ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2017

சிவ தத்துவம் - 13

சதாசிவம்
ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்றால் காலையில் இருந்து இரவு வரையிலும்..,
1. நாம் எதைப் பார்க்கின்றோமோ
2. எதைக் கேட்கின்றோமோ
3. எதை நுகர்கின்றோமோ”
அவை அனைத்தையும், நமது உயிர் “ஓ…” என்று இயக்கி “ம்...” என்று உடலாக மாற்றுகின்றது.

நமது உயிர் நமது உடலிலே “ஓ…” என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் எதையெல்லாம் எண்ணி நுகர்கின்றோமோ நுகர்ந்த உணர்வை அறிகின்றோம்.

இவ்வாறு நமக்குள் எத்தனை வகை குணங்களை நுகர்ந்து அறிகின்றோமோ அக்குணங்களின் செயலாக்கங்களை அறிந்து கொள்கின்றோம்.

ஆனால், அறிந்த அவ்வுணர்வுகளை நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றி.. ”ம்...” என்று நம் உடலோடு இணைத்து விடுகின்றது. 

இவ்வாறு இணைப்பதைத்தான் “ஓ...ம் நமச்சிவாய” “ஓ...ம் நமச்சிவாய” என்று மாமகரிஷிகள் உபதேசித்த சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு காலையிலிருந்து இரவு வரையிலும் “நாம் பார்த்தது எதுவோ கேட்டது எதுவோ” இந்த உணர்வுகளை நமக்குள்.., “சதா உடலாக..,” மாற்றிக் கொண்டே உள்ளது நமது உயிர்.

இதைத்தான் “சதாசிவம்” என்று தெளிவாக்கினர் ஞானியர்.

ஆகவே நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. அதைத்தான் “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று ஞானிகள் உணர்த்தினர்.

அதாவது மனிதனானபின் எனக்குள் அனைத்து அருள் ஞானத்தின் உணர்வைப் பதியச் செய்து.., இதற்கெல்லாம் நீயே குருவாக இருக்கின்றாய்.., உருவாக்கி இருக்கின்றாய்.., உணர்த்திக் கொண்டு இருக்கின்றாய்.., என்று “நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்.., உயிரான ஈசனை…, குருவை” நாம் அறிந்து கொள்ளும்படி செய்தனர் மகரிஷிகள்.