ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2017

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 2

“உருவங்களைக் காட்டி.., அருவத்தின் செயல்கள் நம்மை எப்படி மாற்றுகிறது?” என்பதைக் காட்டுவதற்குத்தான் காவியங்கள் படைக்கப்பட்டது
நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் கொண்டு வளர்ந்து வரப்படும்போது கோபம் என்ற உணர்வுகளை எடுத்தால் என்ன ஆகும்?

நமக்குள் மகிழ்ச்சியுற்ற நிலைகளை இழந்துவிடுவோம்.

பிறரை மகிழச் செய்யும் நிலைகளையும் இழக்கச் செய்து கோபத்துடன் கொதித்தெழும் நிலைகளில் தாக்கும் உணர்வுதான் நமக்கு வருகின்றது.

இதைப் போல வரும்போது அந்தக் கோபத்தின் உணர்வை நம் உயிர் அது ஈசனாக உருவாக்கி “இந்திரலோகமாக மாற்றி நமக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வுக்கு மாறாக “இரத்தக் கொதிப்பு என்ற உணர்வை உருவாக்குகின்றது.

இதனால் நம்மையறியாமலே அடுத்தவர்கள் மேல் கோபப்படும் உணர்வு நமக்குள் உருவாகிவிடுகின்றது.

நாம் எண்ணும் உணர்வுகள் எதுவோ அதை உயிர் பிரம்மமாக மாற்றி அந்த உணர்வின் தன்மை சிவமாக (உடலாக) மாற்றிக் கொண்டே உள்ளது.

புலி எப்படி இரக்கமற்றுக் கொன்று தன் உணவைப் புசிக்கின்றதோ இதைப் போன்று மனிதனுக்கும் கோபம் வந்துவிட்டால்.., எதையும் கோபத்துடன் தாக்கும் நிலையும் மற்றவரைக் கோபமாகப் பேசும் நிலையும் அதிகமாகின்றது.

அங்கே சிவன் ஆலயத்தில் என்ன இருக்கின்றது? நந்தீஸ்வரன்.

நாம் சுவாசித்த உணர்வுகள் நந்தீஸ்வரா. சுவாசித்த உணர்வுகளை உடலுக்குள் அணுக்களாக உயிர் உருவாக்கி அந்தக் கணக்கின் பிரகாரம் “அடுத்த உடலை உருவாக்கும்..,” என்ற நிலைதான் சிவ தத்துவம் தெளிவாகக் கூறுகின்றது.

புலியின் உடலும் சிவமே. அதனின் கொடூர உணர்வுகள் அது விஷ்ணு வரம் கொடுத்துவிடுகிறான். அந்த பிரம்மலோகமாக அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உணர்வின் அணுக்களை அங்கே விளைவிக்கின்றான். அதன் வழி உடலாகின்றது. ஆகவே இது புலியாக மாறுகின்றது.

புலியாக இருந்த நாம்.., “இன்று மனிதனாக வந்துள்ளோம் என்று காட்டுவதற்காக மான்.., புலி.., யானை.., என்ற இந்த உடலை ஆடைகளாகச் சிவன் அணிந்தான் என்று சிவ தத்துவத்தில் கூறப்படுகின்றது.

இதைப் போல பலவிதமான உடல்களை நாம் எடுத்துத் தான் இன்று நாம் மனிதனாக வந்தோம் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

சிவன் உடலில் இவ்வொரு மணிக்கட்டிலேயும் “விஷத்தின் துளிகளை.., அந்தப் பாம்பினை.., அதைக் காப்பாகப் போட்டிருப்பார்கள்.

கழுத்திலே பாம்பு ஜடா முடியிலே பாம்பு கைகளிலே பாம்பு என்ற நிலையும் “எல்லாவற்றிலும் இயக்கம்.., விஷத்தின் இயக்கமே என்று நாம் அறிந்து கொள்வதற்குத்தான் சிவ தத்துவத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

இதையெல்லாம் நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனித இனத்தைக் காத்து தான் மனிதனான பின் இனி பிறவியில்லா நிலைகள் எவ்வாறு அடைய வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

மனிதனான பின் நாம் எதை நுகர வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.

தன்னை அறியாத நிலைகளில் தீமைகளை நுகர்ந்தால்
1.அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்
2.எப்படி மனதைச் சுத்தப்படுத்த வேண்டும்
3.தீமைகள் வராது நமக்குள் எப்படித் தடுத்தல் வேண்டும்
என்பதைத்தான் இராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், சிவ புராணம் விநாயக புராணம் என்ற காவியங்கள் உணர்த்துகின்றது. இவ்வாறு அந்தக் காவியங்களைப் படைத்தவர்கள் மெய்ஞானிகள்.

1.அதிலே உருவத்தை அமைத்து.., “அருவச் செயல்கள் நம்மை எப்படி மாற்றுகின்றது?
2.வாழ்க்கையின் எப்படி ரூபங்களை மாற்றுகின்றது?
3.அடுத்த பிறவிகளை எப்படி மாற்றிக் கொண்டேயிருக்கிறது?
4.உடல்களை நமது உயிர் எப்படி மாற்றுகிறது?
என்பதை நமது காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

“என் சொல் செயல்” உங்களை நல்லதாக்குவது போல் – “உங்கள் சொல் செயல்” மற்றவர்களை நல்லதாக்க வேண்டும்

இந்தப் பூவுலகில் அகஸ்தியன் சர்வ தீமைகளையும் அகற்றி சர்வ தீமைகளையும் அகற்றிடும் பேரருளைப் பெற்று நமது பூமியின் “துருவ நிலையின் நேராக நின்று.., துருவ நட்சத்திரமாக.., வடகிழக்காக அமைந்துள்ளான்”.

துருவ நட்சத்திரம் எத்தகையை விஷத் தன்மைகளானாலும் தீமைகளானாலும் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டயுள்ளது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைக் கவரும்படி செய்தார் நமது குருநாதர். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை நுகரச் செய்து.., என் உடலுக்குள் வந்த.., “தீமைகளை மாற்றியமைக்கும்” முறையினைச் சொன்னார்.

அதன் வழி என் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கினேன். அவர் எனக்குக் காட்டிய அதே வழியில் குரு கொடுத்த அருள் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்துவிட்டேன்.

1971ல் வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நம் குரு ஒளி உடல் பெற்ற நாள். தீமைகளை வென்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தார்.

அவரைப் போலவே நீங்களும் தீமைகளை அகற்றுங்கள். இந்த உடலுக்குப் பின் ஒளியாக மாற்றுங்கள். உங்களால் முடியும்.

நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களை மாற்ற முடியாது. “சாமி மாற்றுவார்.., சாமியார்..,” என்று நான் சொன்னால் உங்களை ஏமாற்றுவதாகத் தான் அர்த்தம்.

ஏனென்றால்.., நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் அதை அணுவாக மாற்றுகின்றது.

“நீங்கள் எல்லோரும் அருள்ஞானம் பெறவேண்டும்” என்று எண்ணும் பொழுது தான் நானும் அதைப் பெறுகின்றேன்.

இதைப் போல நீங்களும் “உலக மக்கள் அனைவரும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் நீங்களும் பெறலாம்.

ஆகவே, குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய  அருள் வழியைப் பின்பற்றி நடக்கும்போது நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்?

1.நான் ஒருவரைப் பார்த்தேன்…, அவரின் தீமைகளைக் கேட்டேன்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றேன்
3.அவர் நன்றாக ஆக வேண்டும் என்று சொன்னேன்.
4.”அவர்கள் நன்றாக ஆனார்கள்…,” என்று இந்த சந்தோஷம் உங்களுக்கு வரவேண்டும்.., “வரும்”. 
இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

அதை விட்டுவிட்டு “என்னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றான்.., இரு.., நான் அவனைப் பார்க்கிறேன்.., அவனைத் தொலைத்து விடுகிறேன்” என்ற நிலை வரக்கூடாது.

அதற்குப் பதிலாக அந்த அருள் உணர்வை நான் பெற்றேன். “என்னைத் திட்டியவர்கள் தீமையிலிருந்து விடுபட்டனர்…, அவர்கள் நல்லவர்களாக ஆனார்கள்” என்று இப்படிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும்.

அதைப் போல நோயுற்றவர்களாக இருந்தால்.., “என் பார்வையால் சொல்லால் மூச்சால் அவர்கள் நோய் விலகியது” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.

இதை நீங்கள் ஒரு பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.

குரு எனக்கு இதைத்தான் காட்டினார். அதைத்தான் நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன். பதிவாக்குகின்றேன்.

“இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவது” உங்களுடைய பொறுப்பு. ஆகவே,

பகைமையை மாற்றுங்கள்.
பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள். 
அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். 
அரவணைக்கும் சக்தியை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள். 
பேரன்பை உருவாக்குங்கள்…, பேரிருளை மாற்றுங்கள்.
பேரன்பைக் கூட்டினால் நமக்குள் இருள் என்ற நிலைகள் வராது தடுக்க முடியும்.


நாமெல்லாம் அருள் வழியில் செல்வோம். இனி விஞ்ஞான உலகில் வரும் கடும் விஷத்தன்மைகளிலிருந்து மாற்றியமைப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.

March 30, 2017

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 1

பல கடவுள்கள் இன்று இருக்கின்றது, ஏன்?
நாராயணன் என்ற நிலைகள் சூரியன் என்றாலும் சர்வேஸ்வரன் – சர்வத்தையும் உருவாக்கும் உணர்வுகள் அதனின் தொடர் வரிசையாக வருகின்றது.

நமக்குள் உயிர் ஈசனாக இருந்து அதனால் வளர்க்கப்பட்ட நிலைகள் கொண்டு நாம் பேசினாலும் இந்த உணர்வைச் சூரியனின் காந்தசக்தி கவர்கின்றது.

என் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை பதிவானாலும் இதன் உணர்வைத் தனக்குள் உணவாக்குவதற்கு சூரியனின் இயக்கமே எனக்குள் அது உருவாக்குவதற்கும் காரணமாக இருக்கின்றது.

ஆனால், அதற்குள் என் உயிர் ஈசனாக இருந்து என்னை எப்படி இயக்குகிறது என்ற நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

சர்வேஸ்வரன் என்றும் நாராயணன் என்றும் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது? என்றும் மனிதனானபின் எப்படி ஈசனாக இருந்து மனிதனாக உருவாக்கி இந்த உணர்வின் தன்மை சர்வத்தையும் அறியும் தன்மை வருகின்றது என்று கண்டவன் அந்த மெய் ஞானி.

ஆக, சூரியன் சர்வேஸ்வரனாக இருப்பினும் நமது உணர்வின் தன்மை உயிரின் துணை கொண்டு சர்வத்தையும் உணரும் தன்மை வருகின்றது.

மனிதனான பின் நாம் எண்ணத்தால் அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கி நாம் முழுமையான நிலையில் உருவாக்கும் தன்மை பெற்றவர்கள்.

அப்படி உருவாக்கிய நிலையை உண்மையை அறிந்தபின் தான் அரசர்கள் அவர்கள் இஷ்டத்திற்குத் தக்கவாறு மதங்களை உருவாக்கி விட்டார்கள்.

மதத்தின் நிலை கொண்டு அந்த உணர்வின் நிலையைப் பதியச் செய்து அந்த உணர்வின் வழியிலே நமக்குள் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்தச் செய்து அதை நமக்குள் உருவாக்கிவிட்டார்கள்.

பதிந்த உணர்வின் வழிப்படி “இந்த மதம்.., இது தான் எங்கள் கடவுள்..,” நமக்குள் பதிந்த உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கிவிட்டால் “இது எங்கள் கடவுள்.., எங்களுக்குச் சொந்தமாகின்றது”.

அந்த மதத்திற்குள்ளேயே இன்னொருவர் அதாவது ஒரு அரசனின் மக்களில் இரண்டு பேருக்குள் போர் முறைகள் வந்து பிரிந்து கொண்டால் அவர் சொன்ன கடவுள் எனக்குத் துரோகம் செய்துவிட்டது.

என் தந்தை அவர் வணங்கிய கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டார்  இன்னொரு மகனுக்கு அதிகமாகவும் எனக்குத் தாழமையாகவும் கொடுத்தார்.

ஆகையினால் அந்தக் கடவுள் பொய்யான கடவுள் என்று அதிலே சிறிது பிரித்துவிட்டு இந்தச் சட்டத்தை மாற்றி இதற்குள் இந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிய வைத்து இவர் ஒரு கடவுளை உருவாக்குவார்.

இப்படி மதத்திற்குள் இனமாக இன்றும் ஒவ்வொரு மதத்திலும் நடக்கும் போர் முறைகளைப் பார்க்கலாம்.

ஆக, மனிதனால் உருவாக்கிய உணர்வுகள் தான் கடவுளாக நம் உயிர் உருவாக்கி அந்த உணர்வின் செயலாக எப்படி உருவாக்குகிறது என்ற நிலையைத் தெரிந்து கொண்டால் நல்லது.

நாம் மனிதன் எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை நம் உயிர் அந்த இச்சைக்கொப்ப உணர்வை நுகர்ந்து அதன் வழி இந்த உடலை அழைத்துச் செல்கின்றது – மூஷிகவாகனா.

நாம் சுவாசித்த உணர்வுகள் வாகனமாக அமைந்து அந்தந்த வாழ்க்கையிலே அமைக்கின்றது.

இதிலே எந்தெந்த குணங்கள் அதிகமாகச் சந்திக்கும் சந்தர்ப்பமாகி வளர்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகி அதன் உணர்வின் ரூபமாக நம்மை மாற்றுகின்றது என்ற நிலையையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

உயிரான ஈசனுக்கு மதமுமில்லை, இனமுமில்லை.

நமக்குள் உள் நின்று இயக்கும் சக்தி கடவுள். எந்த குணத்தின் தன்மையை நுகர்கின்றோமோ அதை நம் உயிர் இயக்கி அந்த உணர்வின் செயலே தெய்வமாக நம்மை இயக்குகின்றது என்பதே ஞானிகள் உணர்த்திய பேருண்மைகள்.

மனிதன் தன்னைத் தான் அறிந்து விண் செல்லும் நிலை பெறச் செய்வதற்கே அன்றைய ஞானிகள் காவியங்களைத் தீட்டி காரணப் பெயர்களைக் கொடுத்தார்கள் சாஸ்திர வடிவில்.

நாம் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பழனியில் “பித்தரைப் போன்று" இருந்த இருந்த குருநாதர் ஆண்டவனுக்கு டெலிஃபோன் செய்கிறேன் என்றார்

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பழனியில் ஒரு பித்தரைப் போல இருப்பார் என்றாலும் பிறர் அவரைப் “பித்தர்” என்றே எண்ணுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பித்துப் பிடித்துச் செல்வம் தேட வேண்டும் என்று எண்ணுவான். அதே சமயத்தில் செல்வத்தில் குறை என்றால் பித்துப் பிடித்து “வெறி பிடித்தவன்” போல் மற்றவரை எப்படித் தாக்குகின்றான்…!

பித்துப் பிடித்து மற்றவர்களுக்கு எப்படித் தொல்லைகள் கொடுக்கின்றான்…! ஒவ்வொரு மனிதனும் “பித்துப்பிடித்துத்தான் அலைகின்றான்” என்று சொல்வார்.

குருநாதர் போஸ்ட் கம்பத்தில் கல்லைக் கொண்டு தட்டுவார். அலோ.., ஹலோ.., என்பார்.

“ஏன் சாமி.., கல்லைக் கொண்டு போஸ்ட் கம்பத்தில் தட்டுகிறீர்கள்..,?” என்று கேட்டேன்

நீ தான்டா.., கேட்கின்றாய். மற்ற எல்லோருமே என்னைப் “பைத்தியக்காரன்..,” என்று சொல்கின்றார்கள். நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார்.

என்ன சாமி டெலிபோன் செய்கின்றீர்கள்?

இந்தக் கம்பத்தின் மூலம் ஆண்டவனுக்கே அனுப்புகின்றேன். அந்த ஆண்டவன் என்பது “யார் தெரியுமா..,?” என்றார்.

நான் தட்டும் உணர்வுகள் சேர்த்து “உயிரில் பட்டபின்” அந்த ஆண்டவன் என்ன செய்கின்றான்? இந்த உணர்வை என்னைச் செயல்படுத்தச் சொல்கின்றான்.

தட்டும் பொழுது நான்.., எதை எண்ணித் தட்டுகின்றேன்?

ஏனென்றால்.., “தட்டும் பொழுது.., சப்தம் வருகின்றது”. ஒவ்வொரு பொருளிலும் தட்டும் பொழுது அதில் என்னென்ன நாதம் வருகின்றது?

கல்லில் தட்டினால் ஒரு நாதம் மண்ணிலே தட்டினால் ஒரு நாதம் மரத்தில் தட்டினால் ஒரு நாதம் உலோகத்தில் தட்டினால் அது ஒரு நாதம்.

ஆக, உணர்வின் ஒலியின் நிலைகள் நான் தட்டும் பொழுது என் உயிரான இவனுக்கே எட்டுகின்றது. அப்படி எட்டும் பொழுது நான் என்ன செய்கிறேன்?

1.இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தெரிந்து வாழ வேண்டும்.
2.அந்த ஆண்டவன் கட்டிய ஆலயத்தில் அவர்கள் பரிசுத்த நிலைகள் பெறவேண்டும்.
3.அவர்கள் புனிதம் பெறவேண்டும்.
4.புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.புனிதமான ஆலயமாக மாற்றவேண்டும்.
இப்படி இதை நினைத்து நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார் குருநாதர்.

ஆனால், வழக்கமாக நாம் டெலிபோன் செய்தால் மற்றவர்களிடம் என்ன கேட்கின்றோம்?

உங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கின்றார்களா? என்ன..,? ஏது…? என்று கேட்கின்றோம்.

அதனால் என்னை ஆளும் ஆண்டவனுக்கு இதைத் தட்டி அவனுக்குள் இந்த உணர்ச்சியை ஊட்டுகின்றேன் என்கிறார் குருநாதர்.

1.உலக மக்கள் தன்னையறியாமல் எத்தனையோ நிலைகளை செய்கின்றனர்.
2.இந்த உடலாசை கொண்டு அவர்களை இயக்கும் ஆண்டவனை மறந்துவிட்டார்கள்.
3.அவர்களை ஆளக்கூடிய ஆண்டவனை மறந்து வாழ்கின்றனர்.

அவர்களுக்கெல்லாம் “அந்த ஆண்டவனை நினைவுபடுத்துவதற்கு” இதை நான் பாய்ச்சினேன்.

என்னைப் “பித்தன்..,” என்கிறான். ஆனால் அவன் பித்தனாக இருக்கின்றான்.

தன் காரியம் செயல்படுத்தவில்லை என்றால் “எத்தனாகவே.., மாறிவிடுகின்றான்”. பிறருக்குத் தொல்லை கொடுத்து வாழும் எத்தனாக வாழ்கின்றான்.

இவனை எத்தன் என்று மற்றொருவன் சொல்கின்றான். ஆக அவனும் பித்தனாகவே மாறுகின்றான். அடுத்து அவனும் எத்தனாகவே மாறிக் கொண்டிருக்கின்றான்.

அவன் உடலிலே வாழும் “அவன் உடலை உருவாக்கிய.., அந்த உணர்வின் ஈசனை மறந்து விட்டான்”. அந்த ஈசனே இவனை ஆள்கின்றான் என்று அந்த ஆண்டவனை மறந்து மனிதனான பின் மறந்தே வாழ்கின்றார்கள்.

எமக்குள் (ஞானகுரு) இதைத் தெரியப்படுத்துகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

“நீ தான்.., கேட்டாய்… அதனால் உனக்குச் சொல்கின்றேன்”.

“மற்ற எவனும்” கேட்கவில்லை. அவனுக்குச் சொல்லவில்லை. அவனுக்கு டெலிபோன் பண்றேன்.

அவன் உடலில் உள்ள “ஆண்டவன்” அவனை ஆள்கின்றது. அவனுகெல்லாம் “நல்ல சிந்தனை கொடு..,” என்று அவனுக்கு (ஆண்டவனுக்கு) நான் டெலிபோன் செய்கின்றேன்.

இப்பொழுது யாம் உபதேசிப்பதை நீங்கள் கேட்டால் உங்களுக்குக் கிடைக்கின்றது.

ஆனால் கேட்டுக் கொண்டிருந்தாலும்.., “ஏதோ பைத்தியக்காரன் சொல்கின்றான்.., ஊரை ஏமாற்றுகின்றான்..,” என்று சொன்னால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? அவரவர்கள் ஆசை கொண்டு (அவர்கள்) பைத்தியமாக இருக்கின்றார்கள்.

ஆனால், நான் என்ன செய்கின்றேன்? என்று (குருநாதர்) என்னிடம் கேட்கின்றார். என் உடலில் உள்ள துணியை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டேன். ஏனென்றால், எனக்கு “இந்த ஆடை” பாதுகாப்பாக இல்லை.

அவர்களுக்குள் இருக்கும் எல்லா ஆண்டவனுக்கும் டெலிபோன் செய்கின்றேன்.
1.அந்த உடலை நீ பாதுகாத்துக் கொள்
2.அந்த உடலுக்குள் நல்ல நிலைகளைச் செயல்படுத்து
3.எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும்.
என்று நான் சொல்லும் பொழுது எனக்குள் என்ன நடக்கின்றது?

“நான் எண்ணக்கூடியது.., (இந்த ஆடை) இந்த  ஆன்மா” எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. “நான் இந்த ஆடையைத்தான்.., விரும்பினேன். ஆனால், என் கிழிந்த ஆடையைப் பார்த்தவுடனே “என்னைப் பைத்தியம்” என்று சொல்கின்றார்கள் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

இதைக் கேட்டவுடனே எனக்கும் (ஞானகுரு) அந்த அழகான ஆடை “என் உள் மனது என்னை அழகுபடுத்துவதும்.., உயிருடன் ஒன்றி மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது”

உங்கள் ஒவ்வொரு உயிரையும் ஆண்டவனாக மதித்து நான் சொல்லும் பொழுது எனது சொல்லைக் கேட்கும் பொழுது உங்களுக்கும் அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் கிடைக்கும். இந்த உணர்வு பெறவேண்டும் என்பவருக்கு அங்கே மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்.

அதே சமயத்தில் என் கிழிந்த துணிகளைப் பார்த்து மற்றவர்கள் “என்னைப் பைத்தியம்..,” என்ற நிலைகளை எண்ணும் பொழுது அவர்கள் பைத்தியத்திலிருந்து மீள முடியவில்லை.

ஆக மொத்தம் ஒவ்வொரு மனிதனும் பித்துப் பிடித்துத்தான் அலைகின்றனர். தன் பிள்ளையைச் சீராக வளர்க்க வேண்டும் என்று பித்துப் பிடிக்கின்றான்.

தன் பிள்ளை சரியாக வரவில்லை என்றால் எத்தனாகவே மாறுகின்றான். பிள்ளையை உதைக்க ஆரம்பிக்கின்றான்.

இந்தப் பித்து எத்தனாக மாறுகின்றது. என்ன சொன்னாலும் என் பையன் கேட்க மாட்டேன் என்கிறானே.., என்ற இந்த உணர்வு கொண்டு நாம் தாக்குகின்றோம்.

இதைப் போல தொழிலில் ஒருவருக்கு உதவி செய்கின்றோம். அதைச் சரியானபடி நாம் செய்தாலும் நாம் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் “எத்தனகாகப் பேசுகின்றோம்.., திட்டுகின்றோம்”.

இப்படிப்பட்ட உணர்வுகளை எடுத்துப் பித்தனாகத்தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றானே தவிர என்னைப் பித்தன் என்கின்றனர். இந்த ஆடையும் அலங்காரமும் எனக்கு ஒன்றும் செய்யவில்லை.

அழகான ஆன்மாவை.., நான் சேர்க்கின்றேன்..,. “பாருடா..,” என்று என்னிடம் சொல்கின்றார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.அவரை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அவருக்குள் “அகண்ட அண்டத்தின்” உணர்வின் தன்மை
3.”அவருடைய ஆன்மாவில்.., எப்படிக் கலந்துள்ளது” என்று அறிய முடிந்தது.

குருநாதர் எனக்குக் (ஞானகுருவிற்கு) காட்டிய இந்த நிலைகளை எல்லாம் நீங்களும் பார்க்கலாம். “எந்த அளவிற்கு.., ஆர்வமுடன் இருக்கின்றீர்களோ..,” அதைப் பார்க்கலாம்.

அவரின் ஆன்மாவை “என்னில் பார்..,” என்று அவர் சொல்கிற பொழுது அவரின் உணர்வுகள் அந்த மகிழ்ச்சிக்குரிய நிலைகள் வருகின்றது.

அவரைப் பார்த்தபின்.., “எனக்கும் ஏகாந்த நிலை.., என்ற மகிழ்ச்சி” வருகின்றது.

என்னுடைய ஆடை எப்படி இருக்கின்றது? மற்றவர்களுடைய ஆடை எப்படி இருக்கின்றது.

மற்றவர்கள் ஆடை வெளுப்பாக இருக்கின்றது. ஆனால் சொல் எப்படி இருக்கின்றது? வேதனை என்ற உணர்வுடன் தான் வருகின்றது. அந்த வேதனையை நீ நுகர்ந்தால் உன் நிலை என்னாகின்றது? என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிப் பித்தர்களாக வாழும் நிலை தான் இன்று இருக்கின்றது. யாரையும் தவறாகச் சொல்லவில்லை. அவன் படும் ஆசை அவனுக்குள் செயல்படுகின்றது. அவரவர் ஆசையே அவருக்குள் மாற்றிக் கொண்டுள்ளது.

இந்த உடலின் இச்சையிலிருந்து நாம் மாற்றி “ஒளியின் உணர்வின்.., ஆன்மாவைச் சேர்த்தால்..,” இன்றைய செயல் நாளைய உடலாக மாறுகின்றது என்று காட்டுகின்றார் குரு.

அவர்களுக்குள் அருள் ஒளி என்ற இந்த உயர்ந்த ஆசையை ஊட்டும் பொழுது அதைப் பெற்றால் அவருக்குள் இருளச் செய்யும் அந்தத் “தீமையான உணர்வுகள் மாறுகின்றது”.

ஒவ்வொரு உயிரும் கடவுள் என்று.., “அவன் வீற்றிருக்கும் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்..,” என்று தான் இந்தக் கல்லை வைத்து போஸ்ட் கம்பத்தில் அடிக்கின்றேன்.

உன்னையும் இப்பொழுது “அடித்தேன்டா…,” என்கிறார் குருநாதர்.

உனக்குள் செவிகளில் அந்த நாதம் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு.., “ஏன் சாமி அடிக்கின்றீர்கள்..,?” என்று கேட்டாய்

நீ இதன் மேல் இச்சைப்படுகின்றாய். இந்த இச்சையின் உணர்வு “உனக்குள் செயலாக்கும்” என்று சொன்னார்.

தன் ஆன்மாவைப் பார்க்கச் செய்து பார்த்துக் கொண்ட உணர்வு கொண்டு அகஸ்தியன் அக்காலத்தில் எப்படி வாழ்ந்தான் என்று அவன் வாழ்ந்த காலத்திற்கே என் உணர்வினைக் கொண்டு செல்கின்றார்.

அவன் இன்று துருவ நட்சத்திரமாக வாழ்வதைக் காட்டி அவன் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடைவதே “உன் வேலை” என்று தெளிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் எல்லோரும் அருள் ஒளி என்ற உணர்வினை வளர்த்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற்றிடுங்கள்.

March 29, 2017

விஷ்ணு தத்துவம் - 12

கடவுளின் அவதாரம் பத்து – 10. கல்கி
உடல் கொண்ட உயிரினங்கள் மற்ற மிருகங்களெல்லாம் பரிணாம வளர்ச்சியில் வருவது. மனிதர்களான நாம்.., பரிணாம வளர்ச்சியில் வந்து.., “முதிர்வு பெற்றவர்கள்”.

இதிலிருந்து நாம் விண் செல்லும் மார்க்கத்தைத் தவறவிட்டால், நாம் கீழ்நிலையான ஆரம்ப நிலைகளுக்குச் சென்றுவிடுவோம்.

ஆரம்ப நிலைக்குச் சென்றுவிட்டால் நாம் மனிதனாக வரும் வரையிலும் எத்தனை கோடி சரீரங்களில் துன்பத்தை அனுபவித்து இன்று மனித உடலைப் பெற்றோமோ “அந்த நிலையைத் திரும்பவும் எய்யும் தருணம்” வந்துவிடும்.

அதிலிருந்து மீண்டிடும் நிலையாக “என்றும் பதினாறு..,” என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான் ஞானிகள் “கல்கி” என்றார்கள்.

மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான் பத்தாவது அவதாரமாகக் காண்பித்துள்ளார்கள்.

உயிர் விண்ணிலே தோன்றியது. உயிரின் பரிணாம வளர்ச்சியில் “இறுதியானதும்.., உறுதியானதுமான..,” அழியா ஒளிச் சரீர வாழ்வே மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும் என்றுரைத்தார்கள் ஞானிகள்.

சூரியனின் ஒளிக்கதிர்களிலிருந்து வெளிப்பட்டுப் புவியின் ஈர்ப்பில் வந்த உயிரான்மாவிற்கு விண்ணில் ஒளிச் சரீரம் பெறுவதே முழுமையான நிலையாகும்.

விண்ணில் ஒளிச் சரீரம் பெற்ற உயிரான்மா தம் ஒளியின் தன்மையை நாளும் வளர்த்துக் கொண்டாலும் அது எல்லையில்லாப் பேரண்டத்தில் சிறியதாகவே இருக்கும்.

ஒளியின் சரீரத்திற்கு அழிவே இல்லை. ஆகையால்தான் பெருவீடு பெருநிலை என்ற அழியா ஒளிச்சரீரத்திற்கு என்றும் பதினாறு என்று காரணப் பெயரைச் சூட்டினார்கள் ஞானிகள்.

சப்தரிஷிகள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் ஒளி அலைகளைத் தம்முள் கவர்ந்து தம்முள் நஞ்சினைப் பிளந்து தீமைகள் தம்முள் வராது தடுத்துப் பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மனிதர்களான நாம் நமது ஆறாவது அறிவின் துணைகொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளி அலைகளை நம்முள் கவர்ந்து நம் உடல் முழுவதும் படரச் செய்து, நமது உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் பரவச் செய்து, அதனின் வலிமை பெற்றபின் வேதனை என்ற உணர்வுகள் நமது உடலில் ஆன்மாவாக இருப்பதைப் பிளத்தல் வேண்டும்.

தீமைகள் விளைந்த நிலையைப் பிளக்க வேண்டுமென்றால் நாம் எப்படி சக்தி பெறவேண்டும் என்பதை நமக்கு ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள்.

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் சேர்ந்து ஒரு உயிராக எப்படி உருவானதோ இதைப் போன்று தீமைகளை அகற்றிடும் சக்தியினைக் கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து பெறவேண்டும்.

அதாவது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தம் உடலுக்குள் சேர்த்து மனைவி தன் கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அவர் உயர்ந்த நிலை பெறவெண்டும் அவருடைய பார்வை என்றும் என்னைத் தெளிந்த மனமாக்க வேண்டும் மகிழ்ந்திடும் செயலாக உருவாக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதுபோன்றே கணவனும் தன் மனைவி அந்த சக்திகளைப் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். தீமைகளை அகற்றிடும் சக்தியினை தனித்து ஒருவர் பெறமுடியாது.

நளாயினி தன் கணவனைக் கூடையில் வைத்துத் தன் சிரம் மீது சுமந்தாள் என்ற நிலையாக மனைவி தான் குறைகளை எண்ணாது கணவருடைய நிறைவான மனது எனக்கு வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆதியிலே அகத்தியன் துருவத்தை நுகர்ந்து அதன் வழியினில் துருவ மகரிஷியாகித் தான் பெற்ற சக்தியெல்லாம் தன் மனைவி பெற வேண்டும், என்ற உணர்வினை ஊட்டி அதே உணர்வினை மனைவி தன் கணவனுக்குக் கிடைக்கவேண்டும், என்று உணர்வினை வலுபெறச் செய்ததினால் எந்தத் தீங்கினையும் உருமாற்றவல்ல சக்தி அவர்களிடத்தில் உண்டானது.

தீமையை அகற்றிய மகரிஷிகளின் அருளுணர்வுகளை கணவன் மனைவி இரண்டு பேரும் கவர்ந்து தமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான் சமப்படுத்த முடியும்.

தீமைகளை அகற்றும் செயலாக்கமாகக் கணவன் தனது மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணுவதும் மனைவி தனது கணவன் பெற வேண்டும் என்று என்ணுவதும் ஆக இந்த இரு உணர்வும் வரும்பொழுது ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து ஒரு உயிரானதைப் போன்று கணவன் மனைவி இரண்டு பேரின் உணர்வின் தன்மையும் ஒன்றாகின்றது.

உணர்வினை ஒளியாக ஒருவருக்கொருவர் மாற்றப்படும்பொழுது இருவருக்குள்ளும் வரக்கூடிய இருளினை மாற்றுகின்றது.  இருளை மாய்த்து ஒளியாக மாற்றுகின்றது.

இந்த வலுவின் தன்மைகள் பெறப்படும்பொழுது அவர்கள் பிறருடைய தீமைகளைப் பார்த்தாலும் தீமைகள் அவர்களுக்குள் வராது தடுத்துக் கல்கியின் தன்மையினை அவர்களுக்குள் உருவாக்குகின்றது.

“எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள் சாவித்திரி” எனும் நிலையாகப் பிறவியில்லா நிலை அடைந்து தம் உணர்வின் தன்மைகளை ஒளிக்கதிர்களாக மாற்றும் சக்தி பெறுகின்றது. இதுதான் கல்கி.

அருள் ஞான நெறிகளில் நினைவினைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பெறுவீர்களேயானால் அருள் ஞான உணர்வை உங்கள் உயிர் அணுவாக மாற்றுகின்றது.

அருள் ஞான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது மெய்யுணர்வுகள் உங்களுக்குள் பெருகுகின்றது.

தீமையற்ற நிலையாக உயிர் உருவாக்குகின்றது. பேரானந்தத்தின் தன்மையினை உங்களிடத்தில் உருவாக்குகின்றது. உங்களுடைய உயிரான்மா என்றும் பதினாறு என்ற மெய்ப்பொருளின் தன்மையைப் பெறும் தகுதியினைப் பெறுகின்றது.

இதனின் உண்மை நிலைகளை அறிந்துணர்ந்து தம்முள் மெய்ப்பொருளைப் பெறும் தன்மையாக தமது உணர்வை வளர்த்து வரும் அன்பர்கள்  அனைவரும் என்றும் பேரானந்த பெருவாழ்வைப் பெறுவீர்கள்.

ஆகவே இன்றைய விஞ்ஞான உலகம் மனிதனுடைய சிந்தனைகள் அழியும் தருணம் வரும் பொழுது.., “தீமையான உணர்வுகளை வாளால் வீசி.., கல்கி” – இந்தப் பறக்கும் உணர்வினுடைய நிலைகள் பெறவேண்டும்.

அதாவது ஒளியின் தன்மை கொண்டு விண்ணின் ஆற்றலால் நாளை வரக்கூடிய சந்ததிகளுக்கு ஜீவனூட்டும் மனிதர்களாக இருந்து செயல்படுவோம்.


இதில் நாம் உயர்ந்த நிலைகளை எடுத்துக் கொண்டால் நாம் அனைவரும் விண் செல்ல முடியும்.

விஞ்ஞானிகள் இன்று அச்சத்தில் உள்ளனர்....!

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படர்ந்து இந்த உலகில் கலந்துள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பெற்று மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி அருள் வாழ்க்கை வாழ்ந்து சகோதர உணர்வுடன் உலக மக்கள் அனைவரும் “மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்திட” அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி “நல்ல மழை பெய்து.., ஏரி குளங்கள் நிரம்பி” தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

“இதைப் போன்ற உணர்வுகளை” நாம் எண்ணி எடுத்துப் பழக வேண்டும். ஒவ்வொருவரும் அந்தப் பேரருளைப் பெருக்கி “உங்கள் வீட்டிலும்…,” இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெறுங்கள்.

நீங்கள் வாழும் “தெருவிற்குள்ளும்…,” உங்கள் மூச்சும் பேச்சும் எல்லோரையும் தெளிந்த மனமாக ஆக்கும் அந்த அருள் பெறவேண்டும்.

உங்கள் தெருவில் படர்ந்தால் “ஊருக்குள்ளும்…,” அது பரவத் தொடங்கும். தெருவிற்கு ஒருவர் இந்த மாதிரி இருந்தால் போதும்.

இந்த உணர்வுகளைப் பெருக்கிப் பெருக்கி உண்மைகள எடுத்துச் சொல்லிச் சொல்லி இந்த உணர்வினைப் பெருக்கினால் இந்த “உலகம்..,” முழுவதும் பரவும்.

உலகம் முழுவதும் உள்ள மக்களில்.., “ஒரு 25 சதவீதமாவது” அந்த அருள் உணர்வின் தன்மைக்கு வந்துவிட்டால் இந்த விஞ்ஞான உலகில் வந்த விஷத் தன்மைகளைக் குறைக்க முடியும். மனிதர்களைப் பாதிக்காத நிலைகளைச் செய்ய முடியும்.

குருநாதர் எம்மைத் துருவ நட்சத்திரத்தில் ஆயுள் கால மெம்பராகச் சேர்த்தார். அவர் காட்டிய அருள் வழியில் உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைக்கின்றோம்.
1.“அங்கே” என்றுமே நீடித்த ஆயுளாக நாம் பெறவேண்டும்.
2.இனி உடல்கள் மாற்றக் கூடாது.
3.இருளை அகற்றும் ஒளியின் உணர்வுகளாக நமக்குள் வரவேண்டும்.
4.நினைவுகள் அனைத்தும் சிந்திக்கும் தன்மையாகவே இருத்தல் வேண்டும்.
5.உங்களுடைய பேச்சும் மூச்சும் உங்கள் சொல்லும் செயலும் பிறரைப் புனிதப்படுத்தும் சக்தியாக நீங்கள் மாறவேண்டும்.
6.என் ஒருவனால் மட்டும் முடியாது.

நான் உங்களுக்குச் சொல்லும்போது உங்களுக்கு நல்லதாகின்றது. அதே போல நீங்கள் சொன்னால் மற்றவர்களுக்கும் நல்லதாக வேண்டும். அதன் துணை கொண்டு அவர்கள் தீமைகள் மறைய வேண்டும். அவர்களுக்குள் அருள் உணர்வுகள் ஓங்கி வளர வேண்டும்.

“இத்தகையை நிலைகளுக்கு” நாம் வளர்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால், தீவிரவாதம் என்ற நிலையில் மனிதன் தன்னை மறந்து மற்றவர்களை “நிர்மூடத்தனமாகத் தாக்கும் நிலைகள்” உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது.

அரசாட்சி செய்வோரும் தான் வாழ தன் இனம் என்ற பெயரால் “மற்றவர்களை அடிமைப்படுத்தும் நிலைகளாக” ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

“நாம் எடுக்கும்.., தியானத்தின் வலுக் கொண்டு..,” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை அவர்கள் எல்லோரும் பெறக் கூடிய தகுதியை ஏற்படுத்திவிட்டால் “அவர்கள் தவறு செய்யும் எண்ணங்களை..,” மாற்றியமைக்கலாம்.

நம் பூமியின் துருவப் பகுதி இரண்டும் உருகி கடல் நீர் பெருகிக் கொண்டுள்ளது. ஆகவே, பூமியின் துருவப் பகுதிக்குள் இப்படி நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு.., இன்று விஞ்ஞானிகள் “அஞ்சிக் கொண்டுள்ளனர்”.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து இனி வரும் ஆண்டுகளை நாம் நல்ல ஆண்டுகளாக மாற்றிக் காட்டிடல் வேண்டும். நாம் அஞ்ச வேண்டியதில்லை.

அருள் உணர்வுகளைப் பெருக்குவோம். உலகம் நலம் பெறப் பிரார்த்திப்போம். எல்லோரும் மன நிறைவுடன் இருக்க வேண்டும்.

நமக்கு இனிப் பிறவியில்லை. நாம் என்றுமே ஒளியாக இருப்போம். ஒளியின் தன்மை பெறுவோம் என்ற உணர்வை வலிமைப்படுத்தி வாழ்வோம்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். குரு அருளால்
1.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை என்றுமே பருகிக் கொண்டேயிருப்போம்
2.இருளை அகற்றிக் கொண்டேயிருப்போம்.
3.அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொண்டேயிருப்போம்.


ஓம் ஈஸ்வரா குருதேவா…!  ஓம் ஈஸ்வரா குருதேவா…!