ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 25, 2016

உலக மக்கள் அனைவரும் “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக” ஒன்றிணைந்து வாழ வேண்டும்

உலகில் உள்ள மதங்களும் இனங்களும் அரசியலும் மக்களைக் காத்திடும் கருத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. மக்கள் இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும், உணர்வுகள் தூய்மை பெறவேண்டும் என்று தான் அனைத்து அரசியலும் பேசுகின்றன.

இருப்பினும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டிய இவைகளுக்குள் பிரித்தாளுகின்ற தீமையின் உணர்வுகள் ஊடுருவி கோபம், குரோதம், அகங்காரம் என்ற உணர்வுகள் வளர்ந்து மக்களின் நல் உணர்வுகளை அடிமைப்படுத்தியுள்ளன.

இவைகள் அனைத்தும் மக்களிடையே பகைமைகளைத்தான் வளர்க்கின்றன.

மதமும் அரசியலும் நாட்டைக் காத்து மனிதனை நல்வழி நடத்திச் செல்ல உத்தேசித்தாலும் அவற்றில் உள்ள பேதங்கள் உருவாகி புலி தன் பசிக்காக மானை அடித்துக் கொள்வது போன்று பேதங்களால் மனிதனின் நல் உணர்வுகளில் கோப உணர்வுகள் புகுந்து நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக்கி அதனைக் கொன்று புசித்துக் கொண்டு உள்ளன.

மத பேதமானாலும் சரி, இன பேதமானாலும் சரி, அரசியல் பேதமானாலும் சரி அந்த பேதங்கள் அனைத்தும் மற்ற மதத்தை அழித்திட வேண்டும், மற்ற இனத்தை அழித்திட வேண்டும், பிறிதொரு அரசியலை அழித்திட வேண்டும் என்ற வெறி கொண்ட உணர்வுகளே வளர்ந்து நல்ல குணங்களை அழித்து விழுங்கிக் கொண்டுள்ளன.

மனிதர்களான நாம் நமது மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து “பிற மதங்கள் தீமையானவை.., என்று நமது எண்ணங்களை நினைவலைகளை இந்தக் காற்று மண்டலத்தில் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்.

இதனால் விளைந்த தீமைகளும் வெறித்தன்மையான உணர்வுகளும் நமக்குள் ஒருவரை ஒருவர் கொன்று புசிக்கும் உணர்வுகளை விளையச் செய்து பூமியில் பரவச் செய்து விடுகின்றன.

இதிலிருந்து மனிதன் காக்கப்பட வேண்டும் என்றுதான் மதங்களும் பேசுகின்றன, அரசியலும் பேசுகின்றன. ஆனால், இதில் உண்டாகும் “பேதங்கள் மனித உணர்வைக் கொன்றுவிடுகின்றன.

நமக்கு முன் படர்ந்து கொண்டிருக்கும் தீயவினைகளை நாம் அகற்ற வேண்டும்.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் அரசியல் பேதம் ஆகியவைகளை அடக்கி “உலக மக்கள் அனைவரும் ஒன்று என்ற நிலையை வளர்த்திட வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் ஓரினம், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்
உலக மக்கள் அனைவரும் ஓரினம், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். நாம் உயிரான ஈசனின் இயக்கத்தால் இயங்குகின்றோம். நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு மதத்தின் பெயராலோ குலத்தின் பெயராலோ வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.

ஆகவே, நமது உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எது? என்று உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

நம் பூமியே நமக்குத் தாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது அதனைக் காணும் தாய் மனமும் மகிழ்ச்சியடைகின்றது.

நாம் மகிழ்ச்சி அடையும் பொழுது வெளிப்படும் மூச்சலைகள் நமது தாய் பூமியில் படர்கின்றது. இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் பூமியில் படரும் பொழுது தாய் பூமியும் மகிழ்ந்திடும் நிலைகள் உருவாகும்.

உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒன்றிணைந்து வாழ வேண்டும். எல்லோரும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும்.

எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலுக் கொண்டதாக இணைக்க வேண்டும்.

ஆகவே, தியானம் மேற்கொள்ளும் அனைவரும் ஒன்று கூடி ஒருங்கிணைந்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு பின் உலக மக்களுக்காகத் தியானிக்க வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த உலகம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

உண்மையான தவம்
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் உலக மக்கள் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் மத பேதமின்றி, மொழி பேதமின்றி, மன பேதமின்றி, அரசியல் பேதமின்றி வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப இதை எண்ணி ஏங்கித் தியானியுங்கள், தவமிருங்கள்.

கோவிலுக்குச் சென்று ஆண்டவன் அருளைப் பெறவேண்டும் என்று எண்ணுவது தவம் இல்லை. “அந்த அருள் சக்தி உலகில் உள்ளோர் எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கித் தவமிருப்பது தான்  உண்மையான தவம்.

ஒவ்வொருவரும் இவ்வாறு எண்ணி ஏங்கித் தியானித்தால் ஏங்கி எடுத்த அந்தத் துருவ நட்சத்திர உணர்வலைகள் இந்த பூமிக்குள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்கின்றது. உலகெங்கிலும் படர்கின்றது.

நம் பூமியே நமக்குத் தாய் என்கிற பொழுது அந்தத் தாய்க்கு நாம் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

பூமியில் பிறந்த நாம் அனைவரும் அத்தாயின் பிள்ளைகள் என்று ஒருங்கிணைந்து  “நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற நிலையில் மத பேதமின்றி, மொழி பேதமின்றி, மன பேதமின்றி, அரசியல் பேதமின்றி வாழ்ந்திடுவதே நலம்.

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று எண்ண வேண்டும். “இந்த எண்ணம் தான் நமது தாய் பூமியைக் காக்கும்.
அருள் உலகை உருவாக்குங்கள்
இந்த உலகில் மனிதனாகப் பிறந்து தன்னையும் உலகையும் பல கோடி உணர்வையும் அறிந்து உயர்ந்த ஞானிகள் இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்குடன் பெற்ற உணர்வின் துணையால் உண்மையின் உணர்வை அறிந்து தன் நிலைகளில் உணர்வை ஒளியாக மாற்றி “விண் சென்ற மகரிஷிகள் பலர்.

மனிதராகப் பிறந்த அனைவரும் நட்பின் நிலைகள் கொண்டு சகோதரர்களாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தைத் தமக்குள் கண்டறிந்து அந்த உணர்வை வளர்த்து ஒருங்கிணைத்து ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் தான் சப்தரிஷிகள்.

அவர்கள் சென்ற பாதையில் நாம் செல்வோம். நாளைய உலகை அருள் உலகமாக மெய் உலகமாக மகரிஷிகள் உலகமாக உருவாக்குவோம்.