ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2016

இன்றைய குழந்தைகள் இந்த உலகுக்கே மிகப் பெரிய எடுத்துக்காட்டாக வளர முடியும்

பள்ளியில் படிப்பவர்களாகிய நீங்கள் உங்கள் தாய் தந்தையரை தெய்வமாக மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். தாய் தந்தை கூறும் நல்லறிவுரைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்.

தாய் தந்தையரின் அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும் பொழுது உங்களுக்கு வலு அதிகமாகின்றது. உங்களுடைய நல் ஒழுக்கத்தினால் நல்ல செயல்களினால் தாய் தந்தையர் மகிழ்ச்சி பெறும் பொழுது உங்களுடைய வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.

மாறாக தாய் தந்தையர் சொல்வதைக் கேட்காமல் சேஷ்டைகளையும் குறும்புத்தனமான செய்கைகளையும் செய்யும் பொழுது தாய் தந்தையரின் மனம் வருந்துகின்றது.

தாய் தந்தையர் மனம் வருந்தும்படி நாம் நடந்துகொள்ளக் கூடாது.

ஏனெனில் ஒவ்வொருவரும் மகிழ்ந்த நிலையாக இருக்கும் பொழுதுதான் அவர்களின் நல்ல உணர்வின் சுதந்திரம் முழுமை பெறுகின்றது.

வேதனைகளுக்குள்ளும் வெறுப்புகளுக்கும் அவர்கள் உணர்வுகள் ஆட்படும் பொழுது அவர்களது நல்ல உணர்வுகள் அடிமையாகிவிடுகின்றன. வேதனைக்கும் வெறுப்புக்கும் அடிமையாகிவிட்ட மனதால் நல்லவைகளைச் சிந்திக்கவோ செய்யவோ முடிவதில்லை.

ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய சேஷ்டைகளினால் குறும்புகளால் தவறான செயல்களல் தாய் தந்தையரின் நல்ல உணர்வுகளை அடிமைப்படுத்திவிடாதீர்கள்.

தாய் தந்தையரின் வேதனையான உணர்வுகள் உங்களிடத்தில் பதியும் பொழுது அது உங்களுடைய படிப்பைப் பாதிக்கும். பின், அது உங்களுடைய நல்ல எதிர்காலத்தையும் பாதிக்கும்.

ஆகவே, உங்களுடைய செயல் ஒவ்வொன்றும் மற்றவர்களை மகிழச் செய்வதாக இருக்க வேண்டும். உங்கள் செயல் மற்றவரை மகிழச் செய்யும் பொழுது உங்களுக்குள்ளும் மகிழ்ச்சி பெருகி உங்களுடைய நல்ல உணர்வுகளும் சுதந்திரமாகச் செயல்படும்.

தாய் தந்தையரிடம் தினமும் ஆசீர்வாதம் பெறவேண்டும். உங்களுடைய கல்வி அறிவு செழித்து வளரும்.

நீங்கள் பள்ளி வகுப்பறைக்குள் சென்று கீழ்க்கண்ட முறையில் ஆத்ம சுத்தி செய்து கொள்ளும் பொழுது ஆசிரியர் சொல்லித் தரும் பாடங்களை நீங்கள் எளிதில் கிரகித்து அதனின் உட்பொருளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

பாடங்களைப் படிப்பதற்கு முன் அதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டுப் படிக்கத் தொடங்கினால் பாடங்கள் உங்கள் மனதில் நன்கு பதியும்.

அதே போன்று பரிட்சை சமயங்களில் பரிட்சை எழுதுவதற்கு முன் இந்த ஆத்ம சுத்தியைச் செய்து தேர்வு எழுதத் தொடங்கினால் கேள்விகளுக்குண்டான பதில்கள் எளிதில் உங்கள் நினைவுக்கு வந்து அதிகபட்சமான மதிப்பெண்களை நீங்கள் பெறுவீர்கள்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

வகுப்பறையில் அமர்ந்திருக்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் அனைத்தும் எனக்கு எளிதில் புரிந்து என் மனதில் ஆழமாகப் பதிந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் நீங்கள் தியானியுங்கள்.

பாடங்களைப் படிக்க அமரும்பொழுது துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் நான் படிக்கும் பாடங்கள் அனைத்தும் எளிதில் என் மனதில் பதிந்து தக்க சமயத்தில் எனக்கு நினைவுக்கு வர அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.

தேர்வு எழுத அமர்ந்திருக்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் நான் படித்த பாடங்கள் அனைத்தும் நினைவுக்கு வந்து இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விரிவான அழகான பதில்கள் எழுத அருள்வாய் ஈஸ்வரா என்று இந்த உணர்வை ஏங்கித் தியானித்துவிட்டு தேர்வு எழுதத் தொடங்குங்கள்.

இந்த ஆத்ம சுத்திப் பயிற்சியினைப் பின்பற்றி வருவீர்கள் என்றால் பள்ளியிலே முதல் நிலையில் வருவீர்கள். உங்கள் எதிர்காலம் சிறந்து விளங்க இது உதவும்.

தாய் தந்தையர் தன் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் அவர்கள் பலவிதமான துன்பங்களை அனுபவித்தாலும் அதனைப் பொருட்படுத்தாது குழந்தைகளை வளர்க்கின்றார்கள்.

தாய் தான் நமது முதல் குரு. நாம் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது “இது நல்லது.., இது கெட்டது..,” என்று உணர்த்தியவர்கள் அவர்கள் தான்.

தாய் தந்தையர்கள் நம்மை வளர்க்கும் சமயம் நம் மீது செலுத்திய பாச உணர்வுகள் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே இருக்கும்.

உதாரணமாக இரவில் தனித்துச் செல்லும் பொழுது தெரு நாய் நம்மைத் துரத்தினால்அய்யோ.., என்று சொல்வதற்குப் பதில்அம்மா…, என்று ஏங்கிச் சொல்லிப் பாருங்கள்.

துரத்தும் நாய் நின்றுவிடும்.

தாயின் பாச உணர்விற்கு அவ்வளவு சக்தி இருக்கின்றது. நாம் தாய் தந்தையரை முதல் தெய்வமாக எண்ணி வணங்கி முறைப்படி தியானிக்க வேண்டும்.

தாய் தந்தையர் நம்மை அன்புடன் வளர்க்கின்றார்கள். பல சிரமங்களுக்கிடையில் நாம் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கின்றார்கள்.

தாய் தந்தையர் அவர்கள் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்திருப்பார்கள். பல இன்னல்களை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். அந்த உணர்வுகள் அவர்கள் உடலில் பதிந்திருக்கும்.

குழந்தைகளாகிய நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் தாய் தந்தையர் பெறவேண்டும் அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்திட வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தியானிக்கும் பொழுது  அந்தச் சக்தி அவர்களுக்குக் கிடைத்து அவர்கள் உடல்களில் அறியாது சேர்ந்த தீமையான உணர்வுகளைச் செயலிழக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் அவர்களிடம் உள்ள நல்ல சக்திகள் வீரியம் பெறுகின்றது. அவர்கள் உடல் நலத்துடன் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட ஏதுவாகின்றது.

அந்த மகிழ்ச்சியான நிலையில் தாய் தந்தையரின் நல்லாசியை நாம் பெற்று அவர்கள் பலத்தால் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எளிதில் பெற முடிகின்றது.

அதனால் நாம் ஞானவானாகத் திகழ முடியும். இந்த உலகுக்கு எடுத்துக்காட்டாக நாம் வாழ்ந்திட வளர்ந்திட முடியும்.

எமது அருளாசிகள்.