ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2016

காலையில் விழித்தவுடன் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை

காலையில் எழுந்த உடன் நமது மனம் தெளிந்த நீர் போன்று இருக்கும். தெளிந்த நீரில் எந்தக் கலரைப் போடுகின்றோமோ அதே கலரை அப்படியே அந்த நீர் வெளிக்காட்டும்.

அதே போன்று நமது தெளிந்த மனதில் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை இணைக்கும் பொழுது அன்றைய நமது பிற செயல்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தத செயல்களாகவே இருக்கும்.

நம்மைப் பார்ப்பவர் அனைவரும் மகிழ்ந்திடும் நிலையாக நம்மிடமிருந்து நல் உணர்வுகளாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

எனவே காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தியைப் பத்து முறை செய்து கொண்டால் அன்றைய நாளில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்வதாக இருக்கும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிட்டு ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதன் பின்பு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் சொல் செயல் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் நல்ல எண்ணம் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பவர் அனைவரும் வாழ்வில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு காலையில் எழுந்தவுடன் தினசரி ஏங்கித் தியானித்தோம் என்றால் நமது வாழ்க்கையில் ஏற்படும் எத்தகைய வேதனையான நிலைகள் இருப்பினும் அவைகளை நாம் வென்று வாழ்க்கையில் இன்பமான நிலைகளில் வாழ்ந்து வளர முடியும்.

மனிதர்களிடம் உள்ள உயர்ந்த தன்மை அவர்களிடம் உள்ள ஆறாவது அறிவான சிந்தித்துச் செயல்படும் தன்மை.

ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ஏழாவது தன்மையான ஒளிச் சரீரம் பெறும் தன்மையை வளர்த்துக் கொள்வதே மனிதர்களின் முன் உள்ள பணி.

மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக “என்றும் அழியா ஒளி நிலை பெற வேண்டும் என்ற இலட்சியமே ஓங்கி இருக்க வேண்டும்.

தங்கத்தின் தரத்தை அறிவதற்கு உரைகல் இருப்பது போன்று மனிதனின் செயலை அறிவதற்கு.., “நாம் செய்யும் செயல் நம்மைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்யுமா…,? என்ற எண்ணமே நமக்கு உரைகல்லாக அமைகின்றது.

அப்படிப் பார்த்துப் பார்த்து நாம் செயல்களைச் செய்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மையறியாமலேயே நமக்குள் நஞ்சை விதைத்துவிடும்.

ஆகவே, நாம் எப்பொழுதும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் இணைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஆக, சிறு சிறு துளியாக நீர் சேர்ந்து பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுவது போல துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகள் நம்முள் பெருக்கெடுத்து பேரண்டத்தின் ஆற்றலையும் அறிந்திடும் நிலைக்கு நம்மை உயர்த்தும்.