விண் சென்ற முதல் மனிதர் அகஸ்தியர்
இந்தப் பூமியில் மனிதனாகத் தோன்றி மனிதனாகத் தோன்றிய பின்
எவ்வாறு மனிதனாகப் பிறந்தோம் என்ற நிலைகளைத் தனக்குள் கண்டுணர்ந்து அதன் மூலம் அகஸ்தியர்
வெளிப்படுத்திய நிலைகள் தான் வான இயல், புவி இயல் உயிரியல் ஆகிய நிலைகள் ஆகும்.
சந்தர்ப்பத்தால் அறிந்து உணர்வின் இயக்கங்களை வலுப் பெறச்
செய்து உணர்வின் இயக்கத்தை அறியும் ஞானம் பெற்ற பின் துருவத்தை நுகர்ந்தறிந்து “துருவ
நட்சத்திரமாக” முதன் முதலில் விண் சென்றவர் அகஸ்தியர்.
உணர்வின் இயக்கங்கள் கோள்களின் இயக்கங்கள் பேரண்டத்தின்
ஆற்றல் ஆகியவற்றைக் கண்டறிந்து அகஸ்தியர் தம்முள் விளைய வைத்த உணர்வுகள் இன்றும் பூமியிலே
சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாகச் சுழன்று கொண்டுள்ளது.
அகஸ்தியர் வெளிப்படுத்திய உணர்வலைகளைத் தம்முள் கவர்ந்து
அதனின் உணர்வைத் தம்முள் விளைய வைத்து விண் சென்றவர்களில் ஒருவர் வியாசக பகவான். இவர்களைப்
பின்பற்றி விண் சென்றவர்கள் “சப்தரிஷி மண்டலங்களாக” இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.
தெய்வச் சிலைகள்
இத்தகையை மெய்ஞானிகள் கோள்களின் நிலைகளையும் அதனின் இயக்கங்களையும்
பேரண்டத்தின் ஆற்றலையும் மனிதனாக உருப்பெற்ற நிலைகளையும் மனித உணர்வுகளின் இயக்கங்களையும்
கண்டறிந்து அவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயரிட்டு அழைத்தனர்.
ஒவ்வொரு இயக்கத்திற்கும், ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு பெயரிட்டு
அதனைத் தெய்வச் சிலைகளாக வடித்து அதனின் தன்மை இத்தகையது என்று நமக்கு உணர்த்தினர்.
“இன்ன குணம் இன்னது நம்மில் செய்யும்” என்று அன்று பாமர
மக்கள் உணரவே சிலைகளை அமைத்துக் கோவில்களை உருவாக்கினர்.
விநாயகர்
ஆலயங்களில் முதலில் விநாயகர் சிலை இருக்கும். விநாயகரை
வணங்கிவிட்டுத் தான் செல்ல வேண்டும் என்பார்கள்.
ஏனென்றால், உயிரினங்களில் வலுவானது யானை, எண்ணத்தில் வலுவானவன்
மனிதன்.
முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மிருக நிலையிலிருந்து
நாம் மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று உணர்த்தவே விநாயகர் சிலையைப் படைத்தார்கள்
ஞானிகள்.
விநாயகரைப் பார்த்து நாம் எவ்வாறு வணங்க வேண்டும்?
“ஓம் ஈஸ்வரா..,” என்று நம் உயிரை எண்ணி அம்மா அப்பா அருளால்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எங்குதல்
வேண்டும்,
இந்த உண்மையை உணர்த்திய அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று விண்ணை நோக்கி ஏங்கி அந்தச் சுவாசத்தை அந்த உணர்வை
நம் உடல் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.
ஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும் விநாயகர் சிலையை வைத்ததன்
நோக்கமே பாமர மக்கள் அனைவரும் இந்தப் பேருண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
காளி
இதைப் போன்றே காளியின் ரூபத்தையும் காட்டுகின்றார்கள்.
காளி என்றால் எதையும் அழிக்க வல்லது. நாம் கோப குணமாக இருப்போம் என்றால் நம்முள் இருக்கும்
நல்ல குணங்கள் அழிகின்றது.
அதே போல் கோபமான உணர்வுகள் நமக்குள் அதிகமாக அதிகமாக நம்
உடலையும் வலுவிழக்கச் செய்துவிடுகின்றது.
ஆகவே, சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளவே உணர்வின் இயக்கங்களை
உருவமாகப் படைத்து நமக்கு உணர்த்தினார்கள் ஞானிகள்.
முருகன்
மனிதர்களின் சிறப்பு அம்சமாக உள்ள ஆறாவது அறிவு எதனையும்
மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது.
எனவே அதற்கு “முருகா” என்று பெயரிட்டு எதனையும் மாற்றியமைக்கும்
சக்தி நமக்குண்டு என்பதை நமக்குணர்த்தி அந்த குணத்தை வணங்கச் செய்தனர் ஞானிகள்.
உயிரே கடவுள்
எதனின் உணர்வை எடுக்கின்றோமோ அதனின் இயக்கமாக நமக்குள்
குருவாக இருந்து இயக்குவது நமது உயிர். நமக்கு ஆதிமூலமாக இருப்பது நம் உயிர்.
ஆகவே, “உயிரே கடவுள்” என்றும் அது வீற்றிருக்கும் சரீரத்தை
ஆலயம் என்றும் நமக்கு உணர்த்தினார்கள் ஞானிகள். இயற்கையின் ஒவ்வொரு இயக்கத்தின் தன்மையைத்
தெய்வச் சிலையாக்கி ஆலயத்தில் அமைத்தனர்.
தீப ஆராதனை
தெய்வச் சிலை இருக்கும் மூலஸ்தானத்தை இருட்டாக்கி அதற்கு
(அங்கே) தீப ஆராதனை காட்டும்படி வைத்தனர்.
காரணம், ஒளி கண்டு இருள் விலகி இருளில் இருக்கும் பொருள்களை
அது தெரியச் செய்கின்றது. அப்பொழுது அங்கே தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது நம்மிடமுள்ள
அறியாமை எனும் இருள் அகல்கின்றது.
வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறன் நாம் பெறவேண்டும்
என்பதற்கே தெய்வச் சிலைக்கு தீப ஆராதனை காண்பிக்கும் வழி முறையை ஏற்படுத்தினார்கள்
ஞானிகள்.
மலர் மாலைகள்
தெய்வச் சிலைகளுக்கு மலர் மாலைகளைச் சூட்டுகின்றோம். ஏனென்றால்,
மலரானது மணம் பரப்பி முகர்வோரை மகிழச் செய்திடும் நிலை கொண்டது.
நமது உணர்வின் மணமும் மலரின் மணம் போன்று மணம் பரப்பி
நம்மைப் பார்ப்பவரை மகிழச் செய்திடும் நிலை நாம் பெறவேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார்கள்
ஞானிகள்.
நம் ஞானிகள் செய்தவை அனைத்தும் நம் உயிரின் உணர்வின் ஆற்றலை
நமக்குணர்த்தி அதனின் ஆற்றலை நம்மிடத்தில் வளரச் செய்து அதன் மூலம் விண்ணின் ஆற்றலை
நமக்குள் பெருக்கி விண்ணில் என்றும் அழியா ஒளிச் சரீரமாகத் திகழும் நிலைக்காக இத்தகைய
வழி முறைகளை நமக்கு உணர்த்திச் சென்றார்கள்.
தெய்வசக்தியைப் பெறும் வழி
நாம் இதனின் பேருண்மகளை அறிந்து நமது ஆற்றலை நமக்குள்
வளர்த்துக் கொள்வது நலம்.
ஆகவே, ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது கீழ்க்கண்டவாறு
ஆத்ம சுத்தி செய்து கொண்டு உயர்ந்த நல் எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம்.
அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள்
அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.
பின், மூலஸ்தானத்தில் தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது
பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும்
திறன் பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்வில் தொழில்
வளமும் செல்வாக்கும் சொல்வாக்கும் உடல் நலமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய்
ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணத்தைப்
பெற அருள்வாய் ஈஸ்வரா. நாங்கள் பார்க்கும் அனைவரும் தெய்வ குணத்தைப் பெற அருள்வாய்
ஈஸ்வரா என்ற உணர்வுகளை நமக்குள் ஏங்கிப் பெருக்க வேண்டும்.
தெய்வச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மலர்களைப்
பார்த்து இந்த மலரைப் போன்ற மணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்த மலரைப் போன்ற
மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. நாங்கள் பார்க்கும்
அனைவரும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெற அருள்வாய் ஈஸ்வரா
என்ற உணர்வுகளை நமக்குள் ஏங்கிக் கூட்டுதல் வேண்டும்.
பின்பு, தெய்வச் சிலைக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் கனிகளைப்
பார்த்து இந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
என்று எண்ணுதல் வேண்டும்.
இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்தக் கனியைப் போன்ற
சுவையான சொல்லும் செயலும் பெற அருள்வாய் ஈஸ்வரா. நாங்கள் பார்க்கும் அனைவரும் இந்தக்
கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற இந்த உணர்வுகளை
நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
அபிஷேகம்
தெய்வச் சிலைக்குச் சந்தன அபிஷேகம் நடைபெறும். அப்பொழுது
சந்தனத்தைப் போன்ற மணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்தச் சந்தனத்தைப்
போன்ற மணம் பெற அருள்வாய் ஈஸ்வரா. நாங்கள் பார்க்கும் அனைவரும் சந்தனத்தைப் போன்ற மணம்
பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுகளை ஏங்கி நமக்குள் சேர்த்துக் கொள்தல் வேண்டும்.
தெய்வச் சிலைக்குச் பால் அபிஷேகம் நடைபெறும் பொழுது பாலைப்
போன்ற தெளிந்த மனதை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் பாலைப் போன்ற தெளிந்த
மனதைப் பெற அருள்வாய் ஈஸ்வரா. நாங்கள் பார்க்கும் அனைவரும் பாலைப் போன்ற தெளிந்த மனதைப்
பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுகளை ஏங்கிச் சுவாசித்து நமக்குள் சேர்த்துக் கொள்தல்
வேண்டும்.
இவ்வாறு இந்த உணர்வுகளை நாம் ஆலயங்களில் ஏங்கி எடுக்கும்
பொழுது சப்தரிஷிகள் காண்பித்த அருள் வழிப்படி அத்தகைய தெய்வ குணத்தை நாம் பெற முடிகின்றது.
அதே சமயத்தில் நாம் மற்ற அனைவருக்கும் தெய்வ குணத்தைக்
கிடைக்க வழி செய்கின்றோம். மேலும் சப்தரிஷிகள் காண்பித்த அருள் வழியின்படி நாம் ஆலயங்களில்
வணங்குவதன் மூலம் நம் உணர்வைப் புனிதப்படுத்திக் கொள்கின்றோம்.
அவ்வாறு புனிதப்படுத்தி உயிருடன் ஒன்றிய உணர்வை சப்தரிஷிகளின்
அருள் வட்டத்தில் இணைத்து நம் உயிராத்மாவை என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுமாறு வழியமைக்கின்றோம்.
இந்த நிலைக்காகவே சப்தரிஷிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள்.
அதில் எவ்வாறு வணங்க வேண்டும் என்றும் தெளிவாக நமக்கு உணர்த்தினார்கள்.
நம் உடல் ஒரு ஆலயம்
நமது உடலும் ஒரு ஆலயம் தான். அதில் வீற்றிருக்கும் உயிர்
தான் கடவுள்.
மேலே சொன்ன முறைப்படி வணங்கும் பொழுது நல்ல உணர்வுகளை
நாம் சுவாசிக்க நேருகின்றது. உயிரான ஈசனிடம் பட்டு நம் உடலில் அந்த உணர்வுகளைப் பரவச்
செய்கின்றது.
சொல்லில் இனிமை வருகின்றது. செயல்கள் புனிதம் பெறுகின்றன.
நம்மை இயக்கும் உயிர் அழியா ஒளிச் சரீரம் பெற வழி வகுக்கின்றது.
தெய்வ குணத்தைப்
பெறுவோம். தெய்வ சக்தியை வளர்ப்போம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா