ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2017

விஷ்ணு தத்துவம் – 3

கடவுளின் அவதாரம் பத்து – 2. விஷ்ணு
1.வெப்பம், காந்தம், விஷம் – மூன்று புலனறிவு
சூரியன் தன்னுள் ஈர்த்து வளர்த்துக் கொண்ட சத்தை வெப்ப காந்தமாக வெளிப்படுத்துகின்றது. அது தன் தளவாயில் விஷத்தைப் பிரித்தாலும் வெளிப்படும் பொழுது விஷத்தைக் கவர்ந்துதான் வெப்ப காந்தம் வெளிப்படுகின்றது.
சூரியனிலிருந்து வெளிப்படும் நிலைகள்
1. விஷம்.
2. வெப்பம்,
3. காந்தம் என மூன்று நிலைகள் கொண்டு வெளிப்படுகின்றது.
1. வெப்பம் – உருவாக்கும் சக்தி,
2. காந்தம் – அரவணைக்கும் சக்தி,
3. விஷம் – இயக்கும் சக்தி
என மூன்று நிலைகள் கொண்டு இயங்குகின்றது.
காந்தம் தன் அருகிலே வருவதைக் கவர்ந்து தனக்குள் இணைக்கின்றது.

இணைத்ததின் நிலைகொண்டு வெப்பம் அதனைச் சமைத்துத் தனதாக உருவாக்குகின்றது.

விஷமோ இதனில் இயக்கச் சக்தியாக இருக்கின்றது.

இத்தகைய இயக்கத்தின் தன்மை கொண்ட மூன்று புலன் கொண்ட அணுக்கள் சூரியனிலிருந்து வெளிப்பட்டுப் பிரபஞ்சத்தில் பரவி வருகின்றது.

இதே பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள் அணுக்களாக மாறிப் பரவி வருகின்றது.

வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அணுக்களாக வரப்படும் பொழுது ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள் அருகிலே வந்தால் இதைக் கண்டு உணர்வின் உந்து விசையால் ஓடுகின்றது.

அப்படி ஓடும் நிலைகளில் கார்த்திகை நட்சத்திரத்தின் அணுக்களில் மோதப்படும் பொழுது அது சுழற்சியின் தன்மை அடைந்து அந்த சுழற்சியில் வியாழன் கோளின் கதிரியக்கப் பொறிகளைத் தனக்குள் சேர்த்து ஒன்றுடன் மோதும் நிலைகள் வருகின்றது.

மோதும் நிலை வரும்பொழுது அதில் வெப்பமும் ஈர்க்கும் தன்மையும் வருகின்றது.

ஈர்க்கும் சக்தி வரப்படும் பொழுது எந்தக் கோள் உமிழ்த்திய அணு அடைப்படுகின்றதோ அதன் அடைப்பிற்குள் உருவாகும் நிலை கொண்டு மற்ற அணுக்களைக் கவர்ந்து அடைபடுகின்றது.

ஒரு “உயிரணுவாக..,” உருவாக்குகின்றது.
2. துடிப்பால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு
உயிரணுவில் ஏற்படும் துடிப்பால் உருவாகும் “வெப்பத்தை.., விஷ்ணு”  என்று ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

வெப்பத்தால் ஈர்க்கும் தன்மை உருவாவதை லட்சுமி என்றும் விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும் காரணப்பெயரைக் கொடுத்தனர்.

“நாராயணனின்.., மறு அவதாரம் விஷ்ணு” என்று உரைத்து “உயிரணுவின் தோற்றத்தை” நமக்கு ஞானிகள் உணர்த்தினார்கள்.

லட்சுமி தனக்குள் ஈர்ப்பதை, விஷ்ணு (வெப்பம்) உருவாக்கி, ஜீவ அணுவாக விளையச் செய்கின்றது.

ஒரு உயிரணு தன்னில் ஜீவ அணுவை உருவாக்கும் போது அந்த ஜீவ அணு எந்த உணர்வின் சத்தினால் உருவானதோ “அதன் இனத்தை அது பெருக்கும்”.

2.  விஷ்ணுவின் மகன் பிரம்மா
உதாரணமாக ஒரு விஷச் செடியில் உருவான ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்து காற்றில் உள்ள தன் சத்தை எடுத்து அதே செடியாக விளையும்.

அதே போன்று ஒரு உயிரணு ஒன்றை நுகர்ந்து அதனின் உணர்வின் அணுவாக உருவானால் அந்த அணு தன் இன சத்தைக் கவர்ந்து தன் இனத்தைப் பெருக்கும்.

ஆக, இதைத்தான் விஷ்ணுவின் மகன் “பிரம்மா” என்று உரைத்தார்கள் ஞானிகள்.

ஒரு உயிரணு ஒரு உணர்வின் தன்மையினை நுகர்ந்து அதனில் உருப்பெறும் அணுக்களாக வரும்பொழுது “பிரம்மம்” என்று காட்டினார்கள்.

அப்படிப் பிரம்மமான அந்த உணர்வின் சத்து உயிருடன் ஒன்றி இயங்கத் தொடங்கிவிட்டால் அதற்குச் “சிவம்” என்றும் காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்.

ஞானிகள் நமக்கு உரைத்தது எல்லாம் “காரண.., காரியப் பெயர்கள்”. அதையெல்லாம் சாஸ்திரங்களாக  நமக்கு வகுத்துக் கொடுத்தனர்.

ஆனால், இன்று அதெல்லாம் சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள். “தெய்வம் எங்கேயோ இருக்கின்றது” என்று தான் எண்ணிக் கொண்டிருக்கின்றொமே தவிர சாஸ்திரப்படி அந்த ஞானிகள் சொன்ன நிலைகளை நாம் அறியமுடியவில்லை.

தெய்வம் எந்த நிலையில் இருக்கின்றது? தெய்வத்தின் செயல் என்ன? என்பதைத்தான் இங்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகள் காட்டிய பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.