உங்களுக்குள் திரும்பத்
திரும்ப அருள் ஞானத்தைப் பதிவு செய்கின்றோம். பெண்கள் இதிலே பெரும்பகுதி பங்கு கொள்ள
வேண்டும்.
உங்கள் “குடும்பத்தைக்
காக்கும்” அரும் பெரும் சக்தி கொடுத்திருக்கின்றோம்.
ஆகவே, குறைகளை எண்ணாதீர்கள்…,
அதை உங்களுக்குள் புக விடாதீர்கள்.
எந்த நோயாக இருந்தாலும்
“நோய் என்ற வார்த்தைக்கே வராதபடி” பேரருள் பெறுவேன், எனக்குள் பேரொளியைப் பெருக்குவேன்.
“நான் பேரின்பம் பெறக்கூடிய அந்தச் சக்தி பெறுவேன்..,” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் உடல் நலம் பெறுவேன்.
உடலை ஆரோக்கியமான நிலைகள் பெறச் செய்வேன். துருவ நட்சத்திரத்தை எண்ணி இதைப் போன்று
எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி தங்கள் கணவர் பெறவேண்டும் குழந்தைகள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
எங்கள் குழந்தைகள் அருள்ஞானம் பெறவேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வைப்
பாய்ச்சுங்கள்.
“குறைகளை எப்பொழுது காணுகின்றீர்களோ..,”
அந்த நேரத்தில் “விழித்திருந்து” இப்படி எண்ணிப் பழகுங்கள்.
குழந்தைகளுடைய குறைகள்
உங்களுக்குள் வராதபடி அருள் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் எடுத்துக் கொள்ளுங்கள்.
“நீ என்றும் நல்லவனாவாய்..,
நீ எல்லோரும் போற்றும் நிலை பெறுவாய்.., உனக்குள் பண்பு கொண்ட உணர்வுகள் வளரும் என்று
“பல முறை” சொல்லுங்கள்.
இதைக் குழந்தைகளைக் கூர்ந்து
கவனிக்கச் செய்யுங்கள்.
நாம் சொல்லும் உணர்வுகளை
அவர்கள் நுகர்வார்கள். அவர்களுக்குள் அது கருவாகும். குழந்தைகளைப் பற்றிய எண்ணம் வரும்
பொழுதெல்லாம் இப்படி எண்ணுங்கள்.
நண்பர்களுக்குள் நன்மை
செய்தான்.., என்று எண்ணினால் “விக்கலாகின்றது”. துரோகம் செய்தான் பாவி.., என்று எண்ணினால்
“புரையோடுகின்றது”.
குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால்
“என் குழந்தை இப்படி இருக்கின்றதே..,” என்று வேதனைப்பட்டால் அந்த உணர்வுகள் அவர்களை
“இயக்கும்”.
குழந்தைகள் பால் உயர்ந்த
குணங்கள் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும், வேதனைப்படும் உணர்வு கொண்டு குழந்தைகள்
வெகு தூரத்தில் இருந்தால் அங்கே எப்படித் தனியாக இருக்கின்றார்களோ..,? என்ன செய்கின்றார்களோ..,?
என்றெல்லாம் எண்ணங்கள் ஓடும்.
வீட்டிலே இருந்தால் நான்
எப்படி எல்லாம் நல்ல முறையில் குழந்தைகளைக் கவனிப்பேன்..,! அடிக்கடி அவர்களுக்கு நல்ல
உணவைக் கொடுக்க முடியும்.
ஆனால் இப்பொழுது “இல்லையே..,”
என்ற எண்ணத்தில்.., “வேதனைப்பட்டு நினைத்தீர்கள்” என்றால் அவர்கள் “எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக
இருந்தாலும்” அங்கே சிந்திக்கும் தன்மை போய்விடும்.
தொழிலோ அல்லது மற்ற வேலைகளில்
இருந்தாலோ அங்கே பின்னமாகின்றது. “ஐயோ...ஓ.., மகனே இப்படி.., நினைத்தேனே” “ஐயோ...ஓ..,
மகளே இப்படி.., நினைத்தேனே” என்ற நிலை வந்துவிடும்.
இதைப் போன்று நம்மையறியாமல்
இயக்கும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடும் அருள் சக்தி பெறவேண்டும்.
யாம் முதலிலே சொன்ன முறைப்படி
உங்களுக்குள் பதிவு செய்துவிட்டு எப்பொழுதெல்லாம் குழந்தைகளைப் பற்றி நினைவு வருகின்றதோ
அப்பொழுதெல்லாம் என் குழந்தைகள்
1.அருள் ஞானத்தைப் பெறுவார்கள்..,
2.அருள் செயல்களைச் செயல்படுத்துவார்கள்..,
3.அருள் வழியிலே வாழ்வார்கள்
4.பேரன்பைத் தனக்குள் பெருக்கிக்
கொள்வார்கள்..,
என்று இப்படிப்பட்ட நிலைகளை
எண்ணிக் குழந்தைகள் பால் பாய்ச்சிப் பாருங்கள்.
உங்கள் உணர்வால் எத்தகையை
நிலைகளையும் மாற்றியமைக்க முடியும்.
“குழந்தைகளை நல்லவராக்கும்
உணர்வை” உங்களுக்குள் கருவாக்கும் நிலையை உருவாக்க முடியும். “அருள் உணர்வின் ஒலிகளை”
குழந்தைகளுக்குள் பரப்ப முடியும்.
அவர்களுக்குள் அந்த உண்மையின்
உணர்வை வளர்க்க முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையுடன் “உங்களுக்குள் வளரவேண்டும்”
என்று வேண்டிக் கொள்கின்றேன்.
அருள் வழியில் வாழுங்கள்,
அருளானந்தம் பெறுவீர்கள்.