ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2017

விஷ்ணு தத்துவம் - 2

இலட்சுமி நாராயணா
சூரியன் சுழலும் பொழுது இந்த பிரபஞ்சத்திற்குள் சர்வத்தையும் இயக்குகின்றது.

நமது உயிர் நமக்குள் இயங்கி இந்த உடலுக்குள் சர்வத்தையும் இயக்குகின்றது.

விண்ணின் ஆற்றலைச் சூரியன் தனக்குள் கவர்ந்து பிரபஞ்சத்தை இயக்குகின்றது.

நமது உயிரோ துடிப்பின் இயக்கமாக உடலுக்குள் இயங்குகின்றது.

சூரியனோ விண்ணில் ஓடும் பொழுது தன் அருகில் இருக்கும் காந்தப் புலனிலும் உராய்ந்து, சுழன்று வெப்பமாகின்றது. தான் கவரும் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிரித்து வெளிப்படுத்தி நல்ல உணர்வினை ஒளியாக மாற்றுகின்றது.

சூரியனிலிருந்து வரும் ஒளியை (வெப்ப காந்தங்களை), உயிர் தன் இயக்கத் துடிப்பில் ஈர்க்கும் பொழுது அந்த வெப்ப காந்தங்களுடன் மோதும் பொழுது அது வெப்பமாகின்றது.

உயிரை “{நர நாராயணன்” என்றும், சூரியனைநாராயணன்” என்றும் ஞானிகள் அழைத்தனர்.

சூரியனை, “லட்சுமி நாராயணன்” என்றும் அழைக்கின்றனர். 

“ஓர் காந்தப் புலன்” தனக்குள் அனைத்து சக்தியையும் இயக்கும் சக்தியாக விளைய வைக்கின்றது என்ற நிலையை விளங்க வைக்கின்றார்கள்.

காந்தப் புலனை லட்சுமி என்றும் அதன் ஈர்ப்பால் தனக்குள் அணைத்துப் பெரும் கோளாக மாறி சூரியனாகி எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டுஉலகை சிருஷ்டிக்கும் நிலையாக” அது உருப் பெற்றது என்பதனை நாமெல்லாம் அறிந்து கொள்வதற்குலட்சுமி நாராயணா..,” என்று பெயர் வைக்கின்றார்கள்.

சூரியனை, லட்சுமி நாராயணா என்றாலும் அந்த நாராயணனுக்கு இரு மனைவி என்று எழுதியுள்ளார்கள்.

காந்தத்தால் இழுத்து உடலாகப் பெறும் பொழுது சூரியனாகின்றது. சீதேவி என்பது லட்சுமி (காந்தம்), பூதேவி என்பது சூரியனின் உடலின் அமைப்பு.

நமது உயிருக்கு விஷ்ணுவின் மனைவிகள் பூதேவி, சீதேவி என்று பெயரை வைக்கின்றார்கள்.

உயிர் உடலுக்குள் நின்று இயக்கி அதனால் ஈர்க்கும் காந்தமாகி உயிரின் இயக்கத்திற்குள் துடித்து இயக்கும் நிலையைப் பூதேவி, சீதேவி என்று பெயரை வைக்கின்றார்கள்.

இயற்கையின் செயல்களை நாம் அறிந்துணர்ந்து, அதன் வழி மனிதனானவன் தெரிந்துணர்ந்து செயல்படும் நிலைகளை, அறியும் பொருட்டே இத்தகைய நிலைகளை எளிய முறையில் எடுத்துரைத்தார்கள் ஞானிகள்.

இந்த பிரபஞ்சத்திற்குள் நடக்கும் நிலைகளையும் நம் உடலுக்குள் நடக்கும் நிலைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

பிரபஞ்சத்திற்கு சூரியன் இயக்கச் சக்தியாக இருக்கின்றது. நமது உடலுக்குள் உயிர் இயக்கச் சக்தியாக இருக்கின்றது.

நமது உயிரை ஓம் ஈஸ்வரா குருதேவாஎன்று ஞானிகள் அழைத்தார்கள்.

நாம் ஓம் ஈஸ்வரா குருதேவாஎன்று சொல்லும் பொழுது வெறும் சொல்லாக இல்லாமல் புருவ மத்தியில்" நினைவைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அவ்வாறு பழகிக் கொண்டால் நமது உயிரை குருவாகவும் நாம் எண்ணியதை ஈசனாக உருவாக்கக் கூடிய நிலையை நாம் உணரமுடியும்.