ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2017

எப்படி இருக்கின்றீர்கள் என்று கேட்டால் “நான் மகிழ்ச்சியாக இல்லை” என்றே சொல்கிறோம்...! ஏன்.....?

இராவணன் என்ன செய்கின்றான்? சந்தோஷம் என்ற நிலைகள் வந்தாலும் சந்தோஷத்தை அவன் சுவாசிப்பதில்லை. இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

புலி என்ன செய்யும்? அது சந்தோஷத்தையா சுவாசிக்கும்? புலி ஆண் பெண் என்ற நிலையில் மகிழ்ச்சியுடன் இருந்தாலும் அது வெறுப்பு கலந்த உணர்வுகளையே தான் நுகரும்.

அதனிடன் சந்தோஷம் என்பது இம்மியும் கிடையாது. ஆனால், பாசத்தின் தன்மையில் தன் குட்டிகளை வேண்டும் என்றால் வளர்க்கும்.

பாசம் என்ற நிலையில் தன் இனத்தின் மீதே கிடையாது. தன் சுயநலம் ஒன்றே தான் அதற்குண்டு. ஆனால், கொஞ்சம் இடையூறு என்றாலும் உடனே “ஜிர்…” என்று மோத ஆரம்பித்துவிடும்.

இதைப் போன்று இந்த இயற்கையின் நியதிகளை அறிந்து கொண்டவன் மனிதன். தன் விஞ்ஞான அறிவால் மிருகங்களை எப்படி மாற்றி அமைப்பது? மிருக உணர்வுகளை இணை சேர்த்து மிருகங்களை எப்படிச் சாந்தமாகக் கொண்டு வருவது? மனிதர்களை ஒன்று போல அழகாக எப்படி உருவாக்குவது?

கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்றால் அதற்குத்தகுந்த சில உணர்வுகளைக் கொடுத்து அழகான குழந்தைகளாக உருவாக்குவது. இதையெல்லாம் விஞ்ஞானி செய்கின்றான்.

விஞ்ஞானத்தால் எத்தகைய அழகாக உருவாக்கினாலும் இவன் நுகரும் மணம் அனைத்தும் நஞ்சாகத் தான் மாறும். அழகுபடுத்தினாலும் விஞ்ஞானி அவன் கண்டுபிடித்த உணர்வும் அவன் வாழ்க்கையில் வந்த வேதனையும் குடும்பத்தில் சிந்தனையைச் செலுத்தும் பொழுது குடும்பப் பற்றற்றுத்தான் இருப்பார்கள்.

குடும்பப் பற்று இல்லை என்றால் அவனுக்குள் வேதனை என்ற உணர்வுகளே மிஞ்சும். விஞ்ஞானத்தில் பல நிலைகளைக் கண்டாலும் இந்தப் பூமியின் ஈர்ப்புக்குள் தான் சுழல முடியும். மெய்ஞானத்திற்குள் அவனால் செல்ல முடியாது.

மீண்டும் அஞ்ஞான வாழ்க்கைக்கே சென்று “மனிதனல்லாத உருவைத்தான்” அவன் பெற முடியும்.

நாம் ஒவ்வொருவரும் சந்தோஷம் என்ற நிலைகளில் இருந்தாலும் “வாலி” – பிறிதொரு தீமையான உணர்வுகளை எடுத்தால் அடுத்த நிமிடமே இந்தச் சந்தோஷத்தை அடக்கிவிடும்.

அதைத்தான்..,
1.“இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்துக் கொண்டான்”.
2.சந்தோஷத்தை அவனுக்குள் அடைத்து வைத்துக் கொண்டான்
3.செயல்படுத்தவில்லை என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

நாம் நினைக்கின்றோம். இலங்கையில் சீதாவை அடைத்துவிட்டான் இராவணன் என்று.

இந்த உடலே இலங்கை தான். ஒரு தீவு தான். “அதிலே கொண்டு அடைத்துவிட்டான்” என்று நாமெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்றைய நிலைகளில் மக்களுக்குப் புரிய வைக்க மெய்ஞானிகள் இதைச் செய்தனர்.

நாம் ஒவ்வொரு நொடிப்பொழுது எடுக்கும் உணர்வின் எண்ணங்கள் என்ன செய்கின்றது? என்று காட்டுகின்றார்கள்.

ஆனால், இன்று அதைப் படித்தவர்கள் சரியாக உணராதபடி இராமனையும் சீதாவையும் பற்றி நல்லதாகப் பேசி இராவணன் இப்படிச் செய்தான் என்று சொல்லும் போது நாமும் அதைக் கேட்டு வேதனைப்படுகின்றோம்.

கதையைப் படித்துவிட்டு நாம் நினைக்கின்றோம்..., சீதா இராமனுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இராவணனிடம் சிக்கியவுடன் “சீதா எவ்வளவு வேதனைப்படுகின்றது” என்று நாமும் வேதனையைத்தான் வளர்க்கின்றோம்.

ஆக, சந்தோஷத்தையா ஊட்டுகின்றது? அதே சமயத்தில் அதைப் பார்த்து அழுகின்றவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

இவைகளெல்லாம் இந்த உணர்வின் உணர்ச்சிகள் எப்படி நம்மை மாற்றுகின்றது என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்  நம் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரும் இடையூறுகள் அது எப்படி வருகின்றது? என்றும்
2.சந்தர்ப்பங்கள் எப்படி பல இன்னல்களாக எப்படி மாறுகின்றது? என்றும்
3.நல்லவைகள் அனைத்தும் எதனால் மாற நேர்கின்றது? என்றும் காட்டினார்.

நீங்களும் அதையெல்லாம் தெரிந்து கொண்டால் தீமைகளை நீக்கிடும்.., இன்னல்களிலிருந்து விடுபடும்.., “நல்லவைகளைக் காத்திடும்” அந்த நினைவுகள் வரும்.

அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு குணங்களிலும் துருவ நட்சத்திரத்தை இணைக்கும் பழக்கம் வருதல் வேண்டும்.


அப்படி இணைக்கும் நிலை பெற்றுவிட்டால் “மகிழ்ச்சி” என்ற நிலைகள் வந்து கொண்டே இருக்கும். ஆகவே, பேரானந்தப் பெரு மகிழ்ச்சி பெற்று என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழுங்கள்.