ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2017

செல்வத்தைத் தேடும்போதும் வேதனை.., செல்வத்தைக் காத்திடவும் வேதனை.., ஆனால் செல்வத்தால் நம்மைக் காக்கின்றோமா?

நாம் எண்ணும் உணர்வுகள் சிரசின் பாகம் “ஈஸ்வரலோகம்”. எதன் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உணர்வின் கருவாக உருவாக்கி நம் இரத்தநாளங்களில் அது வரப்படும்பொழுது அது “இந்திரலோகம்”.

அங்கே அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கிவிட்டால் “பிரம்மலோகம்” என்று அது அந்த உணர்வினை வளர்த்துவிடும்.

எந்த குணத்தின் தன்மை எடுத்துக் கொண்டோமோ அணுவாக ஆனபின் அதனின் மலமே நம் உடலாகின்றது. நல்ல குணத்தைக் கொண்ட அணுவின் மலமாக இருந்தால் நம் உடல் சீராக இருக்கின்றது. அழகாக இருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கின்றது.

வேதனை என்ற உணர்வை நாம் நுகர்ந்தால் உயிரான ஈசன் அதைக் கருவாக்கி இந்திரலோகமாக மாற்றி பிரம்மலோகமாக உரு பெற்றுச் சிவலோகமாக மாற்றுகின்றது.

ஆக, வேதனை என்ற உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் “நரகலோகமாக” மாற்றுகின்றது என்று பல முறை உங்களுக்குள் சொல்லியுள்ளேன், தெளிவாக்கியுள்ளேன்.

செல்வம் தேடுகின்றோம். ஆனால் தேடிய செல்வத்தால் மனிதர் நிலைத்திருக்கின்றனரா..? மனிதனால் தேடிய செல்வத்தைக் காக்க முடிகின்றதா..?

செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும்.., நிம்மதி வருகின்றதா..? வேதனையுடன் தான் வாழ்கின்றோம்.

செல்வத்தைத் தேட ஆசைப்படுகின்றோம். அதற்கடுத்து அந்தத் தேடிய செல்வத்தைக் காக்க.., மீண்டும் வேதனைப்படுகின்றோம்.

நேற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். இன்று செல்வத்தைத் தேடிக் குவிக்கின்றோம்.

சிரமப்படும்பொழுது நண்பராகப் பழகியவர்.., “நீ இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே.., ஏன்.., எனக்குச் பணம் கொடுக்கக்கூடாதா..,?” என்று கேட்பார்.

முதலில் ஏழ்மையில் வாடுகின்றோம். பின் வசதியாக வந்து விட்டோம். ஏழ்மையாக இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் வசதியான பின் நம்மிடம் பணம் கேட்கும்பொழுது நாம் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வான்?

“நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும்..,” என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு மற்றவர்களிடம் அவ்வாறு சொல்லிப் பறைசாற்றுவான்.

“கொடுக்கவில்லை” என்பதற்காக என்னை இப்படியெல்லாம் பேசுகின்றானே என்று வேதனை நமக்குள் வந்துவிடும்.

அத்தகைய வேதனை வந்துவிட்டால் நுகர்ந்த உணர்வுகள் நம் ஈஸ்வரலோகமாக இருக்கும் சிரசிற்குள் அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக கருவாக உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ ஈஸ்வரலோகத்திற்குள் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் பிரம்மலோகமாக மாறுகின்றது.

அணுவாகிவிட்டால் எந்த மனிதன் எதனால் குறை கூறி வேதனைப்பட்டானோ அந்த வேதனை உணர்வை நுகர்ந்து வேதனைப்படும் அணுக்களைப் பெருக்கி இந்த உடலையே வேதனைக்குரிய நிலையாக நோயாக மாறுகின்றது.

நோயாக மாற்றி சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடுகின்றது. இதை நீங்கள் நடைமுறையில் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே, செல்வத்தைத் தேடினாலும் சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை. இது போன்று செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை. செல்வம் தேடினாலும் உடலைக் காக்கும் நிலை இல்லை.

நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்கே தான் வாழ்கின்றோமே தவிர “இந்த உடலுக்குப் பின்.., என்ன..?” என்ற நிலையை யாரும் சிந்திக்கவில்லை.

நம்மைக் காக்க வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தி நமக்குத் தேவை.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கூறிய அருள் வழிப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை நம் வாழ்க்கையின் துன்பம் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உயிர் அணுக்களாக நம் உடலில் உருவாக்கிவிட்டால் அது தன் பசிக்காக உந்தும்பொழுது அந்த ஆற்றல்மிக்க உணர்வுகளை நாம் எளிதில் பெற முடியும்.

அதை வளர்க்க வளர்க்க எந்த மகரிஷியின் உணர்வுகளை அதிகமாக நாம் கவர்கின்றோமோ அவரின் ஈர்ப்பின் நிலைகள் கொண்டு அழியா ஒளி சரீரம் பெற்று பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

இதுதான் நாம் சேமிக்க வேண்டிய அழியாச் செல்வம். அழியாச் சொத்து.