ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2016

பூப்புனித நீராட்டு விழாவில் பூப்பெய்திய பெண்ணை வாழ்த்த வேண்டிய முறை

ஒரு செடி பூ பூத்த பின் தான் காய்களே காய்த்து தன் பலனை வெளிப்படுத்துகின்றது. ஒரு பெண் பூப்பெய்துவதும் அது போன்றதே.

பூப்பெய்திய பெண்ணை ஒரு மணையில் அமர வைக்க வேண்டும். அந்தப் பெண் எதிரே ஐந்து குடங்களில் சுத்தமான நீரை வைத்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு வந்திருக்கும் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்து கீழ்க்ண்டவாறு தியானிக்க வேண்டும்.

 அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

அதன் பின்பு பூப்பெய்தி மனையில் அமர்ந்துள்ள பெண்ணை மனதில் எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்தப் பெண் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அந்தப் பெண் பொருளறிந்து செயல்படும் திறன் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அந்தப் பெண் எதிர்காலத்தில் குடும்பப் பொறுப்புடன் ஞான சக்தியாகச் செயல்பட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அந்தப் பெண் தன்னுடைய வாழ்க்கையில் மலரின் மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் கனியைப் போன்று அந்தப் பெண்ணின் சொல்லும் செயலும் சுவைமிக்கதாக இருந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று அனைவரும் எண்ணுதல் வேண்டும்.

இந்த உணர்வுகளை அங்கே அமர்ந்துள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து எண்ணும் பொழுது அதனின் உணர்வுகள் அந்த இல்லம் முழுவதும் படர்ந்து அந்தப் பெண்ணின் உணர்வில் கலக்கின்றது, உடலில் இணைகின்றது.

அந்தப் பெண் எதிர்காலத்தில் பொருளறிந்து செயல்படும் திறனுடனும் குடும்பப் பொறுப்புடைய ஞானத்துடனும் செயல்பட இந்த உணர்வுகள் உதவும்.

பின்பு, பூப்பெய்தி மனையில் அமர்ந்திருக்கும் பெண்ணின் உறவின பெண்கள் ஐந்து பேர் அங்கே வைக்கப்பட்டுள்ள ஐந்து குடத்து நீரை ஒவ்வொருவராக எடுத்து மேலே சொன்ன முறையில் ஆத்ம சுத்தி செய்து மனையில் அமர்ந்துள்ள பெண்ணின் தலையில் நீரை ஊற்ற வேண்டும்.

இந்த முறையில் ஆத்ம சுத்தி செய்து அந்தப் பெண்ணின் நலத்திற்காக தியானத்தின் மூலம் ஏங்கி எடுத்த உணர்வுகள் அந்தப் பெண்ணின் உடலில் வித்தாகப் பதிவாகின்றது.

அந்தப் பூப்பெய்திய பெண் கீழ்க்கண்டவாறு தியானிக்க வேண்டும்.

என் தாய் தந்தையரின் அருளாசி எனக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். நான் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். குடும்பப் பொறுப்புடைய ஞானத்துடன் செயல்பட வேண்டும், என் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து எண்ணி தியானித்து வரும் பொழுது இந்த உணர்வுகள் அந்தப் பெண்ணிடத்தில் ஊழ்வினையாக விளைகின்றன.

அதன் காரணமாக பொறுப்புடன் குடும்பத்தை நடத்திச் செல்லும் திறனும் அந்தப் பெண்ணிடத்தில் உருவாகும்.

அன்னை தந்தையரின் அருளாசியுடன் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுடன் வாழ்க்கையில் மன மகிழ்ச்சியுடன் குடும்பத்தில் சகோதர உணர்வுடன் அவள் வாழ்ந்து வளர்வாள்.

ஞானச் செல்வமாக உயர்ந்து வருவாள்.