“சப்” என்று இருக்கக்கூடிய
உணவுப் பொருளில் சிறிதளவு காரத்தைப் போட்டு அதில் உப்பையும் சிறிது இணைத்தால் ருசியாக
இருக்கும்.
ஆனால், காரத்தையும் உப்பையும்
சேர்க்கவில்லை என்றால் ருசி இருக்காது. எது எதெனெதனுடன் இணைக்கப்படும் பொழுது உணர்ச்சியின்
தன்மை தூண்டுகின்றது. உணர்வின் தன்மை செயல்படுகின்றது.
ஏனென்றால், மிளகாய் தனக்குள்
எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை வெகு வீரியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றது. அதனால்
தான் ஒரு மனிதனுக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைக்குக் கோபம் அவசியம் தேவை.
ஆனால், உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை
என்றால் நம்மை அது விழுங்கிவிடும். காரம் அதிகமாகிவிட்டால்.., என்ன சொல்கின்றோம்?
“ஸ்..ஸ்.., ஆ..ஆ..,” என்று
சப்தத்தை எழுப்புகின்றோம்.
காரத்தைச் சமப்படுத்தும்
பொழுது ருசியாகின்றது. “ஆஹா..ஹா.., தலையயும் ஆட்டுகின்றோம். அந்த உணர்ச்சியைத் தூண்டும்
சக்தி தேவை.
காரத்தின் தனித்தன்மையை
மாற்றி அந்தக் கோபத்தை உருவாக்கிவிடக் கூடாது. அந்தக் காரம் என்ற கோபமான உணர்ச்சியை
ஊட்டிவிட்டால் அந்த உணர்வு உணர்ச்சியை ஊட்டும் அணுக்களைப் பெருக்கிவிடும்.
அடிக்கடி மற்றவர்களை எண்ணி..,
“அவன் இப்படிச் செய்கின்றன்.., அப்படிச் செய்கின்றான்..,” என்ற இந்த உணர்வு வரப்படும்
பொழுது வேதனை கலந்து சிந்திக்கும் தன்மை எர்த் ஆகி (குறைந்து) கோபத்தின் நிலை அதிகமாகிவிடும்.
அப்பொழுது நம்மால் கட்டுப்படுத்த
முடியாது போய்விடும். “கிடு..கிடு..கிடு..கிடு.., என்று நம்மையறியாமலே உடலெல்லாம் நடுங்கும்.
கோபம் வருபவர்கள் “சிலரைப் பார்த்தோம்” என்றால் இப்படித்தான் இயக்கும்.
எனக்குக்கூட சில சமயங்களில்
அந்தக் கோபம் வரும்போது இந்த மாதிரி ஆகும்.
ஏனென்றால், அந்த உணர்வின்
அணுக்கள் நமக்குள் “ஊழ்வினை.., என்ற பதிவு” இருக்கின்றது. அது ஒட்டுமொத்தமாகக் கூட்டும்
பொழுது அது வளர்ந்துவிட்டால் நம் சிந்தனையை மாற்றிவிடும்.
இப்படி வந்தால் அந்த மகரிஷிகளின்
ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணி இதை அடக்கி இதைத் தணித்து “நமக்குள் தெளிவு..,” என்ற
நிலைகளில் கொண்டு வருதல் வேண்டும்.
பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால்
சத்துதான். அதைப் போன்று நண்பர்களுடன் நாம் பழகி அன்பால் பண்பால் நாம் பல உதவிகளைச்
செய்கின்றோம்…, நல்லதுதான்.
ஆனால், அவர்களுடைய சந்தர்ப்பம்
வேதனை என்ற உணர்வாகிவிட்டால் அதை நாம் நுகரும்பொழுது நம்முடைய நிலைகளும் மாறி அந்த
வேதனையை நமக்குள்ளும் உருவாக்கிவிடுகின்றது.
அந்த வேதனை நமக்கு வராது
பாதுகாத்தல் வேண்டும்.
யாம் இப்பொழுது கொடுக்கும்
இந்தச் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள்
பெறவேண்டும் ஈஸ்வரா.., என்று உயிரான ஈசனிடம் ஏக்கத்தைக் கொடுத்து வேண்டிடல் வேண்டும்.
ஏனென்றால், நம் உயிரிடம்
அவன் உற்பத்தி செய்ய நாம் ஏங்கி எடுத்தல் வேண்டும்.
அடுப்பில் நெருப்பை வைத்து
அதில் எந்தப் பொருளைக் கலக்கின்றோமோ அந்த ருசி தான் வரும். நம் உயிரின் வேலை நுகர்வதை
உருவாக்குவதுதான்.
இதைத்தான் விஷ்ணு வரம்
கொடுக்கின்றான், பிரம்மா உருவாக்குகின்றான், சிவனோ அழிக்கின்றான் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.
எனக்கு வரம் கொடுப்பதுதான்
தான் வேலை என்று விஷ்ணு சொல்கிறார். அப்படி என்றால் நம் உயிரில் படும் உணர்வை எல்லாம்
அது ஜீவன் பெறச் செய்கின்றது என்பதை அவ்வாறு காட்டுகின்றனர்.
பிரம்மாவோ.., என் தந்தை
விஷ்ணு இட்ட கட்டளைப்படி “உருவாக்குவது தான் என் வேலை..,” என்று சொல்கிறார்.
நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே
பட்டு ஜீவனாகி அணுவின் கருவாகிவிடுகின்றது. அணுவின் கருவாகிவிட்டால் எந்தக் குணத்தின்
தன்மை அணுவாகின்றதோ அந்த ஞானத்தின் வழி உணர்ச்சியை ஊட்டுவதும் அதைச் செயலாக்குவதும்
அதனுடைய வேலை.
ஆகவே, பிரம்மாவின் மனைவி
சரஸ்வதி என்று காட்டுகின்றார்கள்.
அந்த உணர்வின் தன்மை உடலுக்குள்
வந்தால் சிவனோ.., அரவணைத்துக் கொள்கின்றான். உயிரில் மோதி ஜீவனாகி அணுவாகி பிரம்மமாகும்
நிலையில் வருபவர்களை எல்லாம் வாருங்கள் என்று தான் வரவேற்கத்தான் முடியும் என்று இந்த
உடலான சிவம் காட்டுகின்றது.
நாம் எதை எண்ணினாலும் இந்த
உடல் வரவேற்று வைத்துக் கொள்கின்றது.
நம் உயிரின் இயக்க நிலைகளை
சாதாரண மனிதனும் புரியும் வண்ணம் காவியப்படைப்புகளாக்கி இதையெல்லாம் நமக்குத் தெளிவாகச்
சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
ஞானிகள் உணர்த்திய அருள்
வழியில் சென்றால் “தன்னைத் தான் அறிதல்” என்ற நிலையில் நம்மை நாம் அறியலாம். மனிதனுக்கு
அடுத்த நிலை.., “நாம் எங்கே செல்ல வேண்டும்?” என்ற பாதையும் புலப்படும்.