ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 9, 2017

உயிரால் உருவாக்கப்பட்ட மனித உடலை “எனது..,” என்று சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பான உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து வளர்ந்து வந்தோம்.

அப்படி எடுத்துக் கொண்ட பாதுகாக்கும் உணர்ச்சிக்கொப்ப இந்த உடல்களை அமைத்துக் கொடுத்தது நம் உயிர் தான்,

அந்த உடல்களை அமைத்து எல்லாவற்றையும் பாதுகாக்கும் மனித உருவை உருவாக்கிய உயிருக்கு உரிய மரியாதையை நாம் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் அறியும் உணர்வுகளும், தீமையை அகற்றும் உணர்வுகளும், தீமையை அகற்றும் சக்திகளும் தந்த.., “நம் உயிரான ஈசனை” நாம் மதித்தல் வேண்டும்.

அவனால் உருவாக்கப்பட்டு மனித உடலாக உருவாக்கியபின் “இந்த மனித உடலை.., எனது..!” என்று சொந்தம் கொண்டாட யாருக்குமே உரிமை கிடையாது.

ஆக.., “அவனுக்குச் சொந்தமானது தான்.., இந்த உடல்”.

அவனை வைத்தே தான் நாம் வாழ்கின்றோம். “நாம் எதனை விரும்புகின்றோமோ..,” அதனையே தான் செயலாக்குகின்றான் நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் உயிர் என்றுமே அழியாது. ஏனென்றால் உயிர் நட்சத்திரங்களால் உருவானது.

ஆனால், சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உடல்கள் தான் மாறுகின்றது. உயிர் என்றுமே மாறாதது.

இதைத் தெளிவாக அறிந்துணர்ந்த மெய்ஞானிகள் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி “உயிர் வேறல்ல.., நான் வேறல்ல..,” என்ற நிலை எய்தி என்றும் பதினாறு என்ற நிலையில் “பேரொளியாக” வாழ்கின்றார்கள்.

அந்த மெய்ஞானிகளைப் போன்றே நாமும் உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். உயிர் எப்படி ஒளியாக அழியாத நிலைகள் கொண்டு இருக்கின்றதோ நாமும் அத்தகைய நிலையை அடைதல் வேண்டும்.

இதுவே மனிதனாக உருவாக்கிய நம் உயிரான ஆண்டவனுக்குச் செய்யவேண்டிய சேவை. இதன் பலனாக நாம் பிறவியில்லா நிலை அடையலாம்.

அகண்ட அண்டத்திலே என்றுமே அழியாத நிலைகள் கொண்டு பேரானந்தப் பெருவாழ்க்கை வாழலாம்.