ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2017

சிவ தத்துவம் - 2

சிவ ரூபம்
சிவ தத்துவத்தில் சக்தி சிவமாகும் விதத்தைக் காண்பித்து பரமசிவம் சர்வேஸ்வரன் ஈஸ்வரன் என்னும் நிலைகளையும் காண்பித்து அதனின் உண்மைகளை நம்மை அறியும்படி செய்தனர் ஞானிகள்.
1.பராசக்தி, கங்கை
சிவனைக் காண்பிக்கும் பொழுது சிவனுக்கு இரண்டு மனைவி என்றும் ஒரு மனைவி ஜடாமுடி மேல் உள்ள கங்கை என்றும் இன்னொரு மனைவி உடலில் சரி பகுதி பெற்ற பராசக்தி என்றும் உரைத்திருப்பார்கள்.

தான் நுகர்ந்த அணுவுக்குள் உள்ள வெப்பமும் தன்னுடன் இணைந்து இயங்குவதால் சிவனில் சரி பகுதி பராசக்தி என்று காட்டுகின்றார்கள்.

அதே மாதிரி நீரும் (கங்கை) நெருப்பும் கலந்து எப்பொருளின் தன்மையை தனக்குள் இணைக்கின்றதோ அது தன்னுடன் இணைந்து நிலமாக சிவமாக மாறுகின்றது என்ற நிலையை சிவ ரூபத்தின் மூலம் உணர்த்தினார்கள்.
2. திரிசூலம்
சிவன் கையில் உள்ள திரிசூலம் நீர் நிலம் நெருப்பை நமக்கு உணர்த்துகின்றது.

திரிசூலத்தில் உள்ள உடுக்கையின் மூலம் ஒரு பொருளின் தன்மை ஒன்றிலே மோதப்படும் பொழுது அதனின் மோதலின் நாதங்கள் மாறி உணர்வின் தன்மை எப்படி மாற்றங்களாகின்றது? என்ற நிலைகளை நமக்கு உணர்த்தினார்கள்.

ஒரு பக்கம் மோதி மறு பக்கம் மீண்டும் எப்படி நாதங்கள் எழும்புகின்றது என்று உணர்த்துகின்றார்கள்.
3. கழுத்திலும் கையிலும் பாம்புகள், யானைத் தோல், புலித் தோல் ஆடைகள்
சிவனின் கழுத்திலும் கையிலும் விஷம் கொண்ட பாம்புகள் இருக்கும்.

இதன் மூலம் விஷத்தின் இயக்கத்தையும் விஷத்தின் தன்மை மற்றொன்றுடன் கலந்தபின் அது எதனின் உணர்வை நுகர்ந்ததோ அதனின் இயக்கமாக இயக்கும் நிலையையும் நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

சிவன் உடலிலே யானைத்தோல், புலித்தோல், மான் தோல், இவற்றிலான உடைகள் இருப்பதாகக் காண்பித்துள்ளார்கள்.

மானும் சிவமே, யானையும் சிவமே, புலியும் சிவமே என்று உரைத்து இதனின் உணர்வினால், உடல்கள் மாற்றமாகி உணர்வின் தன்மை கொண்டு இன்று “மனிதனாக உருவானோம்.., என்பதையும் தெளிவாக்கியுள்ளார்கள்.
4. ஜடாமுடியில் பிறைச் சந்திரன்
ஜடாமுடியில் பிறைச் சந்திரனைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையப்படும் பொழுது அதனதன் செயல்கள்.., “சம பங்கு இழந்துவிடுகின்றன.

ஆக, அதனின் நிலைகள் குறைந்துவிடுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்கி உலகம் உருவான விதத்தை ஞானிகள் சிவரூபத்தின் மூலமாக நமக்கு உணர்த்துகின்றார்கள்.

இப்படி ஆதியில் கோள்களும், நட்சத்திரமும், சூரியனும், பிரபஞ்சமும் எப்படி உருவானது என்று நமக்கு உணர்த்தினார்கள் ஞானிகள்.

உயிரணுவின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும், மனித சரீரத்தையும் மனிதர் தம் உயிராத்மா பெறவேண்டிய நிலை எது? என்பதையும் நமக்கு உணர்த்துவதற்காக ஒரு உயிரணுவின் உள் நின்று இயக்கும் வெப்பத்தைக் கடவுள் என்று பெயரிட்டார்கள்.