ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2017

சிவ தத்துவம் - 7

என்றும் 16 - மார்க்கண்டேயன்
எமன் என்பது என்ன?

எமன் என்பது "நமது எண்ணம்தான்..,” அதாவது வேதனையான உணர்வை நாம் தொடர்ந்து சுவாசித்தோமானால் அது நமக்குள் "பாசக் கயிறாக..," மாறுகின்றது. 

எருமை எவ்வாறு அறிவில்லாமல் இருக்கின்றதோ அதனின் அறிவில்லாத செயலைப் போன்று  நாம் எடுக்கும் வேதனையான உணர்வால் நமது எண்ணங்கள் சிந்தித்துச் செயல்படும் திறனை இழந்து விடுகின்றன.

நாம் சிந்திக்கும் திறனை இழந்து அறியாமையால் உழலப்படும் பொழுது, “நமது எண்ணங்கள் வலுவிழந்து" நம் வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்து கொள்கின்றன.

அதாவது, எருமை எனும் அறியாமையை வாகனமாகக் கொண்டு எமன் எனும் எண்ணம் நமக்குத் தண்டனை கொடுக்கின்றது என்பதை நமக்கு உணர்த்தவே அன்று மகரிஷிகள் எமனுக்கு, எருமையை வாகனமாக வைத்து எமன் சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம் மனிதருக்குத் தண்டனை வழங்குகின்றான் என்று காண்பித்தருளினார்கள்.

அருள் ஞானிகளுடைய உணர்வுகளை நாம் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்த எண்ணம் நமக்குள் சித்திர புத்திரனாக இயக்கம் பெறுகின்றது. 

இந்தச் சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம் நம்முடைய எண்ணம் இருளைப் போக்கும் எமனாக நின்று, தீமையை அகற்றிடும் செயலாக அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் மலர்கின்றது.

நாம் உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்ற பொழுது அவைகள் நமக்குள் சித்திர புத்திரனாகின்றன. கண்களால் நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ அவை நமக்குள் புகுந்து புத்திரனாக விளைகின்றன.

நாம் ஈர்க்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்மிடத்தில் உள்ள இருள் சூழ்ந்த அசுரத்தனமான நிலைகளைக் கொல்கின்றன. தீமையை அகற்றுகின்றன. 

தீமையில்லாத உலகத்திற்கு  உயிர் நம்மை அழைத்துச் சென்று என்றும் ஒளிச்சுடராக நிலைத்திருக்கும் பெருவீடு பெருநிலைஎன்ற நிலையை அடையச் செய்கின்றது.

ஆக, நாம் அங்கே பிறவா நிலைஎன்பதை அடைகின்றோம்.

மார்க்கண்டேயனை" நோக்கி எமன் பாசக்கயிறை வீசுகின்றபோது மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைஅணைத்துக் கொள்கின்றான்.

இதில் லிங்கம்என்பது உயிர்,  ஆவுடை என்பது உடல்.

அங்கே மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடித்துக் கொள்ளாது, "லிங்கத்தை" இறுகப் பிடித்துக் கொள்கின்றான். 

அதாவது, "உயிரை..," இறுகப் பிடித்துக் கொள்கின்றான்.

ஆகவே, நமக்கு இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும், நாம் எண்ணியது அனைத்தையும் இந்த உயிர்தான் இயக்குகின்றது என்றும், ஆகவே நாம் எண்ண வேண்டியது எது..? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒளியாக நின்று நாம் எண்ணியது அனைத்தையும் அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு இயக்கிக் காட்டி அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணரச் செய்வதும் இயக்குவதும் அதை நமக்குள் அடையச் செய்வதுமாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது உயிரில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை எண்ணி நம் கண்ணின் நினைவு கொண்டு பார்த்து அதை ஏங்கி எடுத்தோமென்றால் அது சித்திர புத்திரனாக செயல் படுகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்கின்ற பொழுது அருள் ஞானிகள் அவர்களுக்குள் இருந்த தீமையை அகற்றிய அதே உணர்வுகள் நமக்குள்ளும் வளர்கின்றது.

ஈஸ்வரா..,என்று உயிரை எண்ணிதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும்என்ற நினைவை உங்கள் உடலுடன் இணைக்கப்படும் பொழுது, என்றும் பதினாறு  என்ற நிலைத்த ஒளிச் சரீரத்தை நீங்கள் அடைய முடியும். 

வாழ்வில் சஞ்சலம் சலிப்பு, வெறுப்பு, கோபம், போன்ற உணர்வுகள் உங்களிடத்தில் தோன்றும் பொழுது உங்கள் உயிரை எண்ணி ஆத்ம சுத்தி செய்து தீமைகள் அருகில் வராது உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடிக்கவில்லை, லிங்கத்தை அதாவது உயிரை இறுகப் பிடித்துக் கொண்டான்.

அது போன்றே, நீங்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் "ஈஸ்வரா.., என்று உங்கள் உயிரை எண்ணி..," ஒளியின் சரீரமான அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக ஒளியின் சுடராக விளைகின்றது.

இத்தகைய நிலைகள் நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்காக எமது அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

நீங்கள் எந்த அளவிற்கு இந்த உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அந்த அளவுக்கு ஆழமாக யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகின்றன. 

யாம் கொடுக்கும் உபதேசங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து வாழ்வில் கடைப்பிடித்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் "ஈஸ்வரா..,என்று  உயிரை எண்ணி ஏங்கும்போது அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து உங்களிடத்தில் தீமையின் தன்மைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.

ஆகவே, இந்த உபதேசத்தைப் படித்து, தெரிந்து கொள்ளும் அனபர்கள் அனைவரும் இருள் சூழ்ந்த இவ்வுலகில் நஞ்சான நிலையை நீக்கி நன்மைகளைப் பெறும் விதமாக துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும்.

அந்த மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து மார்க்கண்டேயனைப் போன்று.., “என்றும் பதினாறு..என்ற நிலைத்த ஒளிச் சரீரத்தைப் பெறவேண்டும் என்று நெஞ்சில் அவா கொண்டு வேண்டுகின்றோம், பிரார்த்திக்கின்றோம்.

“ஒ…ம் ஈஸ்வரா குருதேவா..,”