ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 23, 2016

நாம் வெளியிடும் எண்ணங்களும் மூச்சலைகளும் நம் வீட்டில் படர்ந்து எப்படி இயக்குகின்றது?

புது மனை புகுவோர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த வீடு முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த வீட்டில் இருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் பெற்று அவர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வினை “வீடு முழுவதும் படரச் செய்ய வேண்டும்”.

இங்கு வருவோர் அனைவரும் மகிழ்ந்திடும் நிலையாக இருக்க வேண்டும். அவர்களுடைய சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் என்ற உணர்வுகளை வீடு முழுவதும் படரவிட வேண்டும்.

இவ்வாறு நீங்கள் எண்ணும் எண்ணங்களும் வெளியிடும் சுவாசங்களும் அந்த வீட்டிலுள்ள சுவர்களிலும் தரைகளிலும் பதிகின்றது.

அப்படிப் பதிந்த நிலை எதுவோ அதனின் தன்மை அவைகளிலிருந்து வெளிப்பட்டு அங்கு வசிப்போர் மற்றும் அங்கு வருகை புரிவோர் அனைவரின் சுவாசங்களிலும் மோதி அவர்களுடைய உணர்வில் இது கலந்து அவர்களை மகிழச் செய்யும் நிலையாக அந்த உணர்வின் நிலைகள் இயக்கும்.

அதே சமயத்தில் அந்தக் குடும்பத்திலுள்ளவர்களால் வேதனை உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டு அது சுவர்களிலும் தரையிலும் பதிந்து இருக்குமானால் என்ன ஆகும்?

அந்த உணர்வுகள் வீட்டில் இருப்போர் மற்றும் வருகை தருவோர் அனைவரின் உணர்வுகளிலும் மோதி அவர்களின் சுவாசத்தில் இது கலந்து அவர்களும் வேதனை வெறுப்பை வெளிப்படுத்தும் நிலையாக அந்த உணர்வின் நிலைகள் இயக்கும் என்பதின் நிலையறிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, புது மனை புகுவோர் தமது வீட்டில் நல்ல உணர்வுகளைப் படரவேண்டும்

கோபம் வெறுப்பு வேதனை போன்ற தீய உணர்வுகளை அகற்றி எப்பொழுதும் மகிழச் செய்திடும் நிலையாக இருக்கச் செய்யும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை வீடு முழுவதும் நிறைந்திருக்கும் வண்ணம் உங்களுடைய உணர்வுகளைப் படரவிட வேண்டும்.

இதற்காக கூட்டுக் குடும்பத் தியானமும் கடைப்பிடித்து வர வேண்டும்.

புதுமனை புகுவோர் இதனை மனதில் இருத்தி விழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் அமரச் செய்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

 அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

பின் அனைவரும் ஒன்று சேர்ந்து கீழ்க்கண்டவாறு தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த இல்லம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

இங்கு குடியிருப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால்  உடல் நலம் மன பலம்  மன வளம் தொழில் வளம் செல்வம் செல்வாக்கு பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு வருவோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் உடல் நலம் மன பலம் மன வளம் தொழில் வளம் செல்வம் செல்வாக்கு சொல்வாக்கு பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வின் அலைகளை நாம் கூட்டாகத் தியானித்து அந்த இல்லத்தில் படரவிடும் பொழுது அது ஆற்றல்மிக்க சக்தியாகப் படர்கின்றது.

அந்த இல்லத்தில் கூட்டுக் குடும்பத் தியானங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க இல்லத்தில் குடியிருப்போர் அனைவரும் மென்மேலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலையுடன் செயல்பட முடிகின்றது.

அந்த இல்லமும் புனிதமடைகின்றது.