ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2016

நம்மைக் குறை கூறுபவர்களின், இடைஞ்சல் செய்பவர்களின் தீமைகளைத் தடுத்துக் கொள்ள வேண்டிய முறை

நாம் நம் வாழ்க்கையில் நன்மைகளையே செய்திருப்போம். நல்லவைகளையே பேசியிருப்போம். பலருக்குப் பல உதவிகளையும் தர்மங்களையும் நாம் செய்திருப்போம்.

பலருக்குப் பல உதவிகளை நாம் செய்திருந்தாலும் நமக்கும், நம் குடும்பத்தில் குழப்பங்களும் உடலில் நோய்களும் இருந்து அதிக வேதனைகளைத் தந்து கொண்டிருக்கும்.

நன்மைகளையே செய்து வரும் நமக்கு வேதனைகள் ஏன் வருகிறது? எதனால் வருகின்றது?  என்பது பற்றிச் சற்று சிந்திக்க வேண்டும். மனித உணர்வின் சூட்சம செயல்களின் விளைவுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஒருவர் உதவி என்று கேட்டு வருவாரானால் அவர் தன்னுடைய சோகக் கதையை முதலில் உங்களிடத்தில் எடுத்துக் கூறி உங்களுடைய இரக்கத்தைப் பெற முயல்வார்.

நீங்களும் அவருடைய சோகக் கதையைக் கேட்டு அவர் மீது இரக்கம் கொண்டு அவருக்காக வருந்துவீர்கள்.

இவ்வாறு அவருடைய சோககக் கதையை ஆழ்ந்து கேட்கும் பொழுது அவருடைய வேதனையான உணர்வுகள் அனைத்தும் உங்களிடத்தில் பதிகின்றது.

இது போன்ற வேதனையின் உணர்வுகளைத் திரும்பத் திரும்பக் கேட்க நேரும் பொழுது அவை உங்களிடத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

எதனை நாம் சுவாசிக்கின்றோமோ அது “ஓ என்று நம் சுவாசத்தில் கலந்து ஜீவனாகி “ம் என்று நமது உடலாகின்றது. எத்தன்மையான உணர்வை நாம் கவர்ந்தோமோ (சுவாசிக்கின்றோமோ) அத்தன்மையைத் தான் இயக்கமாக “நம் உயிர் இயக்குகின்றது என்பதை நாம் அறிய வேண்டும்.

வேதனையான உணர்வை நாம் கேட்டறிய நேரும் பொழுது அது நம் சுவாசத்தில் கலந்து அந்த உணர்வின் அணு செல்களாக நம் உடலில் விளைந்து விடுகின்றது.

வேதனையால் உருவான அணுக்கள் இந்த உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை இயங்கவிடாமல் நலியச் செய்திடும் நிலையாக அந்த உணர்வுகள் நம் உயிரில் இணைகின்றன.

கீதையில் சொல்லியபடி “நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நியதிக்கேற்ப எந்த வேதனையான உணர்வைப் பதிய வைத்துக் கொண்டோமோ அந்த வேதனையின் நிலையாக நம் உணர்வின் செயல்களும் இருக்கும்.

இதனால் நம்மிடத்தில் மனச் சஞ்சலங்களும் குடும்பத்தில் குழப்பங்களும் உருவாகின்றன. இதை மாற்ற வேண்டுமல்லவா?

ஆகவே, எவர் உங்களைக் குறை கூறினாரோ உங்களுக்கு இன்னல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றாரோ அவரின் உணர்வுகளை மனதில் பதிய வைக்க வேண்டாம்.

குறையான உணர்வுகள் உங்களுக்குள் பதியாமல் இருக்க உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். தீமைகள் நமக்குள் விளையாது தடைப்படுத்திவிடும்.

ஆத்ம சுத்தி செய்தால் அவர்கள் எத்தனை பேசினாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நாம் நமக்குள் கவரும் நிலை வராது.

நாம் உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்யவில்லை என்றால் அவர்கள் எதை எதைக் கெட வேண்டும் என்று எண்ணிப் பேசினார்களோ அந்த உணர்வுகள் நாம் அவர்களை மீண்டும் எண்ண எண்ண அவர்கள் பேசியது அனைத்தும் நமக்குள் உருப்பெற்றுவிடும்.

க, அது நமக்குள் தீங்கினை விளைய வைத்துவிடும். அவர்கள் எண்ணியபடி நம் வாழ்க்கையில் நடந்துவிடும்.

யார் எத்தகைய தீங்குகள் செய்தாலும் அந்தத் தீங்கினை மனதில் வைக்காது நிலைக்காது அவைகளைத் தடைப்படுத்த வேண்டும். இது போன்ற உணர்வின் சூட்சம செயல்களின் வினைகளை அறிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஆகவே, வேதனைகளைப் பார்க்கும் பொழுதோ கேட்டறிய நேரும் பொழுதோ ஆத்ம சுத்தி செய்து வேதனையின் உணர்வுகள் நம்மிடத்தில் சாராது நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

அதன் பின் வேதனைகளை நம்மிடம் கூறுபவரை மனதில் எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவருடைய வேதனைகள் நீங்கி தொழில் வளம் உடல் நலம் குடும்ப நலம், உடல் ஆரோக்கியம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் கண்களை மூடித் தியானிக்க வேண்டும்.

அதே போன்று எவர் ஒருவர் உங்களைக் குறை கூறினாரோ இன்னல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றாரோ அவரை நினைவில் நிறுத்தி “என் பார்வை.., அவரை நல்லவராக்க வேண்டும் என்று அவர் உணர்வு நமக்குள் வராது தடைபடுத்த வேண்டும்.

அவர் என்னை எண்ணும் பொழுது அவருக்குள் நல்ல எண்ணம் வரவேண்டும். அவருக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகள் அகன்றிட வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

நாங்கள் பார்ப்பவர்கள் எல்லோரும் நல்லவராக வேண்டும் என்று இவ்வாறு முறைப்படுத்தி நினைவினைச் செலுத்தி உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காணுகின்றோமோ உடனே நாம் தவறாது ஆத்ம சுத்தி செய்தோம் என்றால் நமக்குள் அந்தத் தீமையின் பதிவுகள் அகல்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் நினைவால் தீமைகளை அகற்றும் உணர்வுகள் நம் உடலில் விளைகின்றது. நம் மூச்சால் பேச்சால் வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்கின்றது. நம் இல்லத்திலும் இந்தப் பூமியிலும் படர்கின்றது.

அதனால் நாம் நம்மைத் தீமையற்ற உடலாகவும் மாற்றலாம். தீமையான உணர்வுகள் நம் உடலில் இணையாது தடுக்கும் சக்தி பெறலாம்.

நமது உயிர் நமது இயக்கத்தின் சக்தியாக இருக்கின்றது. நாம் எண்ணிய குணங்கள் அனைத்தையும் ஜீவ அணுக்களாக மாற்றி அதன் இனப் பெருக்கம் தொடங்க வழி வகை செய்கின்றது.

நாம் உயர்ந்த மகரிஷிகளின் அருங்குணங்களை எண்ணுவோம் என்றால் அதை ஜீவ அணுக்களாக மாற்றி துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தி நம் உடலில் ஜீவ அணுக்களாக விளையத் தொடங்கிவிடுகின்றது.

அந்த ஜீவ அணுக்கள் நம்முள் பெருகப்படும் பொழுது நம் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழும். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை எளிதில் பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.