ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 23, 2017

பித்தம் உடலுக்குள் எப்படி அதிகரிக்கின்றது? அதன் கடைசி முடிவு என்ன? மாற்றும் வழி என்ன?

உயிரினங்கள் ஒன்றை ஒன்று கொன்று அதன் வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது. அதனின் வளர்ச்சியில் மனிதனாக நாம் இன்று வந்துள்ளோம்.

வந்த பின் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் செயல்களைப் பார்க்க நேர்கின்றது.

1.கோபப்படுவோரை
2.நோய்வாய்ப்படுவோரை
3.வேதனைப்படுவோரை
4.வேதனைப்படுத்துவோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம் உடலில் “ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது”.

எந்தந்த குணத்திற்குத்தக்க உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலக்க ஆரம்பித்துவிடுகின்றது.

அப்பொழுது நம் உறுப்புகளில் இருக்கும் நுரையீரல் கல்லீரல் கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்தம் சுழன்று வரும் பொழுது மற்ற ஈரல்களில் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தின் தன்மையால் சோர்வின் தன்மை அடைகின்றது. அதனின் இயக்கங்களும் குறைகின்றது.

ஏனென்றால், “இரத்தத்தில் அதற்கு வேண்டிய உணர்வு (உணவு)” கிடைப்பதில்லை. அது உடனே வாடிவிடுகின்றது அல்லது மடிய வைத்துவிடுகின்றது.

மடிந்துவிட்டால் அந்த உறுப்புகள் சீர்கெட்டுவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.

ஒரு குளவி புழுவை எடுத்து வந்து தன் விஷத்தால் அதைக் கொட்டும் பொழுது அந்தப் புழு “குளவியாக” மாறுகின்றது.

இதைப் போல (வேதனை உணர்வுகள்) அந்த விஷத் தன்மை இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது விஷத்தை வடிகட்டும்.., “ஏற்றுக் கொள்ளக் கூடிய பித்த சுரப்பிகள்” அந்த விஷத் தன்மைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும்.
அந்த விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகிவிட்டால்.., அது உமிழ்த்த நேர்ந்தால்.., “பித்தம்” என்ற நிலைகள் நம் உடலுக்குள் அதிகரிக்கும்.

அதனால் அடிக்கடி சோர்வடையச் செய்து நம்மையறியாமல் “தலை சுற்றுவதும்” சிந்தனையற்ற நிலைகளாகவும் ஆகிவிடும்.

அப்பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாது போய்விடும். இதற்கு எதிர் நிலையான நிலைகள் ஆகிவிடுகின்றது.

ஆனால், பித்த சுரப்பிகள் அதிகமாகிவிட்டால் பச்சைக் காய்கறிகள் சாப்பிட்டால் அதைச் ஜீரணிக்கக்கூடிய சக்தி அதற்கு உண்டு.

மிருகங்களெல்லாம் பச்சையாக உணவை உட்கொண்டு பழகியது. இயற்கையில் விளைந்த தாவரங்கள் விஷத்தின் ஈர்ப்பால் விளைகின்றது. அதிலுள்ள தொக்கியுள்ள விஷத்தைத் தனக்குள் பெருக்கி இதே சத்தைத் தனது உணவாக மாற்றி மிருகங்கள் வலு கொண்ட உடலாக மாற்றும்.

வலு கொண்ட உடலாக ஆகவேண்டும் என்பதற்காக அதற்குத்தக்க “பச்சைக் காய்கறிகளை.., உணவாக உட்கொள்ளுங்கள்” என்று டாக்டர்கள் சொல்வார்கள்.

இதன் உணர்வு வழிப்படி நாம் உட்கொண்டாலும் கூட இந்த உடலை விட்டுச் சென்றபின் என்ன ஆவோம்?

இப்பொழுது ஆடு மாடெல்லாம் பச்சையாகத் தான் மற்றவைகளைச் சாப்பிடுகின்றது. “வேகவைத்தா சாப்பிடுகிறது…? இல்லை”.

இதன் உணர்வு கொண்டு உறுப்புகள் மாறி நம் உடலுக்குள் வலு கூடும். ஆனால், இந்த உடலில் “நீடித்த நாள்” நாம் இருக்கப் போவதில்லை.

இந்த உடலில் இருக்கும் வரை “சுகத்தை” வேண்டும் என்றால் தேடலாம். அடுத்து இதுவே எதிர்நிலையாகி இந்த உடலில் மாற்றமாகிவிடும்.

பித்த சுரப்பிகள் அதிகமாக அதிகமாக உடலில் இந்த அணுக்களின் பெருகமாகி நம் மனித உடலுக்கு எதிர் நிலையாகி அது அதிகரித்த பின் அதுவே நோயாக மாறி இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்றுவிடும்.

பின் நாம் எந்தெந்தக் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டோமோ அதன் ஈர்ப்புக்கொப்ப இந்த உணர்வுகள் மாறி “அங்கே தான்” செல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம். அடுத்து வெளியிலே போனபின் அதன் ஈர்ப்புக்குள் சென்று அதற்குத்தக்க உறுப்புகளை மாற்றி பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளும் உடலை அமைத்துவிடும் இந்த உயிர்.

1.உணர்வுகள் எதுவோ அதற்குத்தக்க தான்
2.உயிர் அந்த உருவங்களை அமைக்கும்.
3.அந்த அணுவின் மலங்கள் தான் உடலின் நிலைகள்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளைக் காணும்போதெல்லாம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதைச் சேர்த்து விஷத்தை வெல்ல வேண்டும். “விஷத்தை வென்றிடும் அணுக்களாக” நமக்குள் பெருக்க வேண்டும்.

பரிணாம வளர்ச்சியில் விஷத்தைக் குறைத்து இன்று மனிதனாக வந்த நாம் விஷத்தை வென்றிடும் இதனின் கணக்குக் கூடக் கூட விஷத்தை ஒளியாக மாற்றிடும் வளர்ச்சி பெறுவோம்.

“ஒளியின் சுடராகப் பெற்றிடுவோம்”. மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடலாம்.