நாம் வியாபாரியாகவோ விவசாயியாகவோ அதிகாரியாகவோ அல்லது
தொழில் அதிபராகவோ இருக்கலாம்.
ஒவ்வொரு நாளும் அன்றைய பொழுதில் நம் காரியமாக பல பேரைச்
சந்திக்க வேண்டியதிருக்கும். அவர்களிடம் பேசும் பொழுது நம் காரியத்திற்கு ஆவதை மட்டும் பேசுவதோடல்லாமல்
ஊர் நடப்பையும் உலக நடப்பையும் பேசுவோம்.
அவற்றில் நல்லவைகளை மட்டுமா நாம் பேசுவோம்?
நாட்டில் நிலவும் பல குறைகளையும் எடுத்துப் பேசுவோம். ஆனால் நாட்டில் இன்று நல்லவைகளை விட குறை
உணர்வுகளே அதிகம். ஆகையால் நம்மிடத்திலும் குறையான உணர்வுகளே
மிஞ்சியிருக்கும்.
நாம் நல்லவராக இருக்கலாம். இருப்பினும் நாம் ஒருவரைத் “திருடன்.., திருடன்..,” என்று கூறிக் கொண்டிருந்தோம் என்றால் அந்தக் குறையான உணர்வுகள் நம்முள் விளைந்து
நம்மையும் தவறு செய்யத் தூண்டும்.
அதே போன்று நாம் நாட்டு நடப்புகளைப் பேசி அதில் உள்ள குறைகளை
எண்ணிக் கொண்டிருந்தோம் என்றால் அந்தக் குறையான உணர்வுகள் நம்மை அதே குறைகளைச் செய்யும்
அளவிற்கு அழைத்துச் சென்றுவிடும்.
அதுமட்டுமல்லாமல் நாம் நம் பாதையில் செல்கிற பொழுது பலருடைய
சாப உணர்வுகள் நம் காதில் வந்து விழும். பல பேருடைய வேதனைகளைப் பார்த்திருப்போம். பலருடைய ஏச்சுக்களை பேச்சுகளை வாங்கியிருப்போம்.
இது போன்று பல உணர்வுகள் நம்மிடத்தில் வந்து பதிவாகியிருக்கும். இவ்வாறு நம்மிடத்தில் வந்து பதிந்துள்ள
உணர்வுகளை அன்றன்று துடைத்துப் பழகுதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உயிரான்மாவில்
இணைத்து நம்மிடத்தில் அறியாது சேர்ந்த வேதனையான உணர்வுகளை (நஞ்சினை) நீக்கிடவேண்டும்.
நாம் எந்த உணர்வை எடுத்துக் கொண்டு இரவில் உறங்கச் செல்கின்றோமோ
அதனின் உணர்வுகள் நம் சுவாசத்தில் கலந்து வலுப் பெறுகின்றன.
ஆகவே, இரவு உறங்குவதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெறவேண்டும் என்ற ஏக்கத்தை வலுவாக எடுத்து உறங்குவோமேயானால் அது நமக்கு மிகவும் பயனளிக்கும்.
இரவு உறங்கச் செல்லும் பொழுது கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி
செய்து கொள்வது நலம்.
அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள்
அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிட்டு ஒரு
நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இவ்வாறு ஐம்பது முறையோ நூறு முறையோ மனதில் எண்ணித் தியானியுங்கள். இரவிலே தூங்கச் செல்லும் பொழுதெல்லாம்
மேலே சொன்ன முறைப்படி தியானித்து ஆன்மாவினைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
உடலில் பட்ட அழுக்கினைக் குளித்து நீக்குகின்றோம். உடைகளில் பட்ட அழுக்கினைச் சோப்பினைக்
கொண்டு துவைத்து நீக்குகின்றோம்.
தினமும் பிறர் பேசும் குறைகளைக் கேட்பதாலும் தீய செயல்களைப்
பார்ப்பதாலும் ஆன்மாவில் படும் அழுக்கினை அவ்வப்பொழுது நீக்கிட வேண்டும்.
ஆகவே, துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆத்ம சுத்தி மூலம் உங்கள் உணர்வுகளில்
செருகேற்றிக் கொள்ளுங்கள்.
இதனின் துணை கொண்டு உங்கள் எண்ணங்கள் மன பலம் பெறவும்
தொழில் வளம் பெறவும் உங்களையறியாது சேர்ந்த தீமையை விளைய வைக்கும் உணர்வுகளிலிருந்து
விடுபட முடியும்.
மன மகிழ்ச்சி பெற இது வழி வகுக்கும்.