ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2017

அகஸ்தியர் “பாதம் பட்ட” பாபநாசத்தில் பதிவாகியுள்ள ஆற்றல்கள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் “வான இயல் புவிஇயல் உயிரியல்” அனைத்தையும் அறிந்தவன்.

அகஸ்தியன் தனக்குள் பேரண்ட இயக்க உணர்வின் தன்மையை எப்படிக் கற்றான்? இந்த உணர்வின் ஈர்ப்புத் தன்மை அவன் உடலிலே எப்படி வந்தது? என்ற நிலையை எல்லோரும் அறிய முடியும்.

அவன் நட்சத்திரங்களின் இயக்கங்களையும் கோள்களின் இயக்கங்களையும் தன்னில் அறிந்தவன். வான இயல் தத்துவம் புவிஇயலின் நிலைகளாக எவ்வாறு மாறுகின்றது என்பதையும் அறிந்து கொண்டான்.

விண்ணுலக ஆற்றல் அது புவியியலுக்குள் வந்து அது கலக்கப்படும் பொழுது “தாவர இனங்களாக..,” புவியியலாக எப்படி மாறுகின்றது? என்பதையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

இவ்வாறு அவன் தனக்குள் அறிந்த “உணர்வின் எண்ண அலைகளை” இன்று நீங்களும் பார்க்கலாம், உணர முடியும்.

ஏனென்றால், இதெல்லாம் ஆரம்பக் காலங்களில் அவருக்குள் விளைந்த உணர்வின் தன்மையை அது வெளியில் படர்ந்திருப்பதை நாம் நுகர முடியும்.

இன்று நாம் ரேடியோக்களிலும் டி.விகளிலும் நாம் எப்படி ஒலி ஒளியைக் காணுகின்றோம்?

காந்த ஈர்ப்பு கொண்ட நாடாக்களில் இயந்திரத்தின் மூலம் ஒலி ஒளியாக அது பதிவு செய்து அதற்குண்டான சாதனங்களை வைத்து ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது சூரியனின் காந்தப் புலன் கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.

பின்.., நாம் அதே அலைவரிசையில் வைக்கப்படும் பொழுது அதனின் தொடர் கொண்டு இதைக் கவர்ந்து உருவங்களைப் பார்க்கின்றோம். ரேடியோ டி.விக்களில் பாடல்களை நாம் கேட்கின்றோம். பல உருவங்களையும் நாம் காணுகின்றோம்.

இதைப் போலத்தான் அன்று வாழ்ந்த அந்த மெய்ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இன்றும் இங்கே படர்ந்துள்ளது. சூரியனின் காந்தப் புலனறிவுகள் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

நாம் அதைக் கவரும் தன்மை வரப்படும் பொழுது அந்த அருள் ஞானியின் உணர்வுகளைப் பார்க்கும் திறனும் நமக்குள் வருகின்றது.

நமக்குள் “அருள் ஞானத்தின் அடர்த்தியின் வளர்ச்சி..,” எவ்வளவு வருகின்றதோ அதன் தொடர் கொண்டு இந்த உணர்வின் வலிமை கொண்டு இந்தக் “காற்றிலே மிதந்திருக்கக்கூடிய.., மெய்ஞானிகளின் உணர்வலைகள” நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.

நீங்கள் அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

ஏனென்றால், ஒவ்வொரு தன்மையும் நமக்குள் எது பதிவாகின்றதோ அந்தப் பதிவின் தன்மை எண்ணங்கள் வரப்படும் பொழுதுதான் அதை நுகரும் ஆற்றல் வருகின்றது.

“ஒருவன் தீமை செய்தான்” என்று நாம் பதிவு செய்து கொண்டால் நம் உடல் சோர்வடையப்படும் பொழுது அந்தத் தீமை செய்தோனின் நினைவு வருகின்றது.

அப்பொழுது அவனை எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வந்து நம்மையறியாமலே நம் உடலுக்குள் நடுக்கமும் பல தீமைகளும் உருவாகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டிட வேண்டும்.

அதைப் போன்றுதான் அகஸ்தியமாமகரிஷியைப் பற்றி உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். உங்களுக்குள் பதிவாக்கிய இந்த நினைவு கொண்டு நீங்கள் எண்ணினால் “உங்கள் நினைவாற்றல்” அந்த அகஸ்தியன் பால் செல்லும்.

அதன் மூலம் அகஸ்தியர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகளையும் விண்ணை நோக்கி எடுத்த அந்த துருவத்தின் ஆற்றலையும் நீங்கள் பெற முடியும்.

அகஸ்தியன் துருவ மகரிஷியான பின் அவரில் விளைந்த உணர்வுகளும் இங்கே பரவியுள்ளதை “இதை வரிசைப்படுத்தி” உங்களில் இதை நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் இங்கே பாபநாசத்திற்கு வரவழைக்கச் செய்தது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியர் “அவரின் பாதம் பட்ட இடங்களில்.., அவரின் ஆற்றல்கள்.., இங்கே தரையிலும் பதிவாகியுள்ளது”. அவரின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அவருடைய அருள் உணர்வுகள் இங்கே சுழன்று கொண்டுள்ளது.

“அதைப் பெறவேண்டும்” என்பதற்குத்தான் சிறுகச் சிறுக உங்களின் நினைவாற்றலை அகஸ்தியர் வாழ்ந்த காலங்களுக்குக் கொண்டு செல்கின்றோம்.

அதன் மூலம் அவர் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பதிவின் துணை கொண்டு அவர் ஆற்றலைப் பெறச் செய்கின்றோம்.

இப்பொழுது இதைப் பதிவாக்கும் பொழுது உங்களின் நினைவின் ஆற்றல் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளைப் பருகும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

இந்தத் தகுதி பெற்றுவிட்டால் நீங்கள் “எங்கே சென்றாலும்” அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருளாற்றலை எளிதில் பெறலாம்.

பெற்று அந்த அகஸ்தியனைப் போன்று உலகைக் காக்கும் மெய்ஞானியாக அருள் மகரிஷியாக விண்ணிலே என்றுமே அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்தமாக வாழலாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி