ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2017

விஷ்ணு தத்துவம் - 4

சங்கு சக்கரதாரி விஷ்ணு (உயிரின் இயக்கம்)
வேதங்கள் என்றாலே.., “நாதங்கள்”. வேதங்கள் என்ற முறையில் எது எது எதனில் மோதுகின்றதோ அந்த நாதங்கள் வரும்.

அதாவது ஒரு உயிரணு எந்த உணர்வின் தன்மையை எடுத்ததோ எந்த ஆசையின் தன்மையப் பெற்றதோ அதற்கு “எதிர்நிலையான” உணர்வுகளைச் சுவாசிக்கும்போது அந்த உணர்வுகள் உயிரிலே மோதி நாதங்களாகிறது.

இதைத்தான் சங்கு சக்கரதாரி என்பது.

1.நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே மோதும்போது.., “சப்தம்” வருகின்றது சங்கு
2.நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் “சுழன்று” வரும் பொழுது.., சக்கரம்.

ஞானிகள் உயிரின் இயக்கத்தை “ஈசன்” என்றும் இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை “விஷ்ணு” என்றும் ஈர்க்கும் காந்தத்தை “இலட்சுமி” என்றும் காரணப்பெயரை வைக்கின்றனர்.

காந்தம் இழுத்து உயிரிலே மோதப்படும் பொழுது அந்தச் சப்தம் வருகின்றது. அதைத் தான் “சங்கு” என்றும் அந்த உணர்ச்சிகள் நம் எண்ணம் சொல் செயலாக இயக்கப்படும் பொழுது “சக்கரம்” என்றும் உணர்த்தினர்.

வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் என்ற நிலைகளை நாம் எடுத்தால் அதற்குத்தக்க சூரியனிலிருந்து வரக்கூடிய இயக்க அணு எடுத்துக் கொண்டதை நாம் நுகர்ந்தால் உயிரிலே பட்டு மோதி உணர்ச்சிக்கொப்ப (அதுதான் சங்கு) அந்த உணர்ச்சிகள் (சக்கரம்) நம்மை இயக்குகின்றது.

உதாரணமாக, ஒருவன் கோபப்படுகிறான் என்றால் அந்த உணர்வை வெப்பம், காந்தம் விஷம் என்ற நிலையில் சூரியனிலிருந்து வெளிப்படுகின்றது.

கோபமான உணர்ச்சிகளை நாம் உற்றுப்பார்த்து, அதை நமக்குள் நுகர்ந்தால் காரமான சுவையாக, காரத்தின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

ஆனால், வலிமை மிக்கது. காரம் என்ற நிலையும், அந்தக் காரம் என்ற நிலையை இணைத்தால் இதனுடைய செயல்கள் அடிமைப்படுத்திவிடும்.., மாற்றிவிடும்.., மாறிவிடும்.

இவ்வளவு பெரிய தத்துவத்தை நாம் எளிதில் புரிந்து “நம் வாழ்க்கை எவ்வாறு நடத்த வேண்டும்?” என்று காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.

அந்தக் கோபமான உணர்வை நுகரப்படப் போகும் பொழுது நம் உயிரிலே பட்டபிறகு சப்தங்கள் வருகின்றது. உணர்ச்சிகள் இந்த சப்தமாகி, இதே உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறுகின்றன.

அந்த உணர்வுதான் சப்தம். உணர்ச்சிகள் இயக்குகின்றது, “சக்கரம்” இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும் கார உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது? கோபமாகின்றது.
.
ஒருவர் வேதனையான உணர்வுடன் பேசுகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம், நுகர்கின்றோம்.

அந்த வேதனையான உணர்வுகள் நம் சாந்தமான குணத்தை அழிக்கின்றது. நமக்குள் சிந்தனையற்ற நிலைகள் ஏற்பட்டு நாம் சோர்ந்து விடுகின்றோம்.

“விஷ்ணுவின் கையில் என்ன இருக்கின்றது? சங்கும், சக்கரமும்” நம்முள் வேதனைப்படும் உணர்வின் ஒலி ஆனபின் இந்த உணர்வின் அதிர்வுகள் நமது உடல் முழுவதும் சக்கரம் போன்று சுழல்கின்றது.

இதுபோல நுகர்ந்தால் என்ன ஆகின்றது? வேதனையான உணர்ச்சிகள் தூண்டப்பட்டு  நம் உடலைப் பலவீனமடையச் செய்கின்றது. இதையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
“சங்கு – சக்கரம்” நமது உயிரின் தெளிவான நிலைகள் கொண்டு நாம் எப்படி இயக்குகின்றோம்?

நமது உயிர் நமது உடலுக்குள் எவ்வழியில் இந்த உணர்வுகளை இயக்குகின்றது என்பதனை அறிவதற்குத்தான் நம் உயிரின் இயக்கத்தை “உருவம் அமைத்து.., அருவ நிலைகளில்.., அது எப்படி இயங்குகின்றது?” என்பதனைக் காட்டினார்கள் ஞானிகள்.

1.எது இயக்குகின்றது?
2.நாம் எங்கிருந்து வந்தோம்?
3.நமது உயிர் எப்படி இயக்குகின்றது? என்பதை அங்கே தெளிவாகக் காண்பிக்கிறார்கள்.

நாம் நம் உயிரை அறிந்து “தீமைகளை நீக்கி” எவ்வாறு செயல்பட வேண்டும் என்று உணர்த்துகின்றனர் ஞானிகள்.