ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2016

பிறவியில்லா நிலை அடையச் செய்யும் விண் செல்லும் எளிதான மார்க்கம்

விண்ணிலே அணுவாகத் தோன்றி சூரியன் வரையிலும் வளர்கின்றது. சூரியன் தன் வளர்ச்சியில் உயிரணுக்களை உருவாக்கி மனிதனாக உருவாக்குகின்றது.

மனிதனான பின் மனிதனின் நிலைகளில் பிறவியில்லா நிலைகள் அடைந்த துருவ மகரிஷிகளின் உணர்வுகளை அவர்கள் பெற்ற வழியை குரு காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.

உணர்வுகளைப் பதிவு செய்த அதன் வழி நமக்குள் தியானித்து அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பெருக்கிய பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து வந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் அனைவரும் அந்தத் துருவ மகரிஷியின் வலு கொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பின் வலு கொண்டு அங்கே உந்தித் தள்ளப்படும் பொழுது அதன் உணர்வு அங்கே கலக்கப்படுகின்றது.

அதே சமயம் அந்த ஒளிக் கதிர்கள் உயிரான்மாக்கள் மேல் படப்படும் பொழுது உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவு நிலைத்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக வளர்ச்சி பெறத் தொடங்கிவிடுகின்றது.

அக்காலங்களில் இவ்வாறு சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள். அவர்களை முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.

எண்ணிலடங்காதவர்கள் தனக்குள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு அங்கே பிறவியில்லா நிலைகள் அடைந்தவர்கள்.

ஏனோ, காலத்தால் அதைப் பக்தி என்ற நிலைகளில் மாற்றப்பட்டு மனிதன் உடலின் இச்சைக்கே மாற்றிவிட்டார்கள். உண்மையின் உணர்வுகள் மறைந்தே போய்விட்டது. மெய்யை அறிய முடியாத நிலைகளில் தடைப்பட்டுவிட்டது.

இதைப் படித்துணர்ந்தோர் இனியாவது நீங்கள் உங்கள் குடும்பத்தில் உடலை விட்டுச் சென்ற மூதாதையர்களை விண் செலுத்த இதன் வழி தியானியுங்கள். அருள் ஒளியை உங்களுக்குள் பெருக்குங்கள்.

அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள். உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிடுங்கள். ஒளி பெறும் அறிவின் தன்மையை நிலைக்கச் செய்யுங்கள்.

அருள் மகரிஷிகளின் துணை கொண்டு என்றும் பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் பிறவியில்லா நிலைகளை அடையச் செய்யுங்கள். அவர்கள் முன் சென்றால் நாம் பின் செல்கின்றோம்.

அதன் உணர்வின் துணை கொண்டுதான் அதன் உணர்வை நமக்குள் கூர்மையாக்கப்படும் பொழுது அந்த வலிமை நமக்குள் பெறுகின்றது. ஆகவே, என்றும் பெரு வாழ்வான இந்தப் பேரின்பப் பெரு வாழ்வை அடைவதுதான் மனிதனின் கடைசி எல்லை.

அதன் பின் உலகில் நமக்குப் பிறவியில்லை. அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லலாம். எதனின் உணர்வையும் இருந்த இருப்பிடத்திலிருந்து நுகரலாம். அருள் ஒளியின் தன்மையை நாம் பெறலாம்.

இதனின் வழி கொண்டு நாம் செயல்படுத்துதல் வேண்டும். இந்த மனித உடலில் நினைவிருக்கும் பொழுதே அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும்.

இதன் உணர்வின் துணை கொண்டு நாம் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.