ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2016

நம் குலதெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய தலையாய கடமை

நாம் இன்று நல்ல நிலைகளில் இருப்பதற்குக் காரணமே நமது மூதாதையர்கள்தான். அவர்கள் தன் வம்ச வழியில் வரும் அனைவரும் நல்ல நிலை பெறவேண்டும் என்று எண்ணிப் பாடுபட்டவர்கள்.

அவர்கள் வாழ்ந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தொழில் முறைகளிலோ சொந்த பந்தங்களினாலோ பல வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க நேரிட்டிருக்கும்.

அந்த உணர்வுகள் அவர்கள் ஆன்மாவில் பதிந்திருக்கும். தான் உடலுடன் இருக்கும் காலத்தில் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப எதனை அதிகமாகப் பதிவு செய்ததோ அதனின் நிலைகளில் அந்த உயிரான்மா இருக்கும்.

அவர்களின் இரத்தச் சம்பந்தப்பட்ட வழித் தோன்றல்களான நாம் தான் அந்த உணர்வுகளை நம் வலுவான தியானத்தின் மூலம் மாற்றி அவர்களை என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய முடியும்.

யாரும் இறப்பதில்லை.
உடல் தான் இறக்கின்றது.
உணர்வுகள் அழிவதில்லை.
உணர்வுகள் மாறுகின்றது.
உணர்வுகள் மாறிக் கொண்டேயிருக்கும்.
உணர்வுக்குத் தக்கவாறு உடல்கள் மாறும்.

ஒளியின் சரீரமான உணர்வாக மாற்றச் செய்வதுதான் மகரிஷிகள் உணர்த்திய தியானம்.

எந்த உயிராத்மா தன் உடலை விட்டுப் பிரிந்தாலும் அந்த உயிரான்மா இந்தப் பூமியில் மனித சரீரத்தில் தான் வாழ்ந்த காலத்தில் யார் மீது அதிகப் பாசத்துடன் இருந்ததோ அல்லது யார் மீது அதிகக் குரோதம் கொண்டிருந்ததோ அந்த உணர்வின் துணை கொண்டு அவர்களின் உடலில் உட்புகுந்து விடும்.

பாசத்துடன் இருந்தவர்கள் “இப்படி இறந்துவிட்டாரே.., என்று எண்ணுவார்கள்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா எந்த உணர்வுடன் உட்புகுந்தாலும் தான் வாழ்ந்த காலத்தில் எந்த நோயினால் அவதிப்பட்டதோ அந்த நிலைகளைத் தான் உடலிலும் செயல்படுத்தும்.

திரும்ப மனிதனாகப் பிறக்கும் நிலையில் அங்கு கரு ஆவதில்லை. தான் முன்பு எடுத்துக் கொண்ட வேதனை என்ற விஷத் தன்மையான உணர்வுகளைத் தான் புகுந்த உடலில் செயலாக்குகின்றது.

அதனின் வழியில் சுவாசிக்கின்றது. புகுந்த உடலில் அந்த விஷமான உணர்வுகளை வளர்த்துக் கொள்வதோடு  அந்த உடலையும் இந்த உணர்வின் ஆற்றலினால் வேதனைப்படச் செய்து நலியச் செய்கின்றது.

தானும் கெட்டுப் பிறரையும் கெடச் செய்கின்றது. எந்த உடலுக்குள் புகுந்து கொண்டதோ அது மரணமடையும் சமயம் தான் புகுந்து கொண்ட உயிரான்மா வெளிப்பட இயலும்.

எதனை அதிகமாக எந்த விஷத் தன்மையான உணர்வைத் தன்னில் வளர்த்துக் கொண்டதோ உடலை விட்டுப் பிரியும் இரு ஆன்மாக்களும் அந்த உணர்வின் மணத்தால் அதற்கொப்ப மறு உடலை உருவாக்கிக் கொள்கின்றன.

நம் குலதெய்வங்களான நம் வம்சத்து முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை பிற உடலில் புகாவண்ணம் நாம் காத்திட வேண்டும்.

நம்மைப் பண்புடன் அன்புடன் பரிவுடன் பாசத்துடன் வளர்த்து நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள் தங்களின் மனித வாழ்க்கையில் பெற்ற விஷமான வேதனையான உணர்வுகளை அவர்கள் ஆன்மாவில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பதிந்த தீய உணர்வுகளைச் சுருக்க வேண்டும்.

அவர்கள் மறு உடல் பெறாவண்ணம் நாம் செயல்பட வேண்டும். இதுவே நம் தலலையாயக் கடமையாகும்.

உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் பிரிந்த ஆன்மாவை எண்ணித் துக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அந்த ஆன்மாவை நம் குலதெய்வமாக மதித்து நம் குடும்பங்களைக் காக்கும் நிலை ஏற்படுத்துதல் வேண்டும்.

நாமும் நம் உறவினர்களுடன் கூடித் தியானிக்க வேண்டும். முதலில் அனைவரும் சேர்ந்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அனைவரும் கூடி வலுவேற்றிய சக்தியின் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை விண் செலுத்த வேண்டும். மறு உடல் பெற்று வேதனைப்படாதபடி சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

குறிப்பு: ஆத்ம சுத்தி செய்யாமல் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்தக் கூடாது. செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் நம் உடலில் உட் புக வாய்ப்புண்டு.

நம் பூமியிலிருந்து முதன் முதலில் விண் சென்றவர் அகஸ்தியர் இன்று துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டுள்ளார். அவரின் உணர்வின் ஆற்றலைப் பெற்று விண் சென்றவர்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இணைந்து ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வின் ஆற்றல்மிக்க சக்தியை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து பரவிக கொண்டிருக்கின்றது.

அவர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்த காலங்களில் கடும் தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகளை வென்று தீமைகளை வென்றிடும் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்து உணர்வுகளை ஒளியாக மாற்றி இன்றும் விண் உலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் ஆற்றலை குரு வழியில் கவர்ந்து ஆத்ம சுத்தி மற்றும் தியானம் மூலம் நமக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

நம்மிடம் வளர்த்த நிலைகள் கொண்டுதான் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் பொழுது அவர்கள் ஆன்மாவில் பட்ட வேதனைகள் கரைகின்றது. ஒளியின் சரீரம் பெறுகின்றனர்.

அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்த பின் அந்த ஆன்மாக்கள் பெறும் விண்ணின் ஆற்றல்களை நாம் எளிதில் பெற முடியும்.

விஞ்ஞானி ஒரு இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்வெளியில் ஏவுகின்றார். செயற்கைக் கோள் மூலம் விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து அதனுடன் இணைந்த நிலைகள் அதை பூமிக்கு அனுப்புகின்றது.

இங்கே கீழே உள்ள சாதனம் மூலம் அதைக் கவர்ந்து கொள்கின்றனர். அதைப் போல நாம் நம்முடன் வாழ்ந்த வளர்ந்த உயிரான்மாக்களை விண் செலுத்தும் பொழுது அதன் மூலம் விண்ணின் ஆற்றலை நாம் பெற முடியும்.

விண்ணின் ஆற்றல் நமக்குள் சேரச் சேர நம்மையறியாது நம்மிடம் சேர்ந்த தீமையை விளைய வைக்கும் உணர்வுகள் மாறுகின்றது. நம் உயிரான்மா புனிதம் அடைகின்றது.

நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் எப்பொழுதும் அந்த சப்தரிஷிகளின் உணர்வின் ஆற்றலுடன் ஒன்றியிருப்பதால் பிறவியில்லா நிலை பெறுகின்றோம்.

ஆக, மனித வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் இன்னல்களைக் களைய முடிகின்றது. மன நிறைவும் மன மகிழ்ச்சியும் ஆரோக்கிய நிலையும் எல்லா நலமும் வளமும் பெற்று நாம் வாழ முடிகின்றது.

அதே சமயம் நம்மிடத்தில் அந்த உணர்வுகள் அதிகமாவதால் உயிருடன் ஒன்றிய அழியா ஒளிச் சரீரம் பெறுவது திண்ணம். நாமும் நன்மை பெறுகின்றோம். நம்மைச் சார்ந்தவர்களையும் நன்மை பெறச் செய்கின்றோம்.

சம்பிரதாயம், சடங்கு, சாங்கியம் இவைகளில் கவனம் செலுத்தாது இயற்கையின் உண்மை நிலைகளை உணர்ந்து உணர்வின் இயக்கங்களை உணர்ந்து செயல்படுங்கள்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

பத்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து கொண்டபின்பு எங்கள் குலங்களின் தெய்வங்களான மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அழியா ஒளி சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்து பெரு வீரு பெரு நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன் மூதாதையரின் உயிரான்மாக்களை விண்ணை நோக்கி உந்திச் செலுத்த வேண்டும்.

இதை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்து வர வேண்டும். குடும்பத்திலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்வது அவசியம். இது அந்தந்தக் குடும்பத்தாரின் தலையாயக் கடமையாகும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம் செய்யும் அனைவரையுமே பௌர்ணமி அன்று ஒருங்கிணைக்கச் செய்து அன்று எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றலைக் குவிக்கச் செய்து உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை எளிதில் விண் செலுத்தும் நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த முறையில் முன்னோர்களை நாம் விண் செலுத்தும் பொழுது அவர்களின் துணை கொண்டு நாமும் அவர்கள் சென்ற எல்லையை சுலபத்தில் அடைய முடியும்.

நாம் விண் செலுத்திய ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களில் வளர வளர அந்த உணர்வுகளை நாம் பெறுதல் திண்ணம்.