ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2017

சிவ தத்துவம் - 4

1. சர்வேஸ்வரன்
ஆதியிலே சொன்னது ஒரு பரம்பொருளாக உருவாகும்போது பரமசிவம். ஒரு திடப்பொருளாகும்பொழுது சீவலிங்கம்.

அதற்கு அடுத்து அது வளர்ச்சியின் தன்மை பெறும்பொழுது நட்சத்திரம். நட்சத்திரம் ஆன பிற்பாடு சூரியன். சூரியனாகும் பொழுது சர்வேஸ்வரன்.

சூரியனைப் பார்க்கும்போது சிவம் - சிவசக்தி. ஆனால் சிவசக்திக்குள் சீவலிங்கமாக மாறி பின் சர்வேஸ்வரனாக மாறுகின்றது. 

சர்வத்தையும் உருவாக்கக்கூடிய ஆற்றல் சூரியன். அதனால் அதற்கு “சர்வேஸ்வரன் என்று ஞானிகள் பெயர் வைக்கின்றார்கள் 
2. பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா
காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்த்து எண்ணிக் கவர்ந்து கொண்ட உணர்வின் சக்திகள் அனைத்தும் நமது உடலாகின்றது என்பதை உணர்த்தும் விதமாக “பார்வதி பஜே.., ஹரஹரா சம்போ மகாதேவா..,” என்று சிவ தத்துவத்தில் தெளிவாக்கியுள்ளார்கள்.

1.பார்வதி பஜே - பார்த்த உணர்வின் உணர்ச்சிகளை உயிரானது நமது உடலுக்குள் ஊட்டி
2.ஹரஹரா – அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி
3.சம்போ – நாம் பார்த்த இந்த சந்தர்ப்பம்
4.மகாதேவா – நாம் பார்த்த உணர்வுகளையெல்லாம் நமக்குள் உருவாக்கக்கூடியதாக நம் உயிர் இருக்கிறது.

பார்வதி பஜே நமச்சிவாயஎன்று பாடினார்கள்.

அதாவது கண்களால் பார்க்கப்படும் உணர்வுகள்" நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் உயிரில் மோதும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்படுகின்றது.

உயிரில் பட்டு அந்த உணர்வின் இயக்கமாக.., “பஜே நமச்சிவாயஇந்த உடலுக்குள் அதனின் உணர்வை இயக்கும் உணர்வின் ஒலிகளை எழுப்பும் உடலாக.., அமைந்துவிடுகின்றது" என்பதை உணர்த்துவதற்காக பாடல்களாகப் பாடினார்கள்.

நாம் எதையெல்லாம் பார்த்தோமோ அவை அனைத்தும் நம்முள் சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது (நம் உடலாக) என்பதைச் சிவ தத்துவம் நமக்குத் தெளிவாக்குகின்றது.

வாழ்க்கையில் நாம் நம்மிடத்தில் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து மன உறுதியை மன வலிமையைப் பெருக்கினோம் என்றால் நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கித் தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறமுடியும்.

இந்த உடலில் அருள் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க உடலில் விளைந்த உணர்வுகள் உயிருடன் ஈஸ்வரனுடன் ஒன்றி “அவனுடன் அவனாக.., நாம் அழியா நிலைகள் கொண்டு என்றுமே பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்பதே நம் சாஸ்திரங்களில் கூறப்பட்ட உண்மைகள்.

அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை பின் வந்த ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவாக்கியதைத்தான் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.