தீமைகளை வென்ற துருவ
மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து இந்த நினைவினைக் கூர்மையாக எண்ணி அந்த உணர்வைத்
தனக்குள் பாய்ச்சித் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று செருகேற்றி அதே
போன்று தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவி செலுத்துவதும் இவ்வாறு
செய்தவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக்கி சப்தரிஷிகளாக ஒளியாக மாறி
இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
அதனைப்
பெறுவதற்குச் செய்த மார்க்கங்கள் அனைத்தும் அடைப்பட்டுவிட்டது. மதங்களாக
மாற்றிவிட்டனர். மதத்தின் உணர்வுகளைச் செருகிவிட்டனர்.
அருள் ஞானிகள்
காட்டிய அருள் வழிகளை நாம் இன்றும் தேடிக்கொண்டிருக்கின்றோம். எத்தனையோ வகையில்
நல்லதைத் தேடுகின்றார்கள். நல்லதைத் தேடி அலைகின்றார்கள்,
உண்மை கிடைக்கவில்லை.
ஆனால், இதைப் போல இந்தப்
பேருண்மையின் நிலைகளை அறிவதற்கு எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் குருநாதர் எமக்குக்
கொடுத்தார்.
பல விபத்தான
இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். விபரீதங்கள் பல நடப்பதையும் காட்டினார். அந்த
விபரீதத்தை நுகரப்படும் பொழுது சிறிது நேரத்திற்குள் உன் உடலுக்குள் அது என்ன
செய்கிறது?
உன்னுடைய இருதயம்
எப்படித் துடிக்கின்றது? அணுக்களின் நிலைகள் எப்படி மாற்றமடைகின்றது? உன்னுடைய
எண்ணங்கள் எப்படி மாறுகின்றது? உணர்வின் அணுக்கள் எப்படி உருவாகின்றது? என்ற
நிலையை குருநாதர் உணர்த்துகின்றார்.
இதற்கு மாற்று
வழியாக “என்னென்ன வழிகள்” என்று அதை மாற்றிடும் மார்க்கங்களையும் காட்டினார். மாற்றிடவும்
செய்தார்.
மாற்றிடும் உணர்வை
நுகரவும் செய்தார். ஆக, நுகரச் செய்ய வைத்தார். நுகர்ந்தேன், மாற்றினேன்.
இதைப் போல யாம்
கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைத் தான் உங்களுக்குள் உபதேசித்து வருகின்றோம்.
உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களைக்
கடந்து இன்று மனிதனாக இருந்தாலும் இந்த வாழ்க்கையில் இன்னலைத்தான் சந்தித்துக்
கொண்டிருக்கின்றீர்கள்.
வேதனை வெறுப்பு
கோபம் கொதிப்பு என்ற உணர்வுகளை அதிகமாக வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மனிதன்
மீண்டும் தேய்பிறை என்ற நிலைகளுக்கே வருகின்றான்.
எதன் வழிகளில்
ஒருவர் நம்மைக் குறை கூறுகின்றனரோ அதை நமக்குள் அதிகமாக வளர்த்துவிட்டோம் என்றால்
அதன் உணர்வு கூர்மையாகி அதனின் வலிமையானபின் குறை கூறுபவரின் உடலுக்குள்
சென்றுவிடுவோம்.
ஆகவே, இதைப் போன்ற
நிலைகளிலிருந்து விடுபட உங்களுடைய கூர்மையின் எண்ணங்கள் அந்த மகரிஷிகளின் பால் சப்தரிஷி
மண்டலத்தில் செலுத்தும்படி வேண்டிக் கொள்கின்றோம்.
அந்த அருள்
மகரிஷிகளின் அருள் சக்தியை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உடலிலுள்ள
ஒவ்வொரு அணுக்களிலும் ஒவ்வொரு உணர்வுகளிலும் இதைப் பாய்ச்சுகின்றேன்.
நீங்கள் பரிணாம
வளர்ச்சியில் வளர்ந்து வந்ததை நினைவுப்படுத்தி அந்தக் கூர்மை கொண்டு அந்தத் துருவ
நட்சத்திரத்தின்பால் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறுங்கள்.
உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.
துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று பெண்களும் தன் மனைவிக்குக்
கிடைக்க வேண்டும் என்று ஆண்களும் இந்த உணர்வுகளை எவர் செலுத்துகின்றனரோ அது
கூர்மையாகின்றது.
தொடர்ந்து செய்து
வந்தால் அதன் உணர்வுகள் வலிமையாகின்றது. அந்த வலுவான உணர்வின் தன்மை கொண்டு நாம் சப்தரிஷி
மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நுழைகின்றோம்.
பெரு வீடு என்ற
நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நாம்
அடைகின்றோம். இது நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி.