசக்தியாகக் காட்டி “இந்த வெப்பம் சர்வத்தையும் உருவாக்கும்...” என்ற நிலையை இங்கே தெளிவாக்குகின்றார்கள்.
 
சிவன் உடல் முழுவதிலும் பாம்பைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள். ஜடா முடியிலும் இந்த விஷப் பாம்பு இருக்கும்.
1.ஒவ்வொரு அணுக்களிலும் உள்ள இந்த விஷமே
2.இயங்குவதற்கு மூல காரணம் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.
 
இப்படி ஒரு உருவத்தைக் காட்டி அருவ நிலையின் செயலாக்கமும்... சேர்ந்த பின் இந்த உருவத்தின் நிலைகள் எவ்வாறு...? (உருப் பெறுகிறது) என்று தெளிவாக்குகின்றது நம் வேதங்கள்.
 
வேதங்களின் மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரிக் சாம அதர்வண யஜூர் என்று முழுமையாக யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அறிந்து கொண்டால்
1.எப்படி எல்லாம் உருவாகி இன்று மனிதனாக வந்துள்ளோம் என்று தன்னை அறிந்திட முடியும்.
2.தன்னைத் தான் அறிந்தவன் (ஞானிகள்) வெளிப்படுத்திய உணர்வு தான்
3.சூட்சமத்தில் நடப்பதை உருவமாக எப்படி வருகிறது என்பதனை உருவத்தை அமைத்துத் தெளிவாக்கினார்கள் ஞானிகள்.
 
ஜடாமுடியில் கங்கை சிவன் பாதி சக்தி பாதி என்று உடலில் சரி பகுதி வைத்துள்ளார்கள்... அர்த்தநாரீஸ்வரர். சிரசிலே பிறைச் சந்திரன்.
 
காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் இரண்டறக் கலந்து விட்டால் அதுவும் இதுவும் கலக்கப்படும் போது சரி பகுதியாக மாறுகின்றது. இதன் ஒளியும் மங்குகிறது... அதன் ஒளியும் மங்குகிறது.
 
இப்படி மாறுவதைக் காட்டுவதற்குத்தான் சிவனின் சிரசிலேயும் பிறைச் சந்திரனைப் போட்டுள்ளார்கள்.
 
இதை எல்லாம் ஞானிகள் தன் இன மக்களுக்குத் தன்னை அறிந்து செயல்படும் வல்லமை வர வேண்டும் என்பதற்குத் தான் அருவத்தை உருவமாக்கிக் காட்டினார்கள்.
 
1.நாம் மனிதனாக எப்படிப் பிறந்தோம்...?
2.அணுக்களின் செயலாக்கங்கள் எது...? என்ற நிலையைத் தான்
3.வேதங்களில் நான்கு மறைக்குள் உலகமே அடங்கியுள்ளது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.