ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2017

“நீ விழித்திரு.., நீ தனித்திரு..,”

நம் வாழ்க்கையில் எல்லோரும் அன்புடன் பண்புடன் பழகுகின்றோம். அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

ஆகவே, அதைப் போன்ற நிலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் “நீ விழித்திரு” என்று பெயரை வைக்கின்றார்கள்.

கஷ்டப்படுகின்றவர்களையும் குறை கூறுபவர்களைப் பற்றியும் வேதனைப்படுபவர்களையும் நாம் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வந்தால் தீமை செய்யும்.

அப்பொழுது உடனே நாம் என்ன செய்யவேண்டும்?

“ஈஸ்வரா..,” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஒருவர் நோயுடன் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்.., “உங்கள் உடல் நலமடையும்” என்ற உணர்வை அவருக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

ஒருவர் உங்களிடம் மற்றவர்களைப் பற்றிக் குறை கூறுகின்றார்கள். அல்லது உங்களைப் பற்றிக் குறையாகச் சொல்கிறார்கள் என்றால் உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தூய்மைப்படுத்திக் கொண்ட பின்.., “எல்லோரும் நல்லவராக வேண்டும். எல்லோருக்கும் என் மீது அன்பு வரவேண்டும்.., அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா..,” என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணினோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகள் எதுவும் நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாவதில்லை.

அதனால் தான் “நீ விழித்திரு…, நீ தனித்திரு..,”

அப்படி என்றால் விழித்திருந்து மற்ற தீமையான உணர்வுகளை நமக்குள் விடாதபடி நாம் எந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்தோமோ அதிலே நாம் தனித்து இருக்க வேண்டும்.

நீ விழித்திரு, நீ தனித்திரு என்று சொன்னால்.., உடனே என்ன செய்கின்றார்கள்? வேறு விதமாக “எங்கேங்கோ..,” கொண்டு செல்கின்றார்கள்.

அர்த்தத்தை அனர்த்தம் செய்து அதர்ம உணர்வைத்தான் அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி நமக்குள் புகுத்தியிருக்கின்றார்கள்.

எப்பொழுதுமே.., “பிறிதொரு உணர்வுகள் நம்மை இயக்கக்கூடாது”.

அந்த அருள் உணர்வுகள் நாம் பெறவேண்டும் என்று நாம் தனித்து நின்று மற்றவர்களுக்கு என்ன செய்யவேண்டும்?

“அந்த அருள் ஒளியினை நாம் பாய்ச்சி.., இப்படித்தான் ஆகவேண்டும்” என்று எண்ணினால் அவர்களையும் நல்லவர்களாக்க முடியும். ஆகவே, நம்மை அவர்கள் பார்க்கப்படும் பொழுது நம்மைப்பற்றி குறை சொல்லும் உணர்வுகளே அங்கே மாறிவிடும்.

இரண்டு தரம் நல்லதாக வேண்டும் என்று நாம் சொன்னாலும் மீண்டும் கொஞ்சம் தூண்டிப் பார்ப்பார்கள்.

“எல்லோரும் நல்லவராக வேண்டும்”. என்னைப் பார்க்கும்பொழுது எல்லோருக்கும் பேரன்பு வரவேண்டும்.., மகிழ்ந்திடும் உணர்வுகள் வரவேண்டும்.., என்று மீண்டும் நமக்குள் இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற இந்த உணர்வைச் சேர்த்து இதை உருவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தக் கரு மீண்டும் அந்த உணர்வைக் கூட்டித் தீமை நமக்குள் புகாதபடி தடுக்கச் செய்யும்.

எப்படிக் காரமான மிளகாயைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோமோ உப்பைச் சேர்த்து சுவைப்படுத்துகின்றோமோ இதைப் போல நம் உணர்வின் அணுக்களைச் சுவைமிக்கதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

அதனால் தான் நம் ஆறாவது அறிவைப் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று காட்டுகின்றார்கள்.

இன்று விஞ்ஞான அறிவைக் கொண்டு மற்ற அணுக்களைச் சேர்த்து உயிரினங்களை மாற்றித் தாவர இனங்களை மாற்றி உடலுக்குள் நோய்களை மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

இதே போல நமக்குள் அணுக்கள் உற்பத்தி ஆகும் பொழுது மற்ற தீமையான அணுக்கள் அது கலந்தாலும் அதைத் தணித்து நாம் அருள் உணர்வின் தன்மையை வளர்க்க வேண்டும். வளர்க்க முடியும்.

ஆகவே தான், “விழித்திரு தனித்திரு” என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள். விழிப்பான நிலைகளில் நாம் இருந்து தீமைகள் வந்தாலும் தனித்தன்மையாக அதற்குள் அருள் சக்தியைச் சேர்த்து தீமையை வென்றிடும் நிலையாகப் பெறுதல் வேண்டும்.